சென்னை: அதிமுக பொதுக் குழுவில் எவ்வித எதிர்ப்போ ஆரவாரமோ இன்றி அமைதியான முறையில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நேற்று நடந்தன. காலை 9 முதல் 10.30 மணி வரை எமகண்டம் என்பதால், 10.35 மணிக்கு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 7.30 மணியில் இருந்தே பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பேருந்துகள், வேன்களில் மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். உறுப்பினர்களின் அழைப்பு கடிதங்களை சரிபார்த்து, அவற்றில் உள்ள பெயர்களை குறித்து வைத்த பின்பு, பொதுக்குழு உறுப்பினர் என்பதற்கான ‘பேட்ஜ்’கள் வழங்கப்பட்டன. அதன்பிறகு உறுப்பினர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

எம்எல்ஏக்களை பொறுத்தவரை, குழு, குழுவாக மாவட்ட வாரியாக வந்தனர். குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் தனியாக வந்தார். கடலூரில் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்த முருகுமாறன், சத்தியா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தனியாக வந்தனர். சரியாக 10.40 மணிக்கு செயற்குழுவும் அடுத்த 10 நிமிடத்தில் பொதுக்குழுக் கூட்டமும் தொடங்கியது.

கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்காக பொதுக்குழு கூட்டம் இதே மண்டபத்தில் நடந்தது. அப்போது, செய்யப்பட்ட ஏற்பாடுகள் இந்தக் கூட்டத்தில் இல்லை. அன்று உறுப்பினர்களுடன் தொண்டர்களும் அதிக அளவில் வந்திருந்தனர். ஆனால், இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த தொண்டர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. உறுப்பினர்களுடன் வந்திருந்தவர்கள் மட்டுமே வெளியில் காத்திருந்தனர். உறுப்பினர்கள் மத்தியில் எந்த உற்சாகமும் காணப்படவில்லை.

பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 8-வது தீர்மானமாக அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா நியமனம் ரத்து, அவரால் மேற்கொள்ளப்பட்ட நியமனம், நீக்கம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. தினகரனால் அறிவிக்கப்படும் நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, எந்த எதிர்ப்பும் எழவில்லை. அதே நேரத்தில் ஆரவாரமும் எழவில்லை. ஏற்கெனவே சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்த டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. உறுப்பினர்கள் மத்தியிலும் தீர்மானங்கள் குறித்த எந்த சலசலப்பும் இல்லை. இதனால், அமைதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுகவில் செயற்குழு பொதுக்குழுவை பொறுத்தவரை 2,300-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கட்சியின் அமைப்பு ரீதியிலான 50 மாவட்டங்களில், வெற்றிவேல் (வடசென்னை), வி.பி.கலைராஜன் (தென்சென்னை), ரங்கசாமி (தஞ்சை), சோளிங்கர் பார்த்திபன் (வேலூர்), தங்க தமிழ்ச்செல்வன் (தேனி) உள்ளிட்ட 6 மாவட்டச் செயலாளர்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளதால் அவர்கள் பங்கேற்கவில்லை. அவர்களைச் சார்ந்த 170-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை. நேற்றைய கூட்டத்தில் 2,130 உறுப்பினர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.

சசிகலா நீக்கப்பட்ட தீர்மானத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ”தங்களின் வளர்ச்சிக்காக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும். சசிகலா நீக்கம் என்பது சரியானதுதான். ஆனால், பொதுச்செயலாளர் சர்வ அதிகாரம் படைத்தவர். ஜெயலலிதா இருந்தபோது அந்த பதவி அப்படித்தான் இருந்தது. தற்போது, அந்த சர்வ அதிகாரம் என்பது இருவருக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு உறையில் 2 கத்தி போன்றது. சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது’’ என்றார்.

With excerpts from The Hindu

பகிர்

There are no comments yet