சென்னை/டெல்லி: அதிமுக அணிகள் இணைப்பு, 22 அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் தினகரன் அணி ஆட்சிக்கு எதிராக செயல்படுவது, எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட பரபரப்பான சுழ்நிலையில் தமிழக அரசு நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 22 பேர் தவிர மேலும் பலர் தங்கள் அணிக்கு வர உள்ளனர் என டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

மறுபுறம் திவாகரன் அளித்த பேட்டியில் எடப்பாடி, ஓபிஎஸ், 5 மூத்த அமைச்சர்கள் இல்லாத ஒரு அரசு அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி இன்று அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களது மாவட்ட அமைச்சர்களுடன் தன்னை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தலைமைச்செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் இந்த சந்திப்பு கூட்டத்தை திடீரென தலைமைச் செயலகத்திலிருந்து தனது வீட்டுக்கு எடப்பாடி மாற்றினார்.

இந்தக் கூட்டத்தின் நோக்கம் ஸ்லீப்பர் செல் என்று தினகரனால் கூறப்படும் எம்.எல்.ஏக்களை திருப்திப்படுத்தவே என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். இன்று எடப்பாடி வீட்டில் நடந்த கூட்டத்தில் ஐந்து அமைச்சர்கள் மட்டுமே எம்.எல்.ஏக்களை அழைத்து வந்தனர்.

அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ராஜலட்சுமி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தலைமையில் அந்த அந்த மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அரசு கொறடா ராஜேந்திரன் தலைமையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்தனர். வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு செயற்குழு கூட்டத்திற்கு உறுப்பினர்களை அழைத்து வருவது குறித்தும், எவ்வாறு செயல்படுவது பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னைக்கு அழைத்து வந்து எவ்வாறு தங்க வைப்பது, கையெழுத்து வாங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் 5 மூத்த அமைச்சர்கள் ஊழலில் ஊறித் திளைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

ஏற்கெனவே 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 8 அமைச்சர்கள் உட்பட மேலும் 48 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவு அளித்து உள்ளதாகவும் திவாகரன் தெரிவித்தார்.

ஆனால் இன்று தனியாக டெல்லி சென்ற அமைச்சர் செங்கோட்டையனுடன் பாஜகவின் நிர்மலா சீதாராமன் பேச்சு நடத்தி, தினகரனுடன் தூது செல்ல பணித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை மோடி எதிர்ப்பு நிலை எடுக்காத நிலையில், தினகரனுடன் சமரசம் செய்து செங்கோட்டையனை முதல்வராக்க மோடி முடிவு செய்துள்ளதாகவும். துக்ளக் குருமூர்த்தியை விட்டுவிட்டு ஆர்எஸ்எஸ் ராம்தேவ் தின்காரனுடன் பேச்சு நடத்துவார் என்றும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் ஓபிஎஸ் எடப்பாடி கூட்டணி அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

பகிர்

There are no comments yet