233 எம்.எல்.ஏக்களில் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் அதிமுக அரசு சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. எம்.எல்.ஏக்கள் விகிதாச்சாரப்படி 32 அமைச்சர்கள் மட்டுமே நீடிக்க முடியும் என்ற நிலையில் ஒரு அமைச்சரை நீக்க வேண்டிய நிர்பந்ததில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 164 (1) (1) (a) -இன் படி மாநில சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை விட முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடக் கூடாது. அமைச்சரவையில் உள்ள முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை மிகாமல் இருக்க வேண்டும்.

அதன்படி முன்பு இருந்த 233 எம்.எல்.ஏக்களில் 15 சதவிகிதத்தை கணக்கெடுத்தால் முதல்வரையும் சேர்த்து 33 அமைச்சர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் தற்போது அமைச்சரவையில் முதல்வர் உட்பட 33 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் தற்போதைய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 233-இல் இருந்து 215-ஆக குறைந்து விட்டது.

எனவே 215 எம்எல்ஏக்களில் 15 சதவீதம் என்றால் 32 அமைச்சர்கள் மட்டுமே பதவியில் இருக்க வேண்டும். கூடுதலாக ஒரு அமைச்சர் உள்ளது சட்டத்தை மீறிய செயல் என அரசியல் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது உள்ள அமைச்சரவையின் எண்ணிக்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறியுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அதனால் தற்போது உடனடியாக ஒரு அமைச்சர் பதவி விலகியாக வேண்டும். 33 அமைச்சர்களில் ஒருவரை அமைச்சரவையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். அதனால் தற்போது எந்த அமைச்சர் தனது பதவியை இழக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பகிர்

There are no comments yet