சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (10-09-2017) திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து மெஜாரிட்டியை இழந்துவிட்ட ‘குதிரை பேர’ அரசை உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்திரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆளுநரைச் சந்தித்த பிறகு ஸ்டாலின் கூறும்போது, பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் உள்ளது, 119 எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு எதிராக உள்ளனர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து, மு.க.ஸ்டாலின்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘குதிரை பேர’ ஆட்சிக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தனித்தனியாக கோரிக்கைக் கடிதம் வழங்கியிருக்கிறார்கள். அதனடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில், விளக்கமாக கடிதம் எழுதி, ஆளும் கட்சி சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை மாண்புமிகு கவர்னர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறேன்.

அதனைத்தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கவர்னரை நேரடியாக சந்தித்து, எங்களது கோரிக்கையை விளக்கமாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல்,குடியரசுத் தலைவரை திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து, அதுகுறித்து மனுவை அளித்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில், திடீரென ஒருநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில், அவர்களது கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதே தினத்தில், டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து, அந்தப் பிரச்னையைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அந்த 22 பேரில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் திடீரென எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக செய்திகள் வந்தன.

அப்படிப்பார்த்தாலும், ஆளும் கட்சியில் உள்ள உறுப்பினர்களில் 21 பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மை. அதேபோல திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 98 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை ஏற்க முடியாது என்று கடிதம் அளித்துள்ள 21 பேர், ஆக, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, இருக்கக்கூடிய 233 பேரில், 119 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், 114 பேர் மட்டுமே இந்த அரசுக்கு ஆதரவு என்ற நிலை உள்ளது. எனவே, 119 என்ற எண்ணிக்கைப் பெரியதா அல்லது 114 பெரியதா என்பதைத்தான் இன்றைக்கு ஆளுநரிடத்தில் சுட்டிக்காட்டி, வலியுறுத்தி, வற்புறுத்தி இருக்கிறோம்.

ஏற்கனவே எஸ்.ஆர்.பொம்மை வழக்கு, அருணாச்சல மாநில வழக்கு ஆகியவற்றில், ஆளுநருடைய அரசியல் சட்டக் கடமைகள் குறித்து, உச்ச நீதிமன்றம் தெளிவாக தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது. முதலமைச்சருக்கு மெஜாரிட்டி உள்ளதா, இல்லையா என்பதை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும். அதை ராஜ்பவனில் நிரூபிக்க முடியாது. இதையும் கவர்னரிடம் நாங்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளாக உள்ள நாங்கள் பலமுறை கவர்னரை சந்தித்து மனுக்கள் அளித்து, விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம். எனவே, இதுவே கடைசிமுறையாக இருக்க வேண்டும், எனவே, உரிய நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும், எனவே, உடனடியாக சட்டமன்றத்தினைக் கூட்ட உத்திரவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்டரீதியாக நாங்கள் நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்பதையும் கவர்னரிடம் நாங்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறோம். எனவே, எங்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து, சட்டமன்றத்தைக் கூட்ட நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் கவர்னர் வித்யாசாகர் மும்பை செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet