சென்னை: அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தினகரன் அணி சார்பில் 9-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் சட்ட ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது. அதையடுத்து டி.டி.வி.தினகரன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்தார். மேலும் செப்டம்பர் 16-ம் தேதி திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்த பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது. அதேநாளில் வேறு ஒருவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து தெரிவித்த டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி, ‘இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று பொதுக்கூட்டத்தை நடத்துவோம்’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டி உள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா ஜலபதி திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றி வேல் கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மனு மீதான விசாரணை 11ந்தேதி நடைபெறும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. அதன்படி இன்று அந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் நடத்த தடையில்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை வெற்றிவேல் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து இருப்பதால் விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கோர்ட்டு கூறிவிட்டது. கோர்ட்டு நேரத்தை வீணடித்து விட்டதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் வெற்றிவேல் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மோடி எதிர்ப்பு அரசியல் செய்யமுடியுமா என்று வேதனையில் தினகரன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

பகிர்

There are no comments yet