சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் மும்பையிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை திரும்புகிறார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, என இரண்டாக உடைந்த அ.தி.மு.க., கடந்த மாதம் 21ம் தேதி ஒன்றாக இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்களின் பலம் 114 ஆக குறைந்தது. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கின.

மேலும், கடந்த மாதம் 27ம் தேதி, சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். ஆனால் ஆளுநர் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 10ம் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், ஒரு வார காலத்திற்குள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்தார். வித்யாசாகர் ராவை மு.க.ஸ்டாலின் சந்தித்த மறுநாளே ஆளுநர் மும்பை புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் அதிருப்தியடைந்த ஸ்டாலின் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டளையிடுமாறு தமிழக ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும், என்று ஹைகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணையை 20ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மேலும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார். ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலையில் தான் இறங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். இந்த நேரத்தில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மும்பையிலிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்புகிறார். அவரை தினகரன் தரப்பினரோ அல்லது அரசு எதிர்க்கட்சியினர் தரப்பிலோ சந்திக்க வாய்ப்புள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதனால் குடகுக்கு தமிழக்தில் பெரிய அளவில் போலீசை அனுப்பி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கிவாரி எடப்பாடி உதிரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பகிர்

There are no comments yet