மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார். சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்பட பல நடிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாநில அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ” நடிகர் திலகம் சிவாஜி, மாநில, தேசிய மற்றும் ஆசிய எல்லைகளை கடந்தவர். இந்த விழாவுக்கு யார் தடுத்திருந்தாலும் நான் வந்திருப்பேன்” என்று பேசினார். ”மாநிலத்தில் எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். எப்போதும் மக்களின் நினைவுகளில் வாழ்பவர் சிவாஜி கணேசன்” என்றும் கமல் ஹாசன் புகழாரம் சூட்டினார்.

விழாவில் ரஜினி பேசியதாவது: ஓபிஎஸ் அதிர்ஷ்டசாலி என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைக்கும் பாக்கியம் ஓபிஎஸ்.க்கு கிடைத்துள்ளது. சிவாஜி, நடிப்பு சக்கரவர்த்தி. நடிப்பில் புரட்சியை உண்டாக்கி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மொழி நடிகர்களாலும், இவரை போன்று யாராலும் நடிக்க முடியாது என அங்கீகரிக்கப்பட்டவர், சிவாஜி. அவர் வெறும் நடிகராக மட்டும் இருந்து இருந்தால் கண்டிப்பாக சிலையும், மணிமண்டபமும் அமைத்திருக்க முடியாது. அவர் படைத்த, விதைத்த, சாதித்த கதாபாத்திரங்கள், கடைக்கோடி மக்கள் வரை நடிப்பை கொண்டு சேர்த்தது தான் அவருக்கு மணிமண்டபம் அமைக்கக் காரணம். கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்த போதிலும் ஆன்மீகம் சார்ந்த படங்களில் நடித்து, வெற்றி கண்டவர். இறந்த பிறகு மண்ணாகிறவர்களுடன் பழக முடியும். சாம்பலாகிறவர்களுடனும் பழக முடியும். ஆனால் செத்த பிறகு சிலையாகிறவர்களுடன் பழகுவது அபூர்வம். பெருமையான விஷயம்.” என்றார். அரசியல் – சினிமா இணைந்த விழா இது. சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, அரசியல் பாடத்தையும் சொல்லிக் கொடுத்தவர். அவர் தனிக்கட்சி துவக்கி, தனது சொந்த தொகுதியிலேயே தோற்றுப் போனவர். அது அவருக்கு கிடைத்த அவமானம் அல்ல. அந்த தொகுதி மக்களுக்கு கிடைத்த அவமானம். இதன் மூலம் சிவாஜி மக்களுக்கு ஒரு செய்தி கொடுத்து விட்டு போயுள்ளார். அரசியலில் வெற்றி பெற வேண்டு மென்றால், சினிமா புகழ் மட்டும் போதாது.அதற்கு மேல் தேவைப்படுகிறது. அது மக்களுக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு சத்தியமாக தெரியாது. கமலுக்கு தெரியும் என நினைக்கிறேன். தெரிந்திருந்தால் எனக்கு சொல்ல மாட்டார். ஒருவேளை இரண்டு மாதத்திற்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருக்கலாம். நீங்கள் அரசியல் மூத்தவர் சொல்லுங்கள் என்றால் நீ என் கூட வா சொல்றேன் என்கிறார். இவ்வாறு ரஜினி பேசி கமலுக்கு செக் வைத்தார்.

இந்நிலையில், இந்த விழாவைப் பற்றி நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில்,”செவாலியே சிவாஜி அவர்களது மணிமண்டப விழா இனிதே நடைபெற்றது. சிவாஜி ஐயா அவர்களுக்கு இதைப் போலவும் இதைவிடப் பெரிதாகவும் நாங்கள் செய்வோம்,” என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து, கமல் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முன்னர் அதிமுகவினரிடம் இருந்து பாதுகாப்பு கொடுத்த போலீஸ்காரர்களை டீ காசு கொடுத்து அனுப்பி விட்டு கப்சா நிருபரிடம் பேசினார். “சினிமாவில் வெற்றிடம் விழும்போது (நடிகர்கள்) நாங்கள் அதிரடியாக படம் ஆரம்பிப்பதுபோல் பூஜை மட்டும் போடுவோம், அதாவது எனது தொடர் தோல்விகளின் போது நான் ‘மருதநாயகம்’ ஆரம்பித்து ‘சீன்’ காட்டியது போல.. அதுபோல் எனது படங்கள் தோல்வி அடைந்தபோது துணிக்கடை விளம்பரத்தில் நடிக்க வந்தேன். பின்னர் ட்விட்டரில் புரட்சி செய்து கொண்டே பிக்பாஸ் என்ற பித்தலாட்ட நிகழ்ச்சியை நடத்தி அடுத்த படத்திற்கு சான்ஸ் தேடிக் கொண்டே அரசியல் பிரவேசம் குறித்து ‘பாவ்லா’ காட்டிக் கொண்டிருந்தேன். அப்போது ஷங்கரிடம் இருந்து இந்தியன் – 2 படத்திற்கு சான்ஸ் வந்தது. நான் நிஜ கிழவனாகி விட்டதால் இந்த முறை அதிக மேக்கப் தேவைப்படாது என்று ஷங்கர் கருதியதாக ஒரு உதவி இயக்குனர் சொன்னார். உடனே ஒப்புக் கொண்டேன். இளவயது கமலாக நடிக்க ரோபோ அல்லது டூப் நடிகரை தேடி வருகிறோம். படம் முடிவான அன்று தான் சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக ‘டுபாக்கூர்’ அறிக்கையும் விட்டேன். விழாவில் ரஜினி பேசியது போல் சினிமா புகழ் மட்டும் அரசியலுக்கு உதவாது. சிலபல ‘ஜிகினா’ வேலைகளும் பித்தலாட்டங்களும் தெரிந்திருக்க வேண்டும். ரஜினி என்னுடன் சேர்ந்தால் தற்போது உள்ள எடப்பாடி ஓபிஎஸ் இருவரின் நாற்காலிகளிகளில் நாங்கள் அமர்ந்து மோடிக்கு சலாம் போடத் தயாராக உள்ளோம்.” என்றார். ரஜினியும் கமலும் ஒன்னு ரசிகனுங்க வாயில மண்ணு – என்று புலம்பியபடி இடத்தை காலி செய்தார் நமது கப்சா நிருபர்.

பகிர்

There are no comments yet