நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவரும் வேளையில் அவருக்கு போட்டியாக நீங்களும் அரசியலுக்கு வருகிறீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் விரிவாக விளக்கமளித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் நேற்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் பல்வேறு ஊடகங்களுக்கும் சுழல் பேட்டி அளித்தார்.

அவர் அளித்த் பேட்டிகளின் தொகுப்பு:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவருவதால் நான் அரசியலுக்கு வர நினைக்கவில்லை. எனக்கு தேவை என்று நான் நினைப்பதனால்; தமிழகத்துக்கு தேவை என்று நினைப்பதனால் நான் வருகிறேன். தமிழக மக்கள் கொடுத்திருக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பேசி வருகிறேன்.

ஒரு நடிகனாக மக்களை மகிழ்வித்தேன் ஓர் அரசியல்வாதியாக மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என நம்புகிறேன். மக்கள் எனை விரும்புவதாகவே எனக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அரசியலுக்கு இத்தனை நாட்களுக்குள் வருவேன் நான் எந்த கால நிர்ணயமும் செய்யவில்லை. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியில் 100 நாட்களில் வருவீர்களா என்று எனக்கு முன்வைக்கப்பட்ட கேள்விக்கு அப்படி வைத்துக்கொள்ளலாம் என்றே கூறினேன்.

அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவேன். அதுதான் நியாயமாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது.

கொள்கை என்ன; குரு யார்?

அரசியல் கொள்கை குறித்தும் அரசியல் குரு குறித்தும் கேள்வி எழுப்ப்பபட்டதற்கு, “கொள்கை விஷயத்தில் அவசரப்பட முடியாது. ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அது நாடெங்கிலும் பேசப்படும் பேச்சு. தமிழ்நாட்டில் அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு மெத்தனம் கூடி விட்டது, பயம் போய்விட்டது. இந்த அடிப்படையில் கொள்கை குறிப்புகள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். அரசியல்வாதிகளுக்கான கோபம் மக்களிடம் இருக்கிறது என்பதுதான் உண்மை” என்றார்.

அரசியலில் குரு யார் என்ற கேள்விக்கு, “ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என்மீது கட்சி சாயம் பூசப்படும். நிஜமாக சொல்ல வேண்டும் என்றால் பலர் இருக்கிறார்கள். புதிய அரசியல்வாதிக்கு பன்முக தன்மை தேவை என்பது எனது கருத்து. கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோருடனான சந்திப்பு அரசியல் பாடம் கற்பதற்காகவே என்றால் அது மிகையாகாது” எனக் கூறினார்.

சினிமாவுக்கு முழுக்கு போடுவேன்..

அரசியலில் தீவிரமாக இறங்கிய பின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன். விஸ்வரூபம்-2 படத்தை முடிக்க வேண்டும். சபாஷ் நாயுடு படத்தையும் முடிக்க வேண்டும். அதை முடிக்காமல் நான் பொதுச்சேவைக்கு போனேன் என்றால் என்னை நம்பி படத்தில் காசு போட்டு இருப்பவர்களெல்லாம் ஏமாந்து விடக்கூடாது. எனவே அந்த படங்களை முடித்து விட்டுத்தான் இங்கு வருவேன். அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவேன். அதுதான் நியாயமாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது.

‘நீங்கள் முதல்வரானால் முதல் பணி..’

நீங்கள் முதல்வரானால் முதல் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, “நான் முதல்வரானால் என்று நீங்கள் சொல்லலாமே தவிர நான் சொல்லக்கூடாது. ஏனென்றால் அதுவல்ல எனது இலக்கு. மக்களுக்கான நல்ல விஷயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு நான் ஏதுவாக இருக்க வேண்டும். அப்படி வரவேண்டும் என்று சொன்னால், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்” எனக் கூறினார்.

எம்ஜிஆர், என்டிஆர் வழியில் வெற்றி..

“எம்ஜிஆர், என்டிஆருக்குப் பிறகு தனிக் கட்சி தொடங்கிய நடிகர்கள் சோபிக்கவில்லை என்று கூறப்படுவதை அடையாளமாக எடுத்துக்கொள்ள முடியாது. நான் எடுத்துக்கொண்டது எம்ஜிஆர், என்டிஆர் என்ற பெரிய வெற்றியாளர்களைத்தான். அந்த உதாரணத்துடன்தான் ஆரம்பிக்க வேண்டுமே தவிர தோற்றவர்களை பார்த்து எதையும் திட்டமிடக் கூடாது” என நடிகர்கள் அரசியலுக்கு வர நிலவும் எதிர்ப்பு குறித்து கூறினார்.

பாஜகவின் வலதுசாரி கொள்கைகள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. ஆனால் அதேசமயம், குறைந்தபட்சம் செயல்திட்டம் உருவானால் பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ள தயங்க மாட்டேன்.

தேர்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழல் வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன். அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவு ஏதோ உணர்ச்சிவயப்பட்டு எடுக்கப்பட்டது அல்ல. நிதானமாக யோசித்தே எடுத்துள்ளேன்.

பின்னர் கப்ஸா நிருபருக்கு பேட்டியில் கூறியதாவது: சினிமா அரசியல் இரண்டு இடங்களிலும் நடிக்க முடியாது, டூ மச் ஒர்க் லோட், எனவே கட்சி ஆரம்பித்தவுடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிடுவேன். நடிப்பு என் தொழில் அதை எங்கே செய்தால் என்ன. அது மட்டுமல்லாமல் கட்சி ஆரம்பித்து மோடியின் பாஜக-வுடன் கூட்டணி வைப்பதால் சினிமாவிலும் நடிக்க தேவையிருக்காது – என்றார்.

Credit: Tamil The Hindu

பகிர்

There are no comments yet