Credit: The Hindu

‘எந்த இடத்திலும் ஆட்சி பறிபோய்விடக் கூடாது; யாருடன் இருந்தால் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளலாம்!’ என்பது ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் பாலிஸி. அதற்கு இவர்கள் சதுரங்க ஆட்டத்தில் எங்கே பங்கம் வைத்து விடுவார்களோ என்பது அவர்களின் அச்சம். அப்படியானால் ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரனுக்கு என்னதான் நோக்கம்? இவர்கள் ஏன் இந்த எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு தமிழக அரசியலையே குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து மூத்த அதிமுக கட்சியினர் சிலரிடம் பேசினோம்.

”தினகரனைப் பொறுத்தவரை ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை. கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்காக எதையும் செய்வது என்று தீர்மானித்து விட்டார். இவரின் செயல்பாட்டின் பின்னணியில் சசிகலா, நடராஜன், திவாகரன், ராவணன், கலியமூர்த்தி ஆகிய அத்தனை மன்னார்குடி சக்திகளும் பக்க பலமாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இவர்களில் யாரும் இல்லாததால் எதுவும் செய்ய முடியாது. அதனால் திரைமறைவு அரசியலில் இயங்கி வருகிறார்கள். நேரடி அரசியலில் இறங்கினால் ஆட்சியதிகார ஆயுதம் கூரியது; எந்த நேரம் ஆனாலும் தங்களையே பூமாராங் மாதிரி பதம் பார்த்து விடும் என்பதை புரிந்தே இவ்வளவு ஜாக்கிரதையாக செயல்படுகிறார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை கட்சி விரோத நடவடிக்கையின்படி ஓபிஎஸ்ஸூடன் சேர்த்து 12 எம்எல்ஏக்களின் பதவி பறிப்பதுதான் என்கிறார்கள். அதன் மூலம் தன் பலம் அதிகரிக்கும். அதைப் பார்த்து ஈபிஎஸ்ஸிடம் உள்ள எம்எல்ஏக்கள் பெரும்பான்மையோர் தம் பக்கம் தாவுவார்கள் என்பதுதான் தினகரன் தரப்பு கணக்கு” என்கிறார்கள்.

ஓபிஎஸ் நோக்கம் குறித்து அதிமுகவின் மூத்த நிர்வாகியிடம் பேசினோம்.

”ஆரம்பத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் 11 எம்எல்ஏக்கள் சென்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆட்சிக்கு எதிராக இருப்பதில் இருக்கும் சிரமங்களைப் புரிந்து கொண்டு எடப்பாடி அணிக்குத் தாவி ஓடினார். அதைத் தொடர்ந்தே ஈபிஎஸ்- ஓபிஎஸ் இணக்கமும் நடந்தது. அதில் ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவியும், நிதியமைச்சர் பொறுப்பும் கிடைத்தது. பாண்டியராஜன் தொல்லியல்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதில் ஓபிஎஸ் உட்பட மற்ற எம்எல்ஏக்களுக்கும் திருப்தி இல்லை என்றாலும் கூட இப்போது அவர்கள் அனைவரும் பசை போட்ட மாதிரி ஈபிஎஸ்ஸிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை இப்போது ஓபிஎஸ் தன் இணைப்பில் அதிருப்தியடைந்து வெளியே வந்தால், அவருடன் ஓர் எம்எல்ஏ கூட வரத் தயாராக இல்லை. அதனால் தன்னந்தனியாகத்தான் தான் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்தே அங்கே இருந்து வருகிறார்.

தான் வெளியே வந்தால் ஆளுங்கட்சி, ஆட்சியதிகாரத் தன்மைகளை அனுபவிக்க முடியாதது மட்டுமல்ல; தன் செல்வ செழிப்புகளை கைமாற்றும் வேலைகளையும் செய்ய முடியாது என்பதையும் அறிந்தே வண்டி ஓடற வரை ஓடட்டும்; அது பதவிக்காலம் முழுக்க ஓடியாக வேண்டியது கட்டாயம் என்பது அவரது பாலிஸி” என்றார்.

ஆனால் இந்த ஓபிஎஸ் அணியை நிம்மதியாக இனி இருக்கவே விடக் கூடாது என்பது தினகரன் பாலிஸி என்றார் அதிமுக மூத்த பிரமுகர் ஒருவர். அவரிடம் இது குறித்துப் பேசிய போது, ”ஆட்சியதிகாரத்தில் முதல் விசுவாசத் துரோகம் ஓபிஎஸ் அணி மூலமே நடந்தது; அதன் பிறகே ஈபிஎஸ் அணியின் நன்றி மறத்தல் என்பதை உணர்ந்தே இதன் செயல்பாடு இருக்கிறது. அந்த வகையில் ஈபிஎஸ் அமைச்சரவை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை எதிர்த்து ஓட்டளித்ததன் மூலம் (திமுக கொண்டு வந்த சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அவர்கள் நடுநிலை வகித்தார்கள். ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்) அவர்களின் எம்எல்ஏ பதவிகளை பறிக்க வேண்டும். அதற்கு இரு அணிகள் இணைப்பு தற்காலிகத் தடுப்பு ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் தினகரன் தரப்பு நீதிமன்றம் செல்ல திட்டமிட்டுள்ளது. அப்படி செய்யும் பட்சத்தில் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களை கேள்வி கேட்கும். கொறடா ‘நாங்கள் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அறிக்கை கொடுத்துவிட்டோம்’ என்று சொல்லவே வாய்ப்புண்டு. அதையடுத்து சபாநாயகரே பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதன் மூலம் 12 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் அறிவிக்கப்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். இதை மட்டும் செய்து விட்டால் ஆட்சியதிகாரத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டு விடும்…!” எனக் குறிப்பிட்டு அதை விளக்கினார் நம்மிடம் பேசிய அதிமுக மூத்த பிரமுகர்.

”தினகரனிடம் முதலில் 19 எம்எல்ஏக்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் எதிரணிக்கு ஓடிப்போக அதே நேரத்தில் 3 எம்எல்ஏக்கள் இவரிடம் சேர்ந்துவிட்டார்கள். இதனால் 21 எம்எல்ஏக்கள் என்ற பலத்தில் தினகரன் அரசியல் இப்போது உள்ளது. கட்சி விரோத நடவடிக்கையின்படி நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் நிலையில் 12 எம்எல்ஏக்கள் பதவி மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால் ஈபிஎஸ்ஸிடம் இருக்கும் எம்எல்ஏக்களின் பலம் 91 ஆக மாறிவிடும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 21 பேர் வெளியே போய்விடும் நிலையில் 98 எம்எல்ஏக்கள் கொண்ட ஸ்டாலின் தலைமையிலான திமுக-காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையின் பலம் கூடிவிடும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கே போகாமல் ஈபிஎஸ் அணி கலைய நேரிடும். இந்த சூழ்நிலையில் தினகரனிடமே எம்எல்ஏக்கள் பலரும் தாவி வர வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் கட்சிதான் பலம். அது தினகரன் கையில் உள்ளது என்பதை 12 எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கையின் மூலம் மற்றவர்கள் புரிந்தே இப்படி நகர்வார்கள்!” என்றார் நம்மிடம் பேசிய அந்த பிரமுகர்.

எல்லாம் சரி. இதனால் தினகரன் தரப்புக்கு என்ன லாபம். ஈபிஎஸ் அணி 12ம் தேதி கூட்டும் கூட்டம் நடக்குமா? செல்லுபடியாகுமா? என்று கேட்டால் அதற்கு கட்சியில் உள்ள அனுபவஸ்தர்கள் சொல்லும் நீண்ட விளக்கம் இதுதான்:

”இந்த அரசியல் விளையாட்டில் எடப்பாடிக்கு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. தனக்கு கிடைத்த முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்கிறார். எம்எல்ஏக்கள் யாவரும் பதவி இழக்கத் தயாரில்லை. இனி கட்சி முன்பு போல பலத்துடன் இருக்கப் போவதில்லை. அப்படியே இருந்தாலும் எந்த ஜென்மத்திலும் தங்களுக்கு சீட் கிடைக்கப் போறதில்லை. அதனால் கூட்டத்தோடு அரோகரா போடத் தயாராக இருக்கின்றனர். அதற்கு தலைமையாக யார் முதல்வராக இருந்தாலும் சரி. பொதுக்குழுவை பொறுத்தவரை இவர்கள் கூட்டும் பொதுக்குழு சட்டப்படி செல்லாது.

தவிர இந்த பொதுக்குழு நடத்த தடை விதிக்க நீதிமன்றத்தை அணுகவும் கடைசிநேரத்தில் திட்டமிட்டு, சட்ட அறிஞர்களை தினகரன் தரப்பு பார்த்து விட்டது. அப்படி நீதிமன்றம் தடை விதித்தாலும், சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது போலவே ஒரே இடத்தில் அத்தனை பேரையும் அடைத்து வைத்துவிட்டு, ‘தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கிறோம். அவர் எடுக்கும் முடிவு எந்த வகையிலும் கட்சியை கட்டுப்படுத்தாது. அவருடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் மீது நடவடிக்கை!’ என தீர்மானம் போட்டுக் கலைவார்கள். அந்தக் கூட்டத்திலும் சசிகலாவை சீன்லயே கொண்டு வர மாட்டாங்க.

இந்த விவகாரத்தில் தினகரன் அணியைப் பொறுத்தவரை ஒரே விஷயம்தான். எந்த இடத்திலும் இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது. அதை செய்துவிட்டால் தனக்கு ஓரளவு நல்ல பெயர் கிடைத்துவிடும். கட்சியில் உள்ளவர்களும் முழுசாக தன் பக்கம் வந்துவிடுவர். பதவிச் சண்டை இருக்காது. அடுத்த தேர்தலில் முழுசாக கட்சி தன் (சசிகலா) கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இரட்டை இலையும் மீட்கப்பட்டுவிடும். கோடிக்கணக்கான விசுவாசமுள்ள தொண்டர்கள். தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி. முழுசாக தம் வசம் வரும்போது எல்லாமே ஆடி அடங்கிப் போவார்கள் என்பதுதான் அவர்கள் கணக்கு!” என்றார்.

There are no comments yet