பிக் பாஸ் நிகழ்ச்சி, அ.தி.மு.க அமைச்சர்களுடன் மோதல், ட்விட்டர் கருத்துகள் என்று கமல் தற்போது செம ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலமாகக் கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, கடந்த மாதம் கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ள அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். வளரமதி குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட போதும் கருத்து தெரிவித்தார்.

சென்னையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் – கமல்ஹாசன் சந்தித்துப் பேசினர். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கமல்ஹாசன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கமல் கூறுகையில், “கெஜ்ரிவால் என்னைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னதே எனது பாக்கியம்தான். நாங்கள் சந்தித்துப் பேசியதை உங்களால் யூகிக்க முடியும். ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவருமே எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. அந்தவகையில் இந்த உறவு தொடர்கிறது. எனது தந்தை இருந்தபோது, இந்த வீடு அரசியல் தொடர்புடன் இருந்தது. அதை நான் ஓரத்தில் இருந்து கவனத்திருக்கிறேன். ஊழலுக்கு எதிராக நீண்ட காலமாகவே கெஜ்ரிவால் போராடி வருகிறார். ஊழல் மற்றும் மதவாதத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவருமே எனக்கு உறவினர்கள்தான். கெஜ்ரிவால் உடனான இந்தச் சந்திப்பு எனக்கு சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவியது” என்றார்.

தொடர்ந்து கமல் பிக்பாஸ் செட்டில் கப்சா நிருபரிடம் பேட்டி அளித்தார்: “ஓவியா இருந்தப்ப பிக்பாஸ் பார்த்தவர்கள் எண்ணிக்கை நான்கரை கோடி பேர். அவர் போன பிறகு ஒன்றரை கோடியாக டி.ஆர்.பி. குறைந்து விட்டது. வாய்ப்பிழந்த சினிமா நடிகர்கள், வயது முதிர்ந்த டிவி பர்சனாலிட்டிகள், முழங்கால் நட்டு கழன்ற நடன இயக்குனர்கள், சிரிப்பு வரவழைக்க தெரியாத காமெடியன்கள், எட்டாம் கிளாஸ் மாணவர்போல் கவிதை எழுதும் கவிஞர்கள், ஜூலி மாதிரி இன்ஸ்டண்ட் போராளிகள் அனைவரையும் அழைத்தாகி விட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் இல்லாதவர் அரசியல்வாதிதான், அந்த வகையில் ஓபிஎஸ் டெட்பாடி இருவரையும் அழைக்கலாம் என்றால் கோவில் குடமுழுக்கு என்று இருவரும் பிசி, எனவே மோடிக்கு சொம்பு தூக்க அவருக்கு பிடிக்காத கெஜ்ரிவாலை பிக்பாஸ் வீட்டிற்குள் அடைத்து அவரது ரகசிய நடவடிக்கைகளை படம் பிடித்து மிரட்டலாம் என இருக்கிறேன். இதன் மூலம் மோடியின் நன்மதிப்பை பெற முடியும் என நம்புகிறேன்.” என்றபடி ட்விட்டரில் பயணக் கட்டுரை எழுத தொடங்கினார்.

பகிர்

There are no comments yet