சென்னை: தமிழகம் நாளொரு பிரச்னையும், பொழுதொரு வேதனையுமாக நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்? என்பது சாமானியர்கள் வரை விவாதிக்கும் கேள்வி.

டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆகஸ்ட் 22-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ‘முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து முதல்வருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 115 ஆனது. எனவே மெஜாரிட்டியை இழந்துவிட்ட எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இந்த கோரிக்கையை வலியுறுத்த ஆகஸ்ட் 27-ம் தேதி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி மற்றும் காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்தனர். அதன்பிறகு ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கவர்னரை சந்தித்து அதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

இவர்களிடம் பேசிய கவர்னர் வித்யாசாகர் ராவ், ‘19 எம்.எல்.ஏ.க்களும் இந்த ஆட்சி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறவில்லை. அவர்களது கட்சியை விட்டும் விலகவில்லை. முதல்வரை மாற்றுவது என்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அதில் நான் எப்படி தலையிட முடியும். எனவே பந்து எனது கோர்ட்டில் இல்லை’ என கை விரித்தார். இதை பின்னர் திருமாவளவனும், ஜவாஹிருல்லாவும் வெளிப்படையாக நிருபர்களிடம் கூறினர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முடிவில் கவர்னர் இல்லாததை அடுத்து, திமுக சார்பில் ஆகஸ்ட் 31-ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு கொடுத்தனர். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய கனிமொழி, ‘ஜனாதிபதி அவகாசம் கேட்டிருக்கிறார். உரிய நடவடிக்கையை எடுப்பதாக உறுதி கொடுத்திருக்கிறார்’ என்றார். ஆனால் ஜனாதிபதியிடம் மனு கொடுத்து 10 நாட்களை கடந்தும் நடவடிக்கை இல்லை.

இதன்பிறகு செப்டம்பர் 7-ம் தேதி டிடிவி.தினகரன் மேலும் 3 எம்.எல்.ஏ.க்களை அழைத்துக்கொண்டு கவர்னரை சந்தித்தார். திருவாடனை எம்.எல்.ஏ. கருணாஸ், அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரே அவர்கள். இவர்களும் ஏற்கனவே 19 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்ததுபோல, ‘முதல்வர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என கடிதம் கொடுத்துள்ளனர். இதன் மூலம் கவர்னரிடம் கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 22 ஆனது.

இதன்பிறகாவது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்த திமுக முடிவு செய்திருக்கிறது. எனவே மீண்டும் கவர்னர் வித்யாசாகர் ராவை செப்டம்பர் 10-ம் தேதி (நாளை) ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்கிறார்கள். இவர்களுக்கு நாளை மாலை 5 மணிக்கு கவர்னரின் ‘அப்பாய்ன்மென்ட்’ பெறப்பட்டிருக்கிறது.

கடந்த முறை கவர்னரை சந்திக்க ஸ்டாலின் செல்லவில்லை. அதே நாளில் திருவாரூரில் கட்சிப் பிரமுகர் இல்ல விழாவில் அவர் கலந்து கொண்டார். ஆனால் இந்த முறை ஸ்டாலினே நேரடியாக செல்லவிருக்கிறார். ‘19 எம்.எல்.ஏ.க்கள் உங்களிடம் கடிதம் கொடுத்து, 20 நாட்கள் ஆகிவிட்டன. நாங்கள் கடிதம் கொடுத்து, இரு வாரங்கள் ஆகிவிட்டன. இதற்கு மேல் சட்ட ஆலோசனைக்கு அவகாசம் தேவைப்படாது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட இருக்கிறீர்களா? இல்லையா? என தெளிவாக கூறிவிடுங்கள்!’ என இந்த முறை கவர்னரிடம் கறாராக கேட்டுவிட ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார்.

இதற்கு கவர்னரிடம் இருந்து மறுப்போ, மழுப்பலான பதிலோ வந்தால் அடுத்த ‘பந்தை’ வீச இருக்கிறார் ஸ்டாலின். அது, ‘நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாத அளவுக்கு உங்களுக்கு சிக்கல் இருந்தால் பரவாயில்லை. நாங்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கான நோட்டீஸை சபாநாயகரிடன் கொடுக்கிறோம். ஆனால் சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்று உடனே சட்டமன்றத்தை கூட்டப் போவதில்லை.

அடுத்த கூட்டத்தொடர் நவம்பரிலோ, டிசம்பரிலோ நடக்கும். அதுவரை, விட்டு வைத்தால் எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரம் நடத்துவார்கள். எனவே சபாநாயகரிடம் நாங்கள் நோட்டீஸ் கொடுத்ததும், சட்டமன்றத்தை கூட்ட நீங்கள் உத்தரவிட வேண்டும். இதையாவது செய்வீர்களா?’ என கேட்கவிருக்கிறார்கள் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்.

Credit: IETAMIL

There are no comments yet