சென்னை: வருங்கால முதல்வர் தீபா அம்மா வாழ்க…இந்த வாழ்த்து இப்போது புதிதாக தி. நகரில் தீபா வீட்டில் இருந்து கேட்க ஆரம்பித்திருக்கிறது. காரணம் தீபாவும் மாதவனும் இணைந்து விட்டார்கள். இரு கண்கள் போல நாட்டு மக்களை காப்பாற்றுவார்களாம். என்னடா இந்த தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதில் இருந்தே பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஆசை வந்து விட்டது. குமாரசாமி புண்ணியத்தில் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்து மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா.

சட்டசபை தேர்தலில் பிரச்சாரத்தின் போதே முதல்வராக கனவு கண்டவர்களை தூங்க வைத்து விட்டு மீண்டும் ஜெயித்து முதல்வரான ஜெயலலிதா, சில மாதங்களிலேயே உடல்நலக்குறை ஏற்பட்டு மரணமடைந்தார். ஜெயலலிதா மரணம் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக ஆள் ஆளுக்கு நாட்டாமை செய்ய ஆரம்பித்து விட்டனர். சசிகலா முதல்வர் கனவில் வலம் வர ஆரம்பித்தார். அவரை பிடிக்காதவர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை நாடினர். எம்ஜிஆர் பிறந்தநாளில் தனி கட்சி தொடங்குவதாக கூறிய தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்று ஒரு இயக்கத்தை தொடங்கி தொண்டர்களை சேர்த்தார். பணமும் வசூலித்தார். அவரது நல்ல நேரம் பணம் கோடிக்கணக்கில் வசூலானது என்கின்றனர்.

தீபாவும் பால்கனியில் நின்று தன்னை பார்க்க வந்தவர்களிடம் பேசி கை தட்டல் வாங்கினார். டிவிகளில் பேட்டியும் கொடுத்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி போட்டு பிரச்சாரமும் செய்தார். ஆனால் உள்கட்சி பிரச்சினையில் அவரது கணவரே தீபாவிடம் இருந்து பிரிந்து தனியாக கட்சி தொடங்கினார். ஒரே வீட்டில் இருந்து கொண்டு தனித்தனியாக செயல்பட்டனர். என்ன நினைத்தாரோ ஒருநாள் தீபாவின் வீட்டில் இருந்து மாதவன் வெளியேறினார். அதன்பிறகு மாநிலம் தோறும் முக்கிய நகரங்களில் கட்சியை வளர்க்க கூட்டம் போட்டார் மாதவன். தனது பெயரை மாதவன் தீபா என்றும் மாற்றினார்.

சில மாதங்கள் இருவரும் பிரிந்து இருந்தனர். திடீரென போயஸ் தோட்டத்து வீட்டிற்கு வந்து தீபா உரிமை கொண்டாடினார். தீபாவின் தம்பி தீபாக்கை திட்டியதுதான் ஹாட் டாபிக். அப்போது தீபாவிற்கு பாதுகாப்பாக வந்து மீண்டும் இணைந்தார் மாதவன். அண்ணா பிறந்தநாளான நேற்று அண்ணா சிலைக்கு தீபா மாலை போட போன போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தீபாவை முற்றுகையிட்டு செய்த ரகளை மாதவனை யோசிக்க வைத்திருக்க வேண்டும். மீண்டும் தீபா வீட்டிற்கு வந்து விட்டார் மாதவன்.

இந்நிலையில், நேற்றிரவு இவர்கள் இருவரும் கலந்துபேசி ஒன்றிணைகிறோம் என அறிவித்தனர். பின்னர், இரவு 12.20 மணியளவில், இருவரும் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தனர். அங்கு, மலர்ச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்திய பின், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தீபா. அப்போது அவர் , “ பல்வேறு சூழ்ச்சி வலைகளின் மத்தியில், நாங்கள் இருவரும் இணைந்துள்ளோம். தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சி, பெரும்பான்மையை இழந்த ஆட்சியாக உள்ளது. எனவே, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நடத்தும்பட்சத்தில், அது நேர்மையாக நடக்குமா என்பது கேள்விக்குறியே?. தினகரன் தி.மு.க-வுடன் இணைந்து செயல்பட்டுவருகிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை. எனவே, தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி நடக்கும்பட்சத்தில், பொதுமக்கள் என்னை ஆதரிப்பார்கள். நீட் விவகாரத்தில் ஒரு மாணவியை இழந்தும் இன்னும் அதிலிருந்து விலக்கு பெற்றுத் தர தமிழக அரசுக்குத் திராணி இல்லை” என்றார்.

அப்போது அங்கிருந்த தீபாவின் தொண்டர் ஒருவர் நமது கப்ஸா நிருபரிடம் கூறும்போது, எடப்பாடி – ஓபிஎஸ்சை கையை பிடித்து சேர்த்து வைத்த மாதிரி எங்க குட்டி அம்மாவையும், மாதவனையும் கவர்னர் சேர்த்து வைத்திருந்திருக்க வேண்டும், இதில் இருந்தே தெரிகிறது மோடியின் லட்சணம். இதைக்கண்டித்து நாளை ஜெயலலிதா சமாதியில் தியானம் இருக்கப் போகிறேன் என்றார்

பகிர்

There are no comments yet