சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘துப்பறிவாளன்’ செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதத்தில் அளித்துள்ள பேட்டியில் “தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விஷால் மேலும் கூறியிருப்பதாவது: மாற்றம் மட்டுமே மாறாதது என்பதை நான் நம்புகிறேன். மற்றவர்கள் போல, கடவுள் ஆசைப்பட்டால் வருவேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நேரடியாகச் சொல்கிறேன், தேவை ஏற்பட்டால், ஆம், நான் அரசியலுக்கு வருவேன். அதில் எந்தத் தவறும் இல்லை. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களும் என்னை அவர்களுடன் இணைய அழைத்திருக்கிறார்கள்.
அதே சமயம், அரசியலை மாற்றுத் தொழிலாக வைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் எனக்கு எந்த ரகசியம் நோக்கமும் கிடையாது. மக்கள் ரேஷன் கார்ட், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்தாலே போதும். ஆனால் எதுவும் எளிதாகக் கிடைப்பதில்லையே. அரசியல்வாதிகள் அவர்கள் வேலையைச் செய்தால் ஏன் என்னைப் போன்ற நடிகர்களை அரசியலுக்கு அழைக்கப் போகிறார்கள்? சில விஷயங்களை அரசியல்வாதிகளால் மட்டுமே சாதிக்க முடியும். அதனால்தான் அவர்களுக்கு வாக்களித்து அதிகாரத்தைத் தந்திருக்கிறோம். இன்றைக்கு யாரையும் நாம் ஏமாற்ற முடியாது. மீண்டும் மீண்டும் இலவசங்கள் கொடுத்து வாக்குகள் பெற்று ஜெயிக்கலாம் என்று நினைத்தால் அப்போது வெற்றிக்கான வாய்ப்பு குறைவே. இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் பரபரப்பான அதிமுக அரசின் ஆட்சியில் விஷாலின் கருத்து முக்கியமானது. செப்.12 நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், “தற்போது கழகத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விவாதித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
1. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.
2. ஜெயலலிதா இருந்த போது அவரவர் வகித்த பதவிகளில் நீடிக்க வேண்டும்.
3. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு நடத்தி வருவதற்கு பாராட்டு.
4. ஜெயலலிதா நினைவிடம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசுக்கு பாராட்டு.
5. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு. வார்தா புயலில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.
6. தினகரன் அறிவித்த நியமனங்கள், அறிவிப்புகள் செல்லாது.
7. சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் ரத்து.
8. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர். இனி அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி இல்லை. இதற்காக அ.தி.மு.க.வின் சட்டவிதிகளில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
இனி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக யாரையும் தேர்வு செய்ய மாட்டோம். எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க மாட்டோம்.
9. அ.தி.மு.க.வில் வழி காட்டும் குழு ஏற்படுத்தப்படுகிறது. அந்த குழுவை வழி நடத்த ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஓ.பன்னீர் செல்வம், இணை தலைவராக எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் அதிகாரம் வழங்க சட்ட திருத்தம் செய்ய முடிவு செய்யப்படுகிறது. கட்சியின் சட்ட விதி 19ல் இதற்காக திருத்தம் செய்யப்படுகிறது.
10. பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இணை தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது.
11. துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் செயல்படுவார்கள்.
12. கட்சியில் யாரையும் நீக்கவும், சேர்க்கவும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவருக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் 8ஆவது பாயிண்டை சுட்டிக் காட்டி விஷால் கப்சா நிருபரிடம் கூறியதாவது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது, ரஜினி, கமல் ஆகியோர் கண்வைத்திருந்தனர். தற்போது கொள்ளைக் கூட்டத்திற்கு தலைவன் தேவை இல்லை என்பது போல் அப்படி ஒரு பதவியே இல்லை என்கிறார்கள். தினகரன் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை சசிகலா தினகரன் யுக்தியால் மீண்டும் அதிமுகவில் நீக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டால் அந்த நாற்காலியில் அமர்ந்து அரசியலுக்கு வருவேன். எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி, ஜெயா ஒரு கன்னடத்துக்காரர், அடுத்ததாக தெலுங்கனான நான் தான் முதல்வராகவும் பொதுச் செயலாளராகவும் வருவேன் என சினிமா ஜோசியர் ஒருவர் கூறினார் சசிகலா தினகரன் ஆகியோர் சினிமா நட்சத்திரங்களும் இல்லை போட்டியே எனக்கும் ரஜினிக்கும் தான். என்றார். படம் ரிலீசாகும்போது இவனுங்களுக்கு விளம்பரம் தேடுறதே பொழைப்பா போச்சு என்று அங்கிருந்த கப்சா சினிமா நிருபர் ஒருவர் அங்கலாய்த்தார்.
பகிர்

There are no comments yet