சென்னை: தினகரன் அணியில் உள்ள எம்எல்ஏக்களில் சிலர் எடப்பாடி பழனிசாமியின் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இரண்டு அணியாக உடைந்து பின்னர் அது 3 அணியாக பிரிந்தது. இந்தநிலையில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன் தனியாக பிரிந்தார். அவருக்கு ஆரம்பத்தில் 19 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அது 21 ஆக உயர்ந்தது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதுவை ரிசார்ட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பலர் தங்களது வீடுகளுக்குச் சென்றதாக கூறப்பட்டது. அதில் உள்ள சிலரிடம் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்எல்ஏக்கள் பேசியதாகவும் அப்போது ஆட்சியை கவிழ்க்க நாங்கள் விருப்பவில்லை. தற்போது டிடிவி தினகரன் அணியில் இருந்தாலும் எடப்பாடி அரசு கவிழ விடமாட்டோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் வெளியில் சென்றிருந்த எம்எல்ஏக்களை உடனடியாக புதுவை ரிசார்ட் வரும்படி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் அவர்கள் நேற்று காலையில் புதுவை திரும்பியுள்ளனர். புதுவை சென்றாலும், அவர்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள மூத்த அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் தினகரன் அணியில் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேர் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஆனால் இதை தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் மறுத்தார்.

ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அணியினரோ, தங்களுக்கு 9 எம்எல்ஏக்கள் ஸ்லீப்பர் செல்களாக தினகரன் அணியில் உள்ளனர். தேவைப்படும்போது அவர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். தற்போது அவர்கள் அங்கேயே இருக்கட்டும் என்று விட்டு வைத்துள்ளோம். இதனால்தான் நாங்கள் அரசு கவிழும் என்ற பீதியடையவில்லை. அச்சப்படவில்லை. மெஜாரிட்டி குறித்து எந்த கவலையும்படவில்லை. எங்கள் பணிகளை தொடர்ந்து வழக்கம்போல கவனிக்கத் தொடங்கிவிட்டோம் என்கின்றனர். இதற்கு முன்னர் தினகரன்தான், தங்களுடைய சிலிப்பர் செல்கள் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருப்பதாக கூறி வந்தார். ஆனால் எடப்பாடி அணி நடத்தும் கூட்டத்தில் 110 எம்எல்ஏக்கள் தொடர்ந்து கலந்து கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் தினகரன் அணியில் தங்கள் சிலிப்பர் செல்கள் இருப்பதாக எடப்பாடி அணி கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Credit: Dinakaran

There are no comments yet