சென்னை: மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தைத் திறந்துவைக்க தமிழக முதல்வரோ, துணை முதல்வரோ செல்லத் திட்டமிடாமல் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைப்பார் என்ற அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக சிவாஜி குடும்பத்தினரும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

அரசியல், திரைப்பட விமர்சகரான சுபகுணராஜனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் “சிவாஜி தமிழகத்தின் மிக முக்கியமான திரைப்பட ஆளுமை. எத்தனை காலம் கழித்தாலும் சிவாஜியின் திரைப் பங்களிப்பு நினைவுகூரப்படும். ஆய்வுக்குள்ளாகும். தமிழ்நாட்டின் குறிப்பிட்ட தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் சிவாஜியை தம் குடும்பத்தில் ஒருவராக அடையாளம் கண்டனர். அவர் நடித்த ஏதோ ஒரு படத்தின் ஏதோ ஒரு பாத்திரத்தோடு எல்லோரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வர்,” என்றார்.

தம்மைப் போன்ற பலருக்கும் அவரது உருவம் தந்தைமையை உருவகப்படுத்தும் உருவம் என்று கூறிய அவர், “பல சிக்கலான காரணங்களால் ஜெயலலிதா சிவாஜிக்கு உரிய மரியாதையைத் தரத் தவறினார். இப்போதுள்ள அரசு, சிவாஜியை சசிகலா குடும்பத்தோடு அடையாளம் காண விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. மற்றபடி அடி நீரோட்டத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. இது உண்மையில் வேதனையாக இருக்கிறது. அவருக்கு மரியாதை செய்திருந்தால் உண்மையில் இவர்களுக்குத்தான் மரியாதை கிடைத்திருக்கும்,” என்றார்.

ஆனால், இந்த அரசு அமைத்திருக்கிற மண்டபமும், திறப்பு விழாவும் அவருக்கு மரியாதை செய்வதற்குப் பதிலாக அவமரியாதை செய்யும் விதத்தில் உள்ளன என்றார் சுபகுணராஜன்.

கருணாநிதி தொடர்பு

எழுத்தாளரும், விமர்சகருமான தியோடர் பாஸ்கரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, மண்டபத் திறப்பு விழாவுக்கு போதிய முக்கியத்துவம் தரப்படவில்லையோ என்ற வாதத்தை அவர் மறுத்தார்.

“ஒரு காலத்தில் முக்கிய நட்சத்திரமாக விளங்குகிறவர்கள் காலப்போக்கில் முக்கியத்துவத்தை இழப்பது இயல்பாக நடக்கத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க ஆள்கள் வருவதில்லை, அரசே மாணவர்களை அழைத்துவர வேண்டிய சூழல் இருக்கிறது என்பதைக் காணலாம்” என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஆர்வம் காட்டாதது குறித்துக் கேட்டபோது, “சிவாஜியின் ரசிகர்களுக்கென்று அரசியல் வலிமை ஏதுமில்லை. அதுவுமில்லாமல், இவர்கள் சிவாஜியை கருணாநிதியின் ஆதரவாளராகப் பார்க்கிறார்கள்,” என்றார் அவர்.

சிவாஜியையும், அவரது குடும்பத்தாரையும் எடப்பாடி தலைமையிலான அரசு சசிகலாவோடு இணைத்துப் பார்ப்பதாகவே பல தரப்பினரும் இந்தப் புறக்கணிப்பைப் புரிந்துகொள்கின்றனர்.

சிவாஜி குடும்பத்தாரோடு ஒரு மேடையைப் பகிர்ந்துகொள்வதை முதல்வரோ, துணை முதல்வரோ விரும்பவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத சிவாஜி ரசிகர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியின்போது அவருக்கு சென்னை கடற்கரை சாலையில் சிலை வைக்கப்பட்டது. ஜெயலிதா முதல்வராக இருந்தபோது சர்ச்சைக்குரிய முறையில் அந்தச் சிலை அகற்றப்பட்டது. அவருக்கு உரிய முறையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. சென்னை அடையாறு பகுதியில் 2.8 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபமும் அமைத்தது. அதன் திறப்பு விழா அக்டோபர் 1ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எடப்பாடியும் ஓபிஎஸ்சும் நமது கப்ஸா நிருபருக்கு கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது: சிவாஜி அந்தக் காலத்து நடிகரா இருக்கலாம், ஆனால் அவரால் எங்களை மாதிரி பொது வெளியில் நடிக்கத் தெரியவில்லை. கேமரா முன்பு நடிப்பது சுலபம் எங்களைப்போல் நிஜத்தில் 24 மணி நேரமும் யாராலும் நடிக்க முடியாது. தூங்கும் போது கூட செத்தது போல் தினமும் நடிக்கிறோம். முன்பு ஜெயலலிதாவிடம் நடித்தோம், பின்பு சசிகலாவிடம் நடித்தோம். அவர் சிறைக்கு சென்ற பின் மோடியிடம் நடித்துக்கொண்டிருக்கிறோம். சொத்துக்காகவும், பதவிக்காகவும் நடிப்பை பிரதானமாக கொண்டு வாழ்ந்து வரும் எங்கள் இருவரை விட சிவாஜி என்ன பெரிய அப்பாடக்கர் நடிகரா என்று கேள்வி எழுப்பினர்.

With excerpts from BBC Tamil

 

பகிர்

There are no comments yet