சென்னை : நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 9ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்து, மாநில அரசின் துணையோடு அதனை கட்டாயமாக மாணவர்கள் மீது திணித்திருக்கிறது. தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் பறிபோவது நம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பள்ளிக் கல்வியை வெவ்வேறு பாடத்திட்டங்கள் வழியாக மாணவர்கள் பயின்று வரும் சூழ்நிலையில் சிபிஎஸ்இ என்ற மத்திய அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டும் பெரும் பயன் அமையும் வகையில் நீட் தேர்வுக்கான கேள்வித் தாள்கள் அமைந்துள்ளது. மாநில அரசின் பாடத்திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் எவ்வளவு திறமையும், அறிவும் கொண்டிருந்தாலும் நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் குழுமூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஏழை மாணவி அனிதா +2 பொதுத் தேர்வில் பல பாடங்களில் 200க்கு 200 பெறுறு தேர்ச்சியடைந்துள்ளார். ஆனாலும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கல்வி வாய்ப்பினை இழந்த அவலத்தையும், மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்ட துயரத்தையும் கண்டு தமிழகம் வெதும்பி வருகிறது.
மாநில அரசின் உரிமைகளை பறித்து ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ உயர்கல்வி வாய்ப்புகளை தகர்க்கும் மத்திய அரசின் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த முடிவில் ஜெயலலிததா உறுதியோடு இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகும் நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. தமிழ்ச்சமூகம் போராடிப் பெற்ற சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நம்முடைய இந்த உணர்வுகளை மத்திய அரசுக்கு புரிய வைத்திடும் வகையில் அதிமுக அம்மா அணி சார்பில் செப்டம்பர் 9ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், அதிமுகவினர், பெற்றோர் மற்றும பொதுமக்கள் பெருந்திரளான அளவில் பங்கேற்க வேண்டும். நம் உணர்வுகளை வெளிக்காட்டிட இதனை செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன், என்று தினகரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
தினகரனின் இந்த அறிவிப்பு மோடிக்கு நேரடியாக விடப்பட்ட சவாலாகவே அரசியலை நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் தனது பலத்தை காண்பிக்கவும் இது தினகரனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இதனால் டெட் பாடி ஓபிஎஸ் கூட்டணி கிலியில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks