கூர்க்: கர்நாடகாவின் கூர்க்கில் முகாமிட்டிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை மீட்பதாக கூறி தமிழக போலீஸ் கஸ்டடியில் வைக்க முயன்று அது முடியாமல் போனதாக கூறப்படுகிறது.   தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேர் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்களில் 18 பேர் கர்நாடகாவின் குடகு மலைப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இங்கு முகாமிட்டிருக்கும் எம்.எல்.ஏக்கள் நாளை மறுநாள் சென்னை வந்து சபாநாயகர் தனபாலை சந்திக்க உள்ளனர்.
அப்போது எம்.எல்.ஏ. பதவியை கூண்டோடு ராஜினாமா செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக வேறு வியூகம் வகுத்தது ஆளும் தரப்பு.

இந்த நிலையில் திடீரென தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் குடகுக்கு சென்று எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் விசாரணை நடத்தினர். எம்.எல்.ஏக்கள் சுயவிருப்பத்தின் பேரில் தங்கியுள்ளனரா? கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனரா? என விசாரணை நடத்தப்பட்டது.
இவ்விசாரணையில் ஊசலாட்டமாக இருக்கும் எம்.எல்.ஏக்கள், எடப்பாடி தரப்புக்கு தகவல் பாஸ் செய்யும் எம்.எல்.ஏக்கள் என குறைந்த 10 பேரையாவது தமிழக போலீசார் அழைத்துச் செல்ல வாய்ப்புள்ளதாகவே கருதப்பட்டது. இப்படி அழைத்துச் செல்லப்படும் எம்.எல்.ஏக்களை போலீஸ் உயர் அதிகாரிகள் தங்களது கஸ்டடியில் வைக்கவும் சாத்தியங்கள் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கம் வந்துவிட்டால் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரலாம் என்றன அதிமுக வட்டாரங்கள். தமிழக போலீசாரின் இந்த அதிரடியை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சற்று எதிர்பார்க்காததால் அதிர்ந்து போயினர். ஆனாலும், அனைவருமே தாங்கள் சுய விருப்பப்படி தங்கியுள்ளதாக கூறியுள்ளனர். எனவே போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை.

பகிர்

There are no comments yet