முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் முதல்வராக பதவியேற்றார். அப்போது அவர் நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ். அணியின் 12 பேர் தவிர, அதிமுக.வின் இதர எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். ஆகஸ்ட் 22-ம் தேதி டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ‘முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக’ தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து எடப்பாடி அரசு கவிழுமா? என்கிற கேள்வி எழுந்தது.

ஆனால் தன்னை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களிடம், ‘அதிமுக.வில் நடப்பது உள்கட்சிப் பிரச்னை. அதில் நான் எப்படி தலையிட முடியும்?’ என கவர்னர் கேட்டதாக தகவல் வெளியானது. இந்தச் சூழலில் டிடிவி.தினகரன் தரப்பினர் கடந்த 22-ம் தேதி கொடுத்த மனுவை நினைவூட்டும் விதமாக இன்று (செப். 7) மீண்டும் கவர்னரை ராஜ்பவனில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் டிடிவி.தினகரனுடன் 7 எம்.பி.க்களும், 3 எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர். அவர்களில் ரத்தினசபாபதி (அறந்தாங்கி எம்.எல்.ஏ), கலைச்செல்வன் (விருத்தாசலம் எம்.எல்.ஏ.), கருணாஸ் (திருவாடனை எம்.எல்.ஏ) ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுமே கடந்த 22-ம் தேதி கவர்னரை சந்தித்தவர்களின் பட்டியலில் இடம் பெறாதவர்கள்! அதாவது, புதிதாக டிடிவி.தினகரன் அணிக்கு திரும்பியிருப்பவர்கள். இவர்களும் தங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் மனு கொடுத்தனர். எனவே கவர்னரிடம் மனு கொடுத்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 22 ஆனது.

ஆனால் இவர்கள் கவர்னர் மாளிகை சென்ற அதே நேரத்தில், கடந்த முறை மனு கொடுத்த 19 பேரில் ஒருவரான கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். அவர் விரைவில் கவர்னரிடம் கொடுத்த மனுவை வாபஸ் பெற வாய்ப்பிருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆகிறது. இதன் மூலமாக அதிமுக.வின் 135 எம்.எல்.ஏ.க்களில் 114 பேர் (சபாநாயகர் உள்பட) மட்டுமே எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

எனவே உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடும்படி கவர்னரிடம் டிடிவி.தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. பகல் 1 மணியளவில் கவர்னரை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த டிடிவி.தினகரனிடம் இந்த சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது…

‘எடப்பாடி பழனிசாமி அணியினர் கடந்த 5-ம் தேதி நடத்திய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின் மூலமாகவே அவர்களுக்கு மெஜாரிட்டி இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. இன்று ஒருவரை குதிரை பேரம் நடத்தி தூக்கிச் சென்றிருக்கிறார்கள். துரோகிகளான எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் நீக்குவதுதான் எங்கள் நோக்கம்.; என்றார் டிடிவி.

அவரிடம், ‘உங்கள் அணியில் இருந்த ஜக்கையன், இன்று இபிஎஸ் அணிக்கு தாவியிருக்கிறாரே?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு டிடிவி.தினகரன், ‘அதுதான் குதிரை பேரம் என்று கூறினேன். ஜக்கையன் தனக்கு தலைமை நிலைய செயலாளர் பதவி கேட்டு, நேற்று இரவுகூட பேசினார். இன்று ரயிலில் வந்து இறங்கி அங்கு போயிருக்கிறார் என்றால், அதற்கான காரணத்தை நான் சொல்லத் தேவையில்லை. இது போன்ற குதிரை பேரம் நடக்காமல் இருக்கவே, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோருகிறோம்.

எம்.எல்.ஏ. பதவியிழப்பு ஆகும் என சிலர் மிரட்டியதாக அவரே கூறினார். அப்போதே, ‘போறதா இருந்தா போங்க. உரிய நேரத்தில் முடிவு எடுத்துக்கலாம்’ என கூறினேன். பாதாளம் வரை எது பாயுமோ, அது ஜக்கையன் மீது பாய்ந்துவிட்டதோ என நினைக்கிறேன். ஆனாலும் ஒருவர் அங்கே சென்ற நிலையில் 3 பேர் இங்கே வந்திருக்காங்க.

கருணாஸை நான் கூப்பிடலை. அவங்க 3 பேரும் (கூட்டணி எம்.எல்.ஏ.க்கள்) மூவேந்தரா தனியா இருக்கட்டும் என நினைத்தேன். ஆனால் அவராக வந்துவிட்டார். இன்னும் ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் அங்க இருக்காங்க. எந்த நேரத்தில் எதைச் செய்யணுமோ, அதை செய்வாங்க. கவர்னரை சந்தித்தபோது, துரோகிங்க 2 பேரை மாற்ற கோரிக்கை வைத்தோம். அதாவது, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடும்படி கேட்டோம். ‘சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக’ எங்களிடம் கவர்னர் கூறினார்.

இபிஎஸ், ஓ.பி.எஸ்.ஸை நீக்குவதில் உறுதியாக இருக்கிறோம். அவங்களை ஆதரிக்கும் யாரும் மக்களை சந்திக்க முடியாது. அரியலூரில் இறந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த நான் சென்றேன். ஆனால் இபிஎஸ், ஓபிஎஸ்.ஸால் அங்கு செல்ல முடியவில்லை. எனது 53 வயதில் இப்போதுதான் அரசு கொடுத்த நிதியை ஒரு குடும்பம் வேண்டாம் என கூறுவதை கேள்விப்படுகிறேன்.

அதுவும் ஒரு கூலித் தொழிலாளியின் குடும்பம் அந்த நிதியை வேண்டாம் என்று சொல்கிறது என்றால், இவர்கள் மீது எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என பார்த்துக் கொள்ளுங்கள்! ஆட்சியில் இருப்பவர்களுக்கும் எனக்கும் இடையிலான வித்தியாசத்தை அந்த மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த துரோக முதல்வரை நாங்கள் நீடிக்க விடமாட்டோம்’ என்றார் டிடிவி.தினகரன்.

பகிர்

There are no comments yet