Credit: 

அதிமுக பொதுச்செயலாளராக 2016 டிசம்பர் 31-ல் சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் முதல்வர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று பிப்ரவரி 5-ல் முன்மொழிந்தார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், இரண்டாம் நாளே, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியான நிலையில் அமர்ந்த ஓபிஎஸ் மௌனம் கலைந்து, தர்மயுத்தத்தைத் தொடங்குவதாய் அறிவித்தார். இப்போது மீண்டும் அதிமுகவில் இணைந்து துணைமுதல்வராகப் பதவியேற்றுக்கொண்டதன் மூலம் தர்மயுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.

இடைப்பட்ட காலத்தில் ஓபிஎஸ் நடத்திய தர்ம யுத்தத்தைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது, (மிருகங்களால் சிரிக்க முடியாது. மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியும், நன்றி: ஓபிஎஸ்).

‘மக்கள் விரோத ஆட்சியை விலக்கும்வரை ஓய மாட்டோம், உறங்க மாட்டோம்’ (பிப்ரவரி 16).

‘மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவரும்’ (பிப்ரவரி 23).

‘அதிமுக அணிகள் இணைய வாய்ப்பே இல்லை’ (ஜூன் 6).

‘விஜயபாஸ்கருடைய சொத்துகள் முடக்கப்பட்டது இலாகாபூர்வமான நடவடிக்கை. அதில் உண்மைத்தன்மை இருக்கிறது என்ற நிலையில் எடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே நான் சொல்லியிருக்கின்றேன். அனைத்து நிலைகளிலும் ஊழல் நிறைந்த ஆட்சியாகத்தான் இன்றைக்கு இருக்கிறது; அது எம்ஜிஆர் பெயருக்கும் ஜெயலலிதாவுக்கும் செய்யும் மாபெரும் துரோகம்’ (ஆகஸ்ட் 3).

தற்போதைய ஆட்சியை ஊழல் ஆட்சியென்றவர் ஓபிஎஸ். தற்போது இணைப்பு பேச்சுவார்த்தை முடிந்தபிறகு ஊழல் ஆட்சி நல்லாட்சியாக மாறிவிட்டதா? துரோகிகள் நல்லவர்களாகிவிட்டார்களா? மத்திய அரசின் புலனாய்வு அமைப்பால் விசாரணைக்கமிஷன் அமைத்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றாரே? உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றாரே? இப்போது அவருக்கு மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிஷனில் நம்பிக்கை வந்துவிட்டதா?

ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிக்கமுடியாத நிலையிலெல்லாம் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டவர் ஓபிஎஸ். அதனால் அவர் அந்தப் பதவியில் தொடர்ந்திருக்க ஆசைப்படுகிறார் என்றாலும்கூட அதில் ஒரு நியாயம் இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், இது ஆதாயப்பசி. எனவேதான், ஊழல் ஊழல் என்று ஓலமிட்டுவிட்டுக் கடைசியில் குற்றம் சாட்டப்பட்டவர்களோடு கூட்டுவைத்துக்கொள்ள முடிகிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, சசிகலாவின் குடும்பத்தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஓபிஎஸ் அணியின் கோரிக்கை. இரண்டு கோரிக்கைகளும் நிறைவேறிவிட்டன. எனவே, ஒன்றாகச் சேர்ந்துவிட்டோம் என்று காரணங்களைச் சொல்கிறார்கள் ஓபிஎஸ் அணியினர். ஆனால், முதல்வர் பதவியிலிருந்து விலகிய ஓபிஎஸ், தற்போதைய ஆட்சியின்மீது வைத்த குற்றச்சாட்டுகளைத் திரும்பப்பெற்றுவிட்டாரா? இல்லை எனும்போது ஊழல் ஆட்சியில் அவரும் தொடர்கிறார், அதை ஆதரிக்கிறார் என்றுதானே அர்த்தமாகிறது?

பிப்ரவரி மாதம் அளித்த ஒரு பேட்டியில் நான் சொல்லாத 90% உண்மையை என்னுள்ளேயே புதைத்துவிட்டேன்; அதை வெளிப்படுத்த விரும்பவில்லை என்று கூறியிருந்தார் ஓபிஎஸ். அவ்வப்போது அவர் சொன்ன அந்த பத்து சதவீதமும்கூட இப்போது உண்மையில்லை என்றாகிவிட்டது. யுத்தத்துக்குச் சங்கெடுத்து ஊதிய தருமர் கடைசியில் ‘கௌரவர்’’களோடா கைகோர்ப்பது? தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற முழக்கங்கள் வேறு. அய்யோ பாவம் பாரதியார்!

பகிர்

There are no comments yet