Credit: Vikatan

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தனிக்கூட்டம் போட்டும், எடப்பாடி பழனிசாமி அணிக்கு மெஜாரிட்டிக்குத் தேவையான 117 எம்.எல்.ஏ-க்களை இழுக்கத் திணறி வருகிறார்கள். பொதுக்குழுவுக்கு முன்னர் இன்னும் கூடுதல் எம்.எல்.ஏ-க்களை தனது பக்கம் சேர்க்க டி.டி.வி.தினகரன் தீவிரம் காட்டி வருகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க பொதுக்குழுவை செப்டம்பர் 12-ம் தேதி சென்னை வானகரம் ஶ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் கூட்டியுள்ளர். அதை முன்னிட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கூட்டி இருந்தார். இந்தக் கூட்டத்தில் 108 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராஜ் இதில் கலந்து கொள்ளவில்லை. அவர் , ‘உடல்நலக் குறைவு காரணமாக வரவில்லை’ என்று கட்சி அலுவலகத்துக்குத் தகவல் சொல்லி இருந்தார். எனவே, நேற்றைய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு இருந்தது. 

இந்நிலையில், எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், ”அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அவர் மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளையும் முழுமனதுடனும் உள்ள உறுதியுடனும் ஏற்றுக்கொள்வோம்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ”நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். உங்கள் தொகுதி பிரச்னையை மாவட்ட அமைச்சர்கள் தீர்த்துவைப்பார்கள். அதிலும் ஏதாவது பிரச்னை என்றால், மூத்த அமைச்சர்களிடம் சொல்லுங்கள். நாம் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம்” என்று உருக்கமாகப் பேசி இருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் 109  எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு எடப்படி பழனிசாமிக்கு இருப்பதாகத் தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர்கள் நான்கு பேர் மட்டும் வரவில்லை. அவர்கள் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆவார்கள். மொத்தமுள்ள 135 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் (சபாநாயகரைச் சேர்த்து) 21 பேர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கிறார்கள். மூன்று கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் தங்களது ஆதரவு எடப்பாடிக்கா, தினகரனுக்காக என்று இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. சபாநாயகர் ஓட்டோடு சேர்த்து 111 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு மட்டுமே எடப்பாடி அணிக்கு  உள்ளது என்று தெரியவந்துள்ளது. எனவே, மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடிக்கு இன்னும் ஏழு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தேவை. எனவே, ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையே இன்னும் நீடிக்கிறது.

சென்னையில் எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடத்திய அதே நேரத்தில், புதுவையில் தங்கி இருந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. அதில், பழனியப்பன் எம்.எல்.ஏ. தவிர மற்ற 20 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ கூறுகையில், ”கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து 21 எம்.எல்.ஏ-க்கள் இங்கு இருக்கிறோம். எங்கள் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது. சொந்த விஷயங்களுக்காகச் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுப் புதுவை விடுதிக்குத் திரும்பிவிட்டோம். இன்னும் இரண்டு நாள்களில் தமிழக ஆளுநர் எங்களை அழைத்துப் பேசுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இல்லையென்றால், அடுத்தகட்டமாக அதிரடி நடவடிக்கையில் இறங்குவோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவரை மாற்றுவதுதான் இப்போது அ.தி.மு.க பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி. அவர், சென்னையில் கூட்டியது கண்துடைப்பு கூட்டம். மெஜாரிட்டி எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பக்கம் இருப்பதாகக் காட்டிக்கொள்ள நினைத்தார். எவ்வளவு தில்லுமுல்லுகள் செய்தும் அவர்களால் மெஜாரிட்டிக்குத் தேவையான எண்களை வெளியே சொல்ல முடியவில்லை. எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை பற்றி எடப்பாடி சொல்லும் கணக்கு தவறு. சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்குச் சென்னை சென்று விளக்கம் அளிப்போம்” என்றார்.

பெரம்பூர் வெற்றிவேல் எம்.எல்.ஏ  கூறுகையில், ”புரட்சித் தலைவி அம்மா உயிரோடு இருந்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்துக்குள் வந்திருக்காது. பதவியைத் தக்கவைத்துக்கொள்ள படுபாதக செயலைச் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மாணவி அனிதா சாவுக்குத் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி டீம் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். இரும்புக் கோட்டைபோல எங்கள் டீம் வலுவாக இருக்கிறது. 19 எம்.எல்.ஏ-க்களைத் தாண்டி அந்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் எடப்பாடி கூட்டிய கூட்டத்தில்கூட எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலர் இருந்தனர். அந்த, ‘ஸ்லீப்பர் செல்’ எம்.எல்.ஏ-க்கள் எங்கள் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண் அசைவுக்காகக் காத்திருக்கிறார்கள். இப்போது எங்களுக்கு 35-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருக்கிறது. கட்சியைத் தீயவர்களிடம் இருந்து காப்பாற்றத்தான் ஒன்றுசேர்ந்துள்ளோம். கட்சி எங்களிடம்தான் உள்ளது” என்றார்.

எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தகவல் வெளியானதை அடுத்து, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.கஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  இந்நிலையில், தி.மு.க-வைப்போலவே டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ-க்களும் இன்னும் இரண்டு நாள் கால அவகாசம் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்புக்குக் கெடு வைத்துள்ளனர். இல்லை என்றால், அவர்கள் டெல்லி சென்று ஜனாதிபதியிடம் முறையிடவும் திட்டம் வைத்துள்ளனர். மேலும், நீதிமன்றம் செல்வது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி அணியும், ஆட்சியைக் கலைக்க டி.டி.வி.தினகரன் அணியும் எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்கத் தீவிரம் காட்டி வருகின்றன.

துணை முதல்வர் பன்னீர் செல்வமோ இதையெல்லாம் கவனித்து, ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், இவர்கள் சண்டையால் மோடி என்னை முதல்வராக்குவார் என்ற எண்ணத்தில் அமைதியாக அடக்கி வாசிக்கிறார்.

பகிர்

There are no comments yet