சென்னை: 1970களில் தான் எம்.ஜி.ஆர் அரசியலுக்குள் நுழைந்த காலம். அப்போது புதிய நடிகர்கள் திரைத்துறையில் எம்.ஜி.ஆர் அவர்களால் விழுந்த வெற்றிடத்தை பயன்படுத்திக் கொண்டு முன்னேறினர். அவர்களுள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் முக்கியமானவர்கள். அந்த காலகட்டத்தில் பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி கமல் இணைந்து பல படங்கள் நடித்தனர். பின்னர் இருவரும் எதிர்காலத்தை எண்ணி பேசி வைத்துக் கொண்டு சேர்ந்து நடிப்பதை நிறுத்தினர். இருவரது வருமானத்தையும் பெருக்கிக் கொள்ள பிரிந்து நடிக்கத் தொடங்கினர். இயக்குனர் ஷங்கர் தயாரித்த எந்திரன் திரைப்படம் முதலில் கமல்ஹாசனுக்காக எழுதப்பட்டது. பின்னர் கைகூடாததால் ரஜினிக்கு ஏற்றார்போல் கதை மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

எந்திரன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பையும் கமல் மறுத்ததாக கூறப்படுகிறது. இப்படி கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருந்த கமல் திடீரென்று அரசியல் ரஜினியுடன் பயணிக்கத்தயார் என்று கூறுவது நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது. கூத்தாடிகளான ரஜினி கமல் அரசியலில் பயணித்தால் அது கேலிக் கூத்தாக மாறும் என்றே எண்ணத் தோன்றுகிறது. கமல் தனது பரீட்சார்த்த முயர்சியில் ட்விட்டர் லாபரட்டரியில் வேதியியல் சோதனைகளை செய்வது சாமானியர்களை கடுப்பற்றுகிறது. ரஜினி என்கிற மாசும் கமல் என்கிற கிளாசும் சேர்ந்தால் அரசியலில் தூசாகி விடுமோ என்று தோன்றுகிறது. அதாவது கமல் ரஜினியை அழைக்கும் காரணம், ரஜினி மோடியின் காவி ஏஜெண்ட். கமல் மோடியின் கருப்புச் சட்டை ஏஜெண்ட். இருவரும் இணைந்து எதிர்வரும் திமுகவின் வெற்றிய சிதைக்க போடப்பட்ட மோடி மஸ்தானின் அஸ்திரம். சமீபத்தில் ஒரு புகைப்படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் உள்ள கமல் அமைச்சரவை எப்படி இருக்கும் என்ற சித்தரிப்பில் வெகுவாக ஊடகங்களில் பகிரப்பட்டது. அது வெறும் காமெடியாக பார்க்க முடியாது ஏற்கனவே திரைத்துறையில் கமலின் தலையீடு 200 சதவீதம், ஒருவேளை கமல் அரசியலுக்கு வந்தால் இன்னொரு மோடி மஸ்தானாகத்தான் பார்க்க முடியும். ஆனால் கமல்ஹாசனில் பிரவேசம் மத்திய அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மேலிடத்திற்கு (மோடி) செய்தி போயுள்ளது என்று ஒரு ஆங்கில நாளிதழ் தெரிவிக்கிறது.

எம்.ஜி.ஆர் திராவிடர் கழகத்தில் பழம் தின்று கொட்டை போட்டுவிட்டு தான் அதிமுக ஆரம்பித்தார். ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆர் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டுத்தான் முன்னுக்குவந்தார், ரஜினி கமல் இருவருக்கும் என்ன தகுதி இருக்கிறது என்றார் திமுக எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன். தயவுசெய்து பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பாருங்கள். கமல் பிக்பாஸ் வீட்டுக்குள் போனதும் அங்கிருந்த ஒரே ஒரு பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் அவர் காலில் விழுகிறார்கள். அந்தக் காலத்தில் ராஜாக்கள் ஆட்சியில் அடிமைகள் எப்படி உடலை வளைப்பார்களோ, மந்திரிகள் மகாராஜாவின் முன்னே எப்படி உடம்பை வளைப்பார்களோ அப்படி வளைக்கிறார் சிநேகன். பார்க்கவே அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது. ஜெயலலிதாவின் முன்னால் அம்பது மந்திரிகளும் கூழைக் கும்பிடு போட்டார்களே, அதேபோல் அத்தனை பேரும் அவர் காலில் விழுந்து கூழைக் கும்பிடு போடுகிறார்கள்.

பொதுவாகவே சினிமாக்காரர்கள் தங்களைக் கடவுளாக நினைத்திருக்கிறார்கள். அவர்களை அப்படி நினைக்க வைப்பது பொதுஜனம். நடிகர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித் தங்களைக் கடவுள்களாகவும் சூப்பர் மேன்களாகவும் நினைக்கும் சினிமாக்காரர்களுக்கு அந்தக் காரணத்தினாலேயே அரசியலுக்கு வரும் தகுதி இல்லாமல் போகிறது. அதில் முதலில் வருபவர் கமல். என்றைக்காவது, கமல் தன் வாழ்நாளில் மற்றவர் பேசுவதை ஐந்தே ஐந்து நிமிடம் காது கொடுத்துக் கேட்டிருக்கிறாரா? இப்படிப்பட்ட குணநலன் கொண்ட ஒருவர் அரசியலுக்கு எப்படி வர முடியும்? அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது, திமுக தான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அந்த வாக்குகளைப் பிரித்து, திரும்பவும் அதிமுகவின் பொம்மை ஆட்சி வருவதற்காக, மற்றும் பாஜகவை தமிழகத்தில் பலப்படுத்துவதற்காக அல்லது திமுகவை பலவீனப்படுத்துவதற்காக மோடி போட்ட திட்டமே கமலின் அரசியல் பிரவேசம் என்று பலர் நினைக்கிறார்கள். திமுகவும் ஊழல் கட்சிதான். ஆனால் திமுகவினால் மட்டுமே தமிழ்நாடு இன்னமும் அகண்ட பாரத அண்டாவுக்குள் அடையாளம் தெரியாமல் அழிந்து போகாமல் இருக்கிறது. கருணாநிதி மட்டும் இருந்திருக்காவிட்டால் நான் உங்களுக்கு இந்தியில்தான் கடிதம் எழுதியிருப்பேன். மறைமுகமாகவாவது தமிழின் தனித்துவத்தை நிலைநாட்டியவர் அவர். இல்லாவிட்டால் ஒரு மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று வைத்திருப்பாரா அவர்? நாடு என்றால் தேசம் என்று பொருள் இல்லையா? டியர் கமல், இத்தனை லோக்கல் அரசியல் பேசுகிறீர்களே, மோடி பற்றி ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள். என்ன ஆகிறது பார்ப்போம்? நிச்சயமாக உங்களை நாடு கடத்தி விடுவார்கள், அதில் சந்தேகமே இல்லை. ஏற்கனவே விஸ்வரூபம் பிரச்சினையின் போது ரிகர்சல் பார்த்தவர் தானே.

கமலின் திராவிடமும் பகுத்தறிவும் மிக மேலோட்டமானது. ஏனென்றால், அடிப்படையில் கமலும் ரஜினியும் ஒன்றுதான். இந்துத்துவம்தான். அதனால்தான் ஹே ராம் படத்திலும் விஸ்வரூபத்திலும் அத்தனை முஸ்லீம் எதிர்ப்பு இருந்தது. விஸ்வரூபத்தைப் பார்த்தால் ஏதோ முஸ்லீம்கள் எல்லோரும் ஏகே 47 துப்பாக்கிகளோடுதான் அலைகிறார்கள் என்ற எண்ணமே மேலோங்குகிறது. அப்படித்தான் அந்தப் படம் முஸ்லீம்களைச் சித்தரிக்கிறது. உங்களையெல்லாம் கடவுளாகப் பார்க்கிறார்கள். தொழுகிறார்கள். ஒருவேளை கமல் பதவிக்கு வந்தால் மீண்டும் ஊர் பூராவும் ஆண்டவனே கட் அவுட் தான். தினந்தோறும் காலில் விழும் அத்தனை பேரையும் தூக்கி விடுவதிலேயே ஐந்து ஆண்டுகள் முடிந்து விடும். உடனே அடுத்த தேர்தலில் உங்களைத் தூக்கி விடுவார்கள் மக்கள். ஏனென்றால், ஒவ்வொரு தேர்தலில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிராகப் போடுவதே தமிழர்களின் தலைவிதியாக இருக்கிறது. பிக்பாஸில் அடிக்கடி தான் ஒரு கவிஞன் என்று சொல்லிக் கொள்கிறார் கமல். நியூஸ் சைரன் பத்திரிகையில் நடுப்பக்கத்தில் கமல் புகைப்படத்துடன் ஒரு கவிதை வந்திருந்தது. கிராமத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கவிதை என்ற பெயரில் ஏதோ ஒன்றைக் கிறுக்குவான் இல்லையா, அப்படி இருந்தது அந்தக் கவிதை. இப்படித் தன்னைப் பற்றி கவிஞன் என்றும் மேதை என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதரிடம் ஆட்சி அதிகாரமும் சேர்ந்தால் என்ன ஆகும் கமல்? பத்து ஜெயலலிதா ஆட்சி செய்வது போல் இருக்கும். உண்மையிலேயே பயமாக இருக்கிறது.

பகிர்

There are no comments yet