டிடிவி தினகரன் அடிக்கடி குறிப்பிடும் ஸ்லீப்பர் செல்கள் யார் யார் என்பதைக் கண்டறிய எம்.எல்.ஏ.-க்களுடன் முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.,க்களுடன் நடைபெறும் இந்தச் சந்திப்பு தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி முதல் நடைபெறுகிறது.
ஆளும் அதிமுகவுக்கு சட்டப் பேரவையில் 135 (பேரவைத் தலைவருடன் சேர்த்து) எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு உள்ளது. இதில், டிடிவி தினகரனுக்கு இப்போது 21 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த ஆதரவால் பெரும்பான்மை எண்ணிக்கையை ஆளும் அதிமுக இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பலத்தைப் பார்க்க முயற்சி: தனது தலைமையிலான அமைச்சரவைக்கு எத்தனை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருக்கிறது என்பதை அறிய கடந்த திங்கள்கிழமையன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் பழனிசாமி.
இந்தக் கூட்டத்தில் சுமார் 80 எம்.எல்.ஏ.,க்கள் வரை மட்டுமே பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், மீண்டும் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எண்ணிக்கையைக் கணக்கிட முதல்வர் முடிவு செய்துள்ளார்.
மாவட்ட அமைச்சர்கள் அழைப்பு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க வர வேண்டுமென ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமைச்சர்கள் அந்த மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள எம்.எல்.ஏ.-க்களையும் தொடர்பு கொண்டு பேசி அவர்களை முதல்வருடன் சந்திக்க வைப்பது சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சரின் பணியாகும். அதன்படி, ஒவ்வொரு மாவட்ட அமைச்சர் தரப்பில் இருந்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட எம்.எல்.ஏ.-க்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஓ.பி.எஸ். அணி மௌனம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்ட போது அவருக்கு 11 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு அளித்து வந்தனர். அணிகள் ஒன்றிணைந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த எம்.எல்.ஏ.-க்களுக்கு எந்த அறிவுரைகளையும் ஓ.பன்னீர்செல்வம் வழங்குவதில்லை.
இதனால், வியாழக்கிழமையன்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்லாமா, கூடாதா என்பது குறித்த தெளிவான அறிவுறுத்தல்களை அவருடன் இருந்த 11 எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் வழங்கவில்லை.
இது குறித்து, ஒரு எம்.எல்.ஏ. கூறுகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர் மட்டுமே ஒரு பேச்சுக்கு எங்களை அழைத்திருக்கிறார். அவ்வளவுதான். தனி அணியாக இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது அறிவுரைகளை அளிப்பார். ஆனால், அணிகள் இணைந்த நிலையில், அவர் எங்களுக்கு தனிப்பட்ட முறையிலான அறிவுரைகளோ, வழிகாட்டுதல்களையோ அளிப்பதில்லை. இதனால், முதல்வர் பழனிசாமி எங்களை எதற்காக அழைத்திருக்கிறார் என்றே தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வர் பழனிசாமி எம்.எல்.ஏ.-க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டு முதல்வரைச் சந்திக்கப் போகிறார்கள் என்பதே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம், டிடிவி தினகரன் அடிக்கடி குறிப்பிடும் ஸ்லீப்பர் செல்கள் வெளியே தெரிவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பகிர்

There are no comments yet