சென்னை: அ.தி.மு.க-வில் நிலவும் உள்கட்சிப் பூசல், அதிகாரப் போட்டி ஆகியவற்றால் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் அ.தி.மு.க-வினர் திணறுகின்றனர். சசிகலா அணியினருக்கு நெருக்கடி கொடுத்துவந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமரசமானதும், ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார் தினகரன்.

கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுபோல தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள அதிருப்தி காரணமாக தினகரனின் ஆதரவு எம்.எல்.எ-க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. எம்.எல்.ஏ-க்களைத் தொடர்ந்து எம்.பி-க்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளது. அப்போதுதான் டெல்லியிலிருந்து நமக்கு அழைப்பு வரும் என்று தினகரன் எதிர்பார்த்து காயை நகர்த்த தொடங்கியுள்ளது. அவர்கள் எதிர்பார்த்தபடி, டெல்லியிலிருந்து தினகரனுக்குச் சாதகமான சிக்னல் கிடைத்துள்ளது. இதனால், தினகரன் தரப்பினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்கள், “கட்சிக்குத் துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ,தி.மு.க-வுக்குச் சிக்கலை ஏற்படுத்திவிட்டார். ஏனெனில், சிறைக்குச் செல்லும் முன் சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி அவரின் கையில் ஆட்சியை ஒப்படைத்தார். அதுபோல துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்து கட்சியை ஒப்படைத்தார்.

ஜெயலலிதா ஏற்படுத்திய ஆட்சியைக் கவிழ்க்க ஓ.பன்னீர்செல்வம் செய்த துரோகத்தை அ.தி.மு.க தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். வெறும் 12 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்ற ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் இந்த ஆட்சிக்கு எதிராக தி.மு.க-வுடன் சேர்ந்து வாக்களித்தார். அப்போது, நாங்கள்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருந்தோம். அதனால், இந்த ஆட்சி தொடர்ந்தது.

சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிலரது தூண்டுதலின்பேரில் மாறிவிட்டார். ஆனால், அனைத்தும் அவரது மனசாட்சிக்குத் தெரியும். சசிகலா இல்லையெனில் எடப்பாடி பழனிசாமி முதல்வரே கிடையாது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலா குடும்பத்தினரின் மூலம் எம்.எல்.ஏ-க்கள் சீட் மற்றும் கட்சிப் பதவிகளைப் பெற்றவர்கள் இன்று அவருக்கு எதிராகப் பேசுவது நியாயமில்லை.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தவர்கள் அந்தப் பதவியிலிருந்து அவரை நீக்கத் துடிக்கின்றனர். இதற்குப் பின்னால் சிலரது தூண்டுதல் உள்ளது. கட்சிக்குத் துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் துரோகம் செய்ய மாட்டாரா. அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் அடகு வைக்க முயற்சி செய்யும் சிலரது எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. அவர்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் மன்னிக்காது.

ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்துவிட்டால் சின்னம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் டெல்லி சென்றவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. சின்னத்தையும் கட்சியையும் அழிக்கவே டெல்லி விரும்புகிறது. ஆனால், தங்களுடைய சுயலாபத்துக்காக அதையும் செய்ய சிலர் தயாராகிவிட்டனர். அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் அ.தி.மு.க-வை அழிக்கப்பார்க்கின்றனர். அதை தினகரன் தடுத்துவருகிறார்.

குறிப்பாக, மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்த்த எம்.பி-க்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடம், ‘உங்களுடைய ஆட்சியே நீடிக்காத நிலையில் இருக்கிறது. தினகரனுக்கு தினந்தோறும் ஆதரவு அதிகரித்துவருகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு குறைந்துள்ளது என்ற மத்திய உளவுத்துறை மூலம் எங்களுக்கு ரிப்போர்ட் வந்துள்ளது. இதனால் தினகரனிடம் சமரசம் செய்து ஆட்சியைக் காப்பாற்றுங்கள். தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது, தி.மு.க-வுக்குத்தான் சாதகமாக அமையும், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து, மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால் தி.மு.க வெற்றி பெற வாய்ப்புள்ளது. தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டியைப் பெற்றுவிட்டால் என்ன செய்யப்போகிறீர்கள். முதலில் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் குறையுங்கள். இல்லை அவரிடம் சமரசம் செய்து ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றுங்கள்’ என்று டெல்லி மேலிடம் சொல்லி அனுப்பியுள்ளது.

தூக்கிய போர்க்கொடியை வெள்ளைக்கொடியாக்க தினகரன் தரப்பு முன்வைக்கும் 3 கோரிக்கைகளால் முதல்வர் எடப்பாடியார் தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள். தினகரன் தரப்புக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை உறுதி செய்து கொண்ட டெல்லி இணைப்புக்காக சென்னை பிரமுகர் மூலமாக பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் தினகரன் கறப்பு 3 கோரிக்கைகளை கறாராக முன்வைத்துள்ளதாம். அதாவது, தற்போதைய அமைச்சர்கள் 11 பேரை நீக்கிவிட்டு நாங்கள் சொல்கிற நபர்களுக்குத்தான் அமைச்சர் பதவி; முதல்வர் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்; அதிமுக கட்சியும் எங்கள் வசம் இருக்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கைகள். டெல்லியின் பிரதிநிதியாக சென்னை பிரமுகர் பேசுவதால் எடப்பாடியார் தரப்பு எதுவும் மறுப்பு பேசாமல் மவுனமாக இருந்து வருகிறதாம்.

தினகரன் தரப்பு வலியுறுத்துவதைப் போல 11 அமைச்சர்களை நீக்கிவிட்டால் ஆட்சி கவிழ்வது நிச்சயம் உறுதி. ஏனெனில் அந்த அமைச்சர்களின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்னொரு பக்கம் போர்க்கொடி தூக்குவார்கள்.. அதனால் ஆட்சியே இல்லாமல் போய்விடும் என்பது எடப்பாடியார் தரப்பு வாதம்.

ஆனால் தினகரன் தரப்போ, எங்களுக்கு ஆட்சியை விட கட்சிதான் முக்கியம். அதிமுக என்கிற கட்சி எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலே போதும். ஆட்சி எங்களுக்கு இப்போதைக்கு முக்கியமே இல்லை என்கிறதாம். இப்படி பேச்சுவார்த்தை நடப்பதை தெரிந்து கொண்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இப்போது தினகரன் பக்கம் சாய தொடங்கிவிட்டனராம்.

ஓபிஎஸ் அணியில் நிச்சயம் தமக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நினைத்த சீனியரும் பல்ஸ் பார்த்திருக்கிறார். ஆனால் உங்க ஆதரவுக்கு நன்றி.. ஆனால் இப்ப வீட்டுக்கு வந்தீங்கன்னா பதவிக்காக வந்தீங்கன்னு உங்களுக்குத்தான் கெட்ட பெயர் வரும். அமைதியாக இருங்க.. நிச்சயம் உங்களுக்கு எதிர்பார்க்கிறது கிடைக்கும் என தெம்பூட்டியிருக்கிறார்களாம்.

With inputs from Vikatan and OneIndia

 

பகிர்

There are no comments yet