சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலர் தினகரன் நண்பகலில் சந்திக்க உள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்திருந்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை என கூறிவிட்டார் ஆளுநர். இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமும் எதிர்க்கட்சிகள் மனு கொடுத்திருந்தன. இந்நிலையில் தமது ஆதரவு 10 எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று பிற்பகல் தினகரன் சந்திக்க உள்ளார். இச்சந்திப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற தினகரன் தரப்பு மீண்டும் வலியுறுத்தும் என தெரிகிறது.

இது குறித்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது:முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து கொண்டு, தினகரனை முழுமையாக கட்சியில் இருந்தும், ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால், தினகரன் ரொம்பவும் அதிர்ச்சிடைந்துள்ளார். எப்படியாவது, தன்னை அரசியலில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று போராடுகிறார். சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், 100க்கும் குறைவான எம்.எல்.ஏ.,க்களே கூட்டத்துக்கு செல்ல வேண்டும். அப்படி சென்று, அது செய்தியாகும் பட்சத்தில்தான், பழனிச்சாமி அரசு மைனாரிட்டி அரசாக செயல்பட்டுக் கொண்டிருப்பது அப்பட்டமாக வெளியே தெரிந்து, அது, அரசியல் ரீதியில் தனக்கு பெரும் பலனைக் கொடுக்கும் என்று, தினகரன் நம்பிக் கொண்டிருந்தார்.

அதை வைத்து, பழனிச்சாமி பக்கம் இருக்கும் மற்ற எம்.எல்.ஏ.,க்களும் தன் பக்கம் வருவர் என்றும் தினகரன் கணக்குப் போட்டு காத்திருந்தார். ஆனால், நடந்ததோ, தலைகீழ். அதனால், தனது எதிர்காலம் கேளிவிக்குறியாகி இருப்பதாகக் கருதுகிறார். அதனால், எதுவும் செய்து, அரசியலில் தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்காக, பழனிச்சாமி பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் கொண்டு வருவதற்கு சிலருக்கு அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார்.

அந்த அடிப்படையில், தினகரன் ஆதரவு தலைவர்கள் பலரும், பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு தொடர்ந்து ஆசை வார்த்தைகள் மூலம், வலை விரித்துள்ளனர். தலைக்கு ஆறு கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டு வருகிறது. ஆனால், அந்த எண்ணிக்கையையும் கடந்து ஆசைப்படுகின்றனர். சில எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் தற்போது, ஆறுக்கு தலையாட்டி உள்ளனர். அவர்கள் தினகரன் பக்கம் போனால், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையில் ஒன்றிரண்டு கூடும். ஆனால், தமிழக அரசியலில் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படப் போவதில்லை. எனவே என்னையும் எடப்பாடியையும் கையை பிடித்து சேர்த்து வையுங்கள் என்று கேட்கவே இன்று ஆளுநரை சந்திக்கிறார் என்றார்.

 

 

பகிர்

There are no comments yet