ஜல்லிக்கட்டு ஜூலியை வெளியே விட்டால் நீட் போராட்டம் தீவிரமடையும் என்று பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொன்ன டெட் பாடி – கமல் அதிர்ச்சி தகவல்

552

சென்னை: “நீட்” தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்குப் பிறகு தமிழகம் முழுவதும் மீண்டும் “நீட்” தேவையில்லை எனக் கோரி போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன. “நீட்” தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரும் இரண்டு அவசர சட்ட முன்வரைவுகளைத் தயாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு ஒப்புதல் வழங்கும் வாய்ப்பு குறைவு என்று மத்திய அரசு கூறியது. இதையடுத்து மத்திய அரசின் யோசனைப்படி, நீட் தேர்வு முறையில் இருந்து நடப்பு கல்வியாண்டில் மட்டும் விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பதாக தொடக்கத்தில் மத்திய அரசு கூறியது. ஆனால், பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சட்ட வரைவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின்போது, “தமிழக அரசு உத்தேசித்துள்ள “நீட்” விலக்கல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது” என்ற தனது நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்தியது. இதனால் தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த தீர்ப்பால் தமிழகத்தில் பிளஸ் டூ முடித்து விட்டு அதிக மதிப்பெண் பெற்றபோதும், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் சேர முடியாத மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக கருத்து எழுந்தது. இந்தப் பின்னணியில்தான் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அனிதா, பிளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண் எடுத்திருந்தார். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்பதால், அனிதா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்ற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. தமிழகத்தில் சொந்த மாநிலத்தில் மாநில பாட முறைப்படி படித்தவர்களின் நலனுக்காக கட்டப்பட்ட 22 மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் சேரும் வாய்ப்புக்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ளதால் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு பிரிவினர் முறையிடுகின்றனர். நீட் தேர்வுக்கு தயாராகும் அளவுக்கு மாநில பாட திட்டத்தின் தரம் குறைவாக இருப்பதாக மாநில அரசு கருதினால், அதற்குரிய நடவடிக்கையை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று சில கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுபோன்ற சூழலில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மீண்டும் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன. ஆளும் பிரிவினைவாத அதிமுக சில்லறை அரசு இந்தப் போராட்டத்தை கண்டு அஞ்சுகிறது. ஸ்டாலின் உள்ளிட்ட மற்ற கட்சிகள், திரைப்பட இயக்குனர்கள் வீதிக்கு வீதி மேடை போட்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை இட்டு வருகின்றனர். இந்நிலையில் மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்ட புகழ் ஜூலியானா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஜூலியானாவுக்காக டிஆர்பி ரேட் எகிரியது. இதனால் அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியது. ஓவியா விவகாரத்தில் பொய் மேல் பொய் சொல்லியும், அவரது சகிக்க முடியாத செயல்பாடுகளுக்காகவும் மக்கள் ஜூலி மீது வெறுப்பை கக்கினர். பொய் பேசியதற்காக கமலிடம் குட்டு வாங்கியும் திருந்தாமல் ஜூலியானா ஓவர் ஆக்ட் செய்தார். எப்படா சான்ஸ் கிடைக்கும் என்று காத்திருந்த மக்களுக்கு இன்ப செய்தியாக எவிக்ஷன் லிஸ்டில் ஜூலி வந்தார். மக்களால் வெளியேற்றப்பட்ட ஜூலி முகத்தில் துணி கட்டியவாறே பொது இடங்களில் சென்று வந்தார். பொது இடங்களுக்கு பயந்து பயந்து சென்று வந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிங் ஆப் காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜூலியானா கலந்து கொண்டார். இந்நிலையில் பிக்பாஸில் விருந்தாளிகளாக ஜூலி,ஆர்த்தி ஆகியோர் வருகை தந்து ஒரு வாரம் கடந்திருக்கும் நிலையில் மீண்டும் தொடர்வார்களா அல்லது வெளியேற்றப்படுவார்களோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் வெளியேற்றப்பட்ட ஜூலி, ஆர்த்தி ஆகியோர் விருந்தாளிகளாக மீண்டும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஒரு வாரம் இருப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்த விஷயம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்களுக்கு தெரியாது. இந்த ஒரு வார காலமும் கொடுக்கப்படும் டாஸ்குகளை ஹவுஸ்மேட்களுடன் சேர்ந்து செய்து வழக்கமாக போட்டியாளர் போல் இருந்து வந்தனர். இருவரும் வெளியேற்றப்பட்டு தற்போது மீண்டும் வந்திருப்பதால் அவர்கள் நடத்தையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு இருக்கிறதா என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து ஜூலி வழக்கம்போல் பொய் பேசுவதும், தான் செய்த தவறை உணர்ந்துவிட்டதாகவும், இங்கு இருந்தபோது தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் குறித்தும் ஒவ்வொரு போட்டியாளர்களிடம் புலம்பித் தீர்த்து வந்தார். இதனிடையே ஆர்த்தியும் வழக்கம்போல் தனது பாணியில் எல்லோரிடமும் சீன் போடுவது, ஜூலியை சீண்டி வெறுப்பேற்றுவது என இருந்தார். எதற்காக இவர்கள் இருவரும் மீண்டும் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர், இதன் பின்னணி எதுவும் உள்ளதோ? என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் இவர்கள் இருவரும் ரீஎன்ட்ரி ஆகி வழக்கம்போல் பிக்பாஸ் வீட்டில் அனைத்து விஷயங்களையும் செய்ததை தவிர உருப்படியாக வேறொன்றும் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து இவர்கள் வந்து ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், தற்போது இவர்கள் வெளியேற்றப்படுவார்களா அல்லது தொடர்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் அவர் மீண்டும் வரவழைக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் தெளிவுபடுத்தப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் மீண்டும் ஏன் பிக்பாஸ் வீட்டில் அனுமதிக்கப்பட்டார் என்ற உண்மையை உங்கள் நியூஸ் கப்சா நிருபர் கண்டறிந்துள்ளார். அது, ஓபிஎஸ் சசிகலா ஆகியோரை அவதூராக பேசி சத்தம் போட்டதால் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிபெற்றது. அதே போல் ஒரு 40 பக்க நோட்டில் உலகத்தில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளையும் ஜூலி குறிப்பெடுத்து, அனிதா மரணத்திற்கு நியாயம் கேட்டு நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க இருந்ததாக தெரிகிறது. இதை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட அதிமுக ஸ்லீப்பர் செல்கள் தங்கள் ஆட்சியை காத்துக் கொள்ள அம்மாவிடம், மோடியிடம் மண்டியிடுவது போல் விஜய் டிவியிடம் மண்டியிட்டு ஜூலியை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது.

பகிர்

There are no comments yet