சென்னை: முடிவுகள் எடுக்க முடியாத கைப்பாவையாக துணை முதல்வர் ஓ.பி.எஸ். வைக்கப்பட்டிருப்பதாக சட்டமன்ற வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. அனைத்து துறைகளிலும் எடப்பாடி பழனிசாமியின் தலையீடு உள்ளதாம். தனது துறையின் கீழ் இயங்கும் அலுவலர்களை கூட தேர்ந்தெடுக்க முடியாத ஓ.பி.எஸ். திணறி வருவதாகவும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பாக இருக்கிறது. இரண்டு கட்ட போராக ஒன்றை தினகரனுக்கு எதிராகவும், இன்னொன்றை ஓபிஎஸ் சை சமாளிக்கவும் வேண்டி உள்ளதாக அதிமுகவில் கிசுகிசுக்கப் படுகிறது. வெளிப்படையான போர் தினகரனுக்கு எதிராகவும், மறைமுக போர் ஓ.பி.எஸ்.க்கு எதிராகவும், நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. அணிகள் இணைப்புக்கு முன்னதாக தனக்கு எதிராக செயல்பட்ட சில காவல் துறை அதிகாரிகளை மாற்ற ஓ.பி.எஸ். முற்பட்டதாகவும், அதற்கு எடப்பாடி முட்டுக்கட்டை போட்டதாகவும் தெரிகிறது. இதனால் கடுப்பாகிப் போன ஓ.பி.எஸ். அமைதியாக வேடிக்கை பார்ப்பதாகவும், சசிகலாவுக்கு எதிராக அம்மா சமாதியில் தியான போராட்டம் நடத்தியது போல் ‘சரியான’ நேரத்திற்காக காத்திருப்பதாகவும் மூத்த அதிமுக தொண்டர்கள் சிலர் கிசுகிசுக்கின்றனர்.

ஓ.பி.எஸ். அணியின் மூத்த தொண்டர் ஒருவர் கூறும்போது, “அணிகள் இணைத்ததே அபத்தமானது. மூன்று முறை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பி.எஸ். துணை முதல்வரானது முதல் அவருக்கு சரியான பதவி கொடுக்கப்பட்டது போல் ஒரு மாயத்தோற்றம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. அது உண்மை அல்ல, அவர் இன்னும் கீழ்த்தரமாகத்தான் நடத்தப்படுகிறார். ஓ.பி.எஸ்., எடப்பாடி இருவரும் கட்சியின் பெயர், சின்னம் திரும்ப கிடைக்கும் வரை தாக்குப்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த இணைப்பு நாடகம் என்பதே தினகரனிடமும் மன்னார்குடி கும்பலிடமும் இருந்து ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்டது, நடந்து கொண்டிருப்பது. தினகரனால் ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து இருவருக்கிடையான பனிப்போர் தீபாவளி பட்டாசில் தண்ணீர் ஊற்றியது போல் ஈரங்காத்துப் போய் கிடப்பில் போடப்பட்டுள்லது. அது மீண்டும் வெடிக்குமா அல்லது அமுங்கிப்போய் விடுமா என்பது தெரியவில்லை. அதுபோல் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற கூனிக் குறுகி உடம்பை வளைத்து பல காலம் பிழைப்பு நடித்திய ஓ.பி.எஸ். அவர்களுக்கு கடைசிவரை அந்த நிலை ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக உள்ளது. ரப்பர்ஸ்டாம்ப் துணை முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்து ஆட்சி பீடத்தில் அமர்வாரா, இன்னொரு தர்மயுத்தம் 2.0 நடைபெறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.” என்றார்.

பகிர்

There are no comments yet