Reproduced from Shyam Shanmugaam

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களைப் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தது மற்றும் குட்கா விவகார சர்ச்சையில் திமுக வாங்கிய இடைக்காலத்தடை குறித்த வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வர இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ? காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தக் கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என்றும், சபாநாயகர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க அக்டோபர் 4 ஆம் தேதி வரை அவகாசம் அளித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுத் தரப்புக்கு இது லாபம் தான். நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்த வேண்டாம். இரட்டை இலை இல்லாமல் இடைத் தேர்தலையும் சந்திக்க வேண்டாம். பதில் மனுக்களாகப் போட்டு காலதாமதமும் செய்யலாம்.ஏற்கனவே ஆர்.கே நகர் தொகுதி காலியாகி ஓர் ஆண்டு ஆகிறது. இப்போது 18 தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. ஆளுநர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இப்படி முக்கியமான பதவிகள் எல்லாம் தமிழகத்தில் காலியாக உள்ளன.

கர்நாடகா வழக்கொன்றில் (எடியூரப்பா வழக்கு) சுப்ரீம் கோர்ட் “வெறும் அதிருப்தி தெரிவிப்பது மட்டுமே கட்சித் தாவல் கிடையாது!” என்று கூறியுள்ளது. பல்வேறு இடங்களில் சுப்ரீம்கோர்ட் “கட்சித்தாவல் தடை என்பதே ஒரு பரிசோதனை முயற்சியிலான சட்டம் தான். அதில் பல “சாம்பல்” பகுதிகள் (கருப்பும் வெள்ளையும் அற்ற குழப்பப் பகுதிகள்) உள்ளன. நீதிமன்றம் அவற்றை தெளிவாக வரையறை செய்ய முயன்றுவருகிறது!” என்றே கருத்துத் தெரிவித்துள்ளது.

திமுக தரப்பு தொடுத்த வழக்கு சட்டமன்ற உரிமைக் குழு தொடர்புடையது. “குட்கா விவகாரத்தில் உரிமைக்குழுவில் ஏதோ ஒருவகையான சஸ்பென்ஷன் கொடுத்து அதைச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றிவிடுவார்கள். எனவே நம்பிக்கைத் தீர்மானத்தில் கலந்துகொள்ள முடியாது!” என்று அது கோர்ட்டில் வாதங்களை வைத்தது. எனவே இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம் இன்னமும் விசாரணை செய்துவருகிறது.

வரலாறு திரும்பும்போது முதன்முறை துன்பியல் நாடகமாகவும் இரண்டாவது முறை நகைச்சுவை நாடகமாகவும் இருக்கும் என்பார்கள். 1988ஆம் ஆண்டு எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்ட பி.தனபால் தற்போது அரசு கொறடா எஸ்.ராஜேந்திரனின் பரிந்துரையை ஏற்று 18 எம்எல்ஏக்களைத தகுதி நீக்கம் செய்துள்ளார். அதாவது 29 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது.
அது துன்பியல் நாடகமா அல்லது காமெடிக் காட்சியா என்பது நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்புக்குப் பிறகே தெரியும்.சென்னை உயர்நீதிமன்றம் என்ன முடிவு இறுதியாக எடுக்குமோ? அதற்கு இன்னும் எத்தனை வருடமாகுமோ? மீண்டும் அது சென்னை உயர்நீதிமன்ற அப்பீலுக்குப் போகும். பின்னர் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும். அதுவரை 18 தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை.
கவர்னர் விரும்பினாலும் சட்டமன்றத்தைக் கூட்டும்படி இப்போது உத்தரவிடமுடியாது. அரசு விரும்பினாலும் சட்டமன்றத்தை உடனே கூட்டி நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்றமுடியாது. நிஜமான திரிசங்கு சொர்க்கம்!

மொத்தத்தில் பெரிய சட்டப் போராட்டத்தை நோக்கிப் போகிறது தமிழக அரசியல். இதில் அரசு தன் நேரத்தையும் கவனத்தையும் முழுமையாகச் செலுத்துவதால் மக்கள் பணிகள் ஸ்தம்பித்துக் கிடக்கின்றன.

பகிர்

There are no comments yet