சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி வரும் 16ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் கூறயுள்ளார். நீட் தேர்வு அடிப்படையில்தான் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
எடப்பாடி அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 9ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். ஒரு ஆளும் கட்சிக்கு எதிராக ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை என எதிர்பார்க்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்த தடை விதித்தது. தனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து இந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் தினகரன் கூறினார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக வரும் 16ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். இந்த பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் திரண்டு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் டிடிவி தினகரன். செப்டம்பர் 8ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் எதிர்கட்சியினர் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தினர். இதற்கு எதிராக நேற்று அதே இடத்தில் பாஜகவினர் பொதுக்கூட்டம் நடத்தினர். இப்பொழுது அதே உழவர் சந்தை மைதானத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார் டிடிவி தினகரன். தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வு முறையினை தமிழகத்தால் ஏற்க இயலாது என்று தமிழகமே இன்று ஒரே குரலில் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து போராடி வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழர்களின் நலன்களையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும், உடன்படாமல் போராடி வந்த புரட்சித் தலைவி அம்மாவின் எண்ணமும், நீட் தேர்வு தமிழகத்திற்கு ஏற்புடையதல்ல என்பதாகத் தான் இருந்தது. அவரது விடா முயற்சியால் கடந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாட்டின் தனித் தன்மையும், உரிமையும் பாதுகாக்கப்பட்டது. இந்த ஆண்டும் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று கடைசி நிமிடம் வரை அனைவரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மத்திய அரசின் சட்ட அமைச்சகமும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் முடிவுக்கு வந்து விட்டன என்றும், எனவே இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு தேவைப்படாது என்றும் கடைசி நிமிடம் வரை பலதரப்பாலும் கூறப்பட்டு வந்தது. இந்த நம்பிக்கைகள் பொய்யாகிப் போனதால் அரியலூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா, தனது மருத்துவப் படிப்பு கனவு தகர்ந்து போன நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையை உலுக்கிப் போடும் தருணமாக மாணவி அனிதாவின் மரணம் அமைந்து விட்டது. மாநிலமெங்கும் போராட்டங்கள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் கடைசி நிமிடம் வரை பதற்றமும் பரிதவிப்பும் நிலவுவதை தவிர்க்கவும், சமூகநீதி காப்பதற்கான இட ஒதுக்கீட்டிலும் கல்வி வாய்ப்புகளிலும் தமிழகத்திற்கு உள்ள தனித்தன்மையைக் கருதியும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றுவது இன்றியமையாததாக உள்ளது. எனவே மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்து, பெருவாரியாக மாநில பாடத்திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அடிப்படையில் நடத்தப்படும் நீட் தேர்வில் இருந்து பாதுகாத்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதிமுக அம்மா சார்பில் வருகின்ற 16ஆம்தேதி மாலை 3 மணியளவில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளேன்.
இது குறித்து ஒரு சமூக ஆர்வலர் கூறும்போது: டெட் பாடி அரசை வீட்டுக்கு அனுப்பாமல் தினகரனின் செயல்கள் அதிருப்தி அளிக்கின்றன. ஸ்லீப்பர் செல்கள் என்று கூறுகிறாரே தவிர யாரும் வந்தபாடில்லை. இப்படி பாமக திமுக மாதிரி சும்மா மோடி எதிர்ப்பு பொதுக்கூட்டங்கள் போடுவதால் தொண்டர்கள் மட்டுமன்றி மக்களும் நமபிக்கை இழந்து விடுவார்கள் என்று கவலைப்பட்டார்.
There are no comments yet
Or use one of these social networks