சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சசிகலாவை பார்க்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஈரல் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக லண்டனில் இருந்து மருத்துவர் வந்துள்ளதாக மருத்துவ வட்டாரம் தெரிவித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் சென்றுள்ள சசிகலா, பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். உடல் நலக் குறைவு காரணமாக நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கணவரை சந்திக்க சிறையில் ஷாப்பிங் போனபோது வாங்கிய புத்தாடையில் வருவாரா அல்லது கைதி உடையில் வருவாரா என்று சசிகலா ஆதரவாளர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

செப்.12 ஆம் தேதி அதிமுக(அம்மா) பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடராஜனை காண்பதற்காக சசிகலா பரோலில் வருவது குறித்து விரைவில் செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஓபிஎஸ் நமது கப்சா நிருபரிடம் பேசினார். “அம்மா சாவில் மர்மம் இருப்பதாக நான் தொடர்ந்து தர்மயுத்தம் நடத்தி வருகிறேன். தற்போது துணை முதல்வர் பதவி கொடுத்து இருப்பதால் தர்மயுத்தத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தேன். அம்மா அப்பல்லோவில் தங்கி இருந்தபோது சசிகலாவால் ஆபத்து இருந்ததுபோல் டிடிவி தினகரன் மூலம் எங்கள் (எடப்பாடி) ஆட்சிக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் தர்மயுத்தத்தை தூசி தட்டி எடுத்துள்ளேன். தைரியமிருந்தால் அம்மாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலேவை அழைத்து வந்து நடராஜனுக்கு சிகிச்சை அளிக்கத்தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதை அறிந்து கொண்ட சசிகலா, “முதுகில் குத்திய ஓபிஎஸ் எல்லாம் தர்மயுத்தம் செய்வேன் என்று கூறும்போது, அக்கா சமாதியில் மூன்று முரை குத்தி சபதமெடுத்த நான் சும்மா இருப்பேனா? பரோல் வாங்கியவுடன் குளோபல் மருத்துவமனைக்கு செல்லாமல் நேராக லண்டன் போய் டாக்டர் ரிச்சர்டு பீலேவை நானே அழைத்துவரலாம் என்று இருக்கிறேன். என் கணவருக்கு சிகிச்சை அளித்து அக்கா மாதிரி அல்லாமல் உயிருடன் அழைத்து வந்து அப்பல்லோவில் எங்களுக்கு (மன்னார்குடி மாபியா) ஏற்பட்ட களங்கத்தை துடைப்பேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet