சென்னை: தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைவதற்கான முயற்சிகள் முன்னிறுத்தியவர் கவர்னர் வித்யாசாகர் ராவ் என்று உண்மை வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, அவரால் கட்சியின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டது ஆகியவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வம் விதித்த நிபந்தனைகள் கவர்னரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இணைப்பு நடந்திருப்பதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் ஒன்றாக செயல்படும்போது, தற்போது பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் உள்ள முன்னாள் அமைச்சர், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு கட்சியில் எத்தகைய அங்கீகாரம் வழங்கப்படும், அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் போன்றவை குழாயடி குடுமிபிடி சண்டையாக பல மாதங்களாக, எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அவரவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். முதல்வர் பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இணைப்பு முயற்சி இறுதியாக வெற்றி பெற்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் பேசுகையில், “அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நல்ல முடிவை நோக்கி முன்னெடுக்கப் பட்டுள்ளது” என்று தர்மயுத்தத்தை பக்கத்தில் கிடந்த கும்டி அடுப்பில், கிடப்பில் போட்டுவிட்டு பேட்டி கொடுத்து பல்லை இளித்தார். இந்நிலையில் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மகராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பையில் அவரது அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு அவசரமாக சென்னைக்கு திரும்பி மோடி உத்தரவுப்படி இருவரையும் இணைத்து வைத்துள்ளதாக தெரிகிறது. ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்தது… இதன் மூலம் கடந்த 6 மாதமாக நீடித்து வந்த அரசியல் பரபரப்புகள் முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே அதிமுக அணிகள் இணைப்பு முயற்சி தமிழகத்தில் நடை பெற்றுக்கொண்டு இருந்தபொழுது விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்க ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பு துவங்கியது. முதலில் ஜல்லிக்கட்டு ஜூலியானாவால் நிகழ்ச்சி களை கட்டியது. பின்னர் அவர் குணம் சரியில்லாததால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சோக நிகழ்வு அரங்கேறியது. இந்நிலையில் நடிகை ஓவியா தன் வெளிப்படையான பேச்சாலும் நேர்மையான செய்கைகளாலும் நிகழ்ச்சியில் ஸ்டார் அந்தஸ்து பெற்று பல முறை எலிமினேஷனில் இருந்து மக்கள் ஆதரவுடன் தப்பினார். இறுதியில், ஆரவ் வுடனான காதல் கமல் ஹாசன் சப்பைக் கட்டு கட்டிய ‘மருத்துவ முத்தம்’ போன்றவை கூட டிஆர்பி ஏற்ற உதவி புரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி டம்மியாகி, ஓவியா புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் அது பொறுக்காத விஜய்டிவி, அதிரடியாக பிந்துமாதவி, சுஜாவாருணி போன்ற கவர்ச்சி நடிகைகளை களமிறக்கி, ஆரவ்வுக்கு போட்டியாக ஹரீஷ் போன்ற ஆணழகர்களையும் ‘கோதா’வில் இறக்கி மக்களின் மூளைகளை மழுங்கடிக்கும் தலையாய பணியையும், ‘மாமா’ வேலையும் செவ்வனே செய்து வருகிறது. ஓவியாவை தொடர்ந்து தற்போது ஆரவ்வும் எலெமினேஷனை நோக்கி நகர்வதால், ஆரவ் வெளியேறிய உடன், பிக்பாஸ் ரசிகர்கள் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு வேண்டுகோள் விடுத்து, ஓ.பி.எஸ். ஈபிஎஸ் ஆகியோரை இணைத்தது போல் ஓவியா ஆரவ்வை இணைத்து வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதாக கப்சா சினிமா நிருபர் தெரிவித்தார். ஆளும் எடப்பாடி அரசும் இது போன்ற தரம்தாழ்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் மக்களை முட்டாளாக்கி, தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும், மத்திய அரசின் சாமானிய மனிதனுக்கு எதிரான சூழ்ச்சிகளை மக்களை மறக்கடிக்கச் செய்து ஒரு வித டாஸ்மாக் போதையிலயே வைத்திருந்து மிச்ச மீதி உள்ள ஊழலில் திளைத்த ஆட்சிக் காலத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

There are no comments yet