னகரன் தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் நடவடிக்கைகளால், முதல்வர் பழனிசாமி அரசுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. எம்எல்ஏக்களின் ஆதரவை அதிகரித்து ஆட்சியை தக்க வைக்க ஆளும்கட்சியினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

அதிமுகவில் இரு அணிகள் இணைந்தபின், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் முயற்சியை எடுத்தனர். இதனால், தற்போது குழப்பம் அதிகரித்துள்ளது. அதே நேரம் தினசரி ஒரு அதிரடி நிகழ்வும் ஏற்பட்டு வருகிறது. தினகரனுக்கு ஆதரவாக இருந்த 19 எம்எல்ஏக்களின் பலம் சமீபத்தில் 21 ஆக உயர்ந்தது. சசிகலாவால் தேர்தலில் ‘சீட்’ பெற்றவன் என்று கூறிய கூட்டணி கட்சி எம்எல்ஏவான கருணாஸ், தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டார். இதனால், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. புதிய எம்எல்ஏக்கள் மூவருடன் தினகரன் ஆளுநரை சந்திக்க செல்லும்போது, அவரது தரப்பில் இருந்து ஜக்கையன் வெளியேறி, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவளித்தார். ஒருவர் போனாலும், கருணாஸ் வந்ததால் எண்ணிக்கையை தக்க வைத்துள்ளது தினகரன் தரப்பு. கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 109 பேர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,‘‘தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேர் ஆதரவு தருவார்கள்’’ என்றார்.

அதில் ஒருவர் வந்துவிட்ட நிலையில், ‘நேரம் வரும்போது எங்கள் ஆதரவு ‘ஸ்லீப்பர் செல்’ எம்எல்ஏக்கள் வெளி யில் வருவார்கள்’ என மீண்டும் கூறி முதல்வர் பழனிசாமி தரப்பை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளார் தினகரன்.

அதே போல், திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளன. தொடர்ந்து சில தினங்களில் மீண்டும் ஆளுநரை சந்திக்க முடிவெடுத்துள்ளனர். முன்பு 11 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றபோது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்ட நிலையில், 22 பேர் முதல்வருக்கு எதிராக உள்ளதால் முதல்வர் பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.

உண்மையில் அ.தி.மு.க-வில் இரு அணியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை  இரு அணியின் தலைவர்களும் கூறவில்லை. இது போதாது என்று திவாகரனும், தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி அணியில் இருப்பதாகச் சொல்லியுள்ளார். இந்தக் குழப்பங்கள் அ.தி.மு.க-வின் ஆட்சிக்கு கத்தியாகவே உள்ளது. இந்நிலையில், வரும் 12-ம் தேதி அன்று அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெறும் என எடப்பாடி தரப்பு அறிவித்துள்ளது. ஆனால், இதை முறியடிக்கும் அனைத்து வேலைகளையும் தினகரன் அணியினர் மேற்கொண்டுவருகின்றனர்.

பொதுக்குழுவில் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் இருப்பதைக் காட்டிவிட வேண்டும் என்ற திட்டத்தில் எடப்பாடி அணியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவரை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பேசிவருகிறார்கள். எடப்பாடி அணியினரின் வேகத்தை முறியடிக்க, தினகரனே ஆளுநரை சந்திக்க முடிவுசெய்தார். அப்போதே, தினகரனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தினகரன் அணியின் எம்.எல்.ஏ ஜக்கையனை  தங்கள் பக்கம் இழுத்து அதிர்ச்சி கொடுத்தது எடப்பாடி அணி. ஆனால் கலங்காத தினகரன், ஆளுநரை குறித்த நேரத்தில் சந்தித்து, ‘முதல்வர் மீது எம்.எல்.ஏ-க்களுக்கே நம்பிக்கையில்லை என்று சொல்லியிருப்பதால், முதல்வரை மாற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து சாதகமான பதில் தினகரனுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதவிர, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்துகின்றனர். திமுக எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கைக்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி வந்தால் சிக்கல் ஏற்படும்.தற்போது தேனி மாவட்டத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரில் ஒருவரை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பு கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் தென் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்காக, மாவட்ட அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் முதல்வர் பழனிசாமிக்கு ஜக்கையன், தனியரசு ஆகியோரை சேர்த்து 113 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. மேலும் குறைந்த பட்சம் 7 பேரையாவது தங்கள் பக்கம் கொண்டு வந்துவிடுவதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு, தினகரன் கொடுத்த பதவியை வேண்டாம் என்று சொல்லி, பின்னர், ’தனக்கு உடல் நிலை சரி இல்லாததால் பதவி ஏதும் வேண்டாம்’ என்று பல்டியடித்தார். அப்போதே அவர் அணி மாற இருந்ததாகவும், அதனை தினகரன் மற்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் தடுத்து சமாதானம் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், மற்ற எம்.எல்.ஏ- க்களை போல புதுச்சேரி தங்கும் விடுதியில் இருந்து வெளியே தனது சொந்த வேலைக்குச் செல்ல எம்.எல்.ஏ கதிர்காமு பெரும்பாலும் அனுமதிக்கப்படவில்லை. அப்படி அவர் வெளியே சென்றால் எடப்பாடி அணிக்குப் போய்விடுவாரோ என்ற அச்சமே காரணம் என்கிறார்கள் தினகரன் தரப்பு வட்டாரங்கள். எண்ணிக்கை அடிப்படையில் சரிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் தினகரன் அணியில், அடுத்த விக்கெட் பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமுவாக இருக்கலாம்.

With excerpts from Hindu and Vikatan

பகிர்

There are no comments yet