சென்னை: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. முதல் தீர்மானமாக இரட்டை இலையை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரு அணிகள் இணைந்ததற்கு பாராட்டு தெரிவித்து ஒரே கட்சியாக இணைந்தது குறித்து பாராட்டியும் வாழ்த்தியும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

முதல் தீர்மானமாக இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். பின்னர் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வந்த 2 அணிகளும் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி இணைந்தன. சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அப்போது அறிவித்தனர். இதையடுத்து, துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார். இதற்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 21 எம்எல்ஏக்கள், முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அதிமுக நிர்வாகிகள் கூடி, பொதுக்குழுவை விரைவில் கூட்ட முடிவெடுத்தனர். செப்டம்பர் 12-ம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மிக முக்கிய தீர்மானம் அதிமுகவில் இனி பொதுச் செயலாளர் பதவியே கிடையாது. அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே. என்ன வகையான அதிகாரங்கள் இருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தீர்மானம் 12 கூறுகிறது. 46 பக்கங்கள் கொண்ட தீர்மானம் முழு விபரம்: கட்சி விதி 5 முதல் 45 வரை பொதுச் செயலாளருக்கு என வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் இனி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிக்கு மாற்றி வழங்கப்படுகிறது. சட்டப்பிரிவு விதி 5 பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் இனி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றப்படுகிறது. உறுப்பினர்கள் சேர்க்கும் உரிமை இறுதியாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் அதிகாரத்தில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது..

எடப்பாடி, ஓபிஎஸ்சின் இந்த தீர்மானத்தால், எப்படி என்னை ஒதுக்கி வைக்கலாம் என்று பாஜக தலைவர் அமித் ஷா கோபத்தில் இருப்பதாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet