எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை , அதிமுக அம்மா அணி துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் டிடிவி தினகரன் உள்ளிட்ட 14 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ள சேலம் போலீஸார்,மாவட்டச்செயலாளர் செ.வெங்கடாச்சலம் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்..

கடந்த மாதம் பெரியார், அண்ணா பிறந்த நாளை ஒட்டி தினகரன் அணியின் சேலம் மாவட்டம் சார்பில் தினகரனால் தற்போது மாவட்டச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ செ.வெங்கடாச்சலம், சேலம் புற நகர் மாவட்டச்செயலாளர் எஸ்.கே.செல்வம், ஆகியோர் பெயர்களுடன் சேலம் கலைவாணி, பெங்களூர் வெற்றிவேல் ஆகியோர் துண்டுப் பிரசுரம் அச்சடித்து விநியோகித்திருந்தனர்.

அந்த பிரசுரத்தில் நீட்டுக்கு எதிரான வாசகங்களும், நீட்டை அமல் படுத்திய மத்திய அரசு, மாநில அரசுகளைக் கண்டித்தும், சசிகலா மற்றும் தினகரனை வாழ்த்தியும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. கட்சியில் களையெடுப்பு தொடரும் என்றும் வாசகங்கள் இருந்தன.

இது குறித்து சேலம் நகர அன்னதானம்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.ஆர்.எஸ்.சரவணன் எனபவர் அளித்த புகாரின் அடிப்படையில் அன்னதானம்பட்டி காவல் நிலையத்தில் டிடிவி தினகரன், புகழேந்தி, பெங்களூர் வெற்றிவேல், சேலம் கலைவாணி, மாவட்ட செயலாளர் செ.வெங்கடாச்சலம் உள்ளிட்ட 14 பேர் மீதும் மற்றும் பார்தால் அடையாளம் காட்டக்கூடிய 20 பேர் மீது சேலம் போலீஸார் தேசத் துரோக வழக்கு உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குத்தொடர்ந்துள்ளனர்.

தேசத் துரோக வழக்கு(124a), கூட்டுச்சதி(120B), தேசத் துரோக கருத்துக்கு ஆதரவாக பேசுதல்(153), சட்டவிரோதமாக கூடுதல்(143), அவதூறு பிரிவு(500), அவதூறாக பேசுதல்(504), ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல்(506/2) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதையடுத்து அதிமுக சேலம் மாவட்டச்செயலாளர் செ.வெங்கடாச்சலம் உள்ளிட்ட 3 பேரை சேலம் போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் எந்நேரமும் டிடிவி தினகரனை சேலம் போலீஸார் சென்னை வந்து கைது செய்ய வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இடையே மோதல் வலுத்து வருகிறது. அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் முதல்வராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் நீக்கப்பட்டார். ஓபிஎஸ் தனி அணி துவக்க எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமியை சசிகலா தேர்வு செய்து கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்கள் மூலம் சட்டமன்ற தலைவராக அறிவிக்கப்பட்டார்.

தினகரனை துணைப்பொதுச்செயலாளர் ஆக்கினார். சசிகலா சிறை சென்ற சில மாதங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணையும் பேச்சு வார்த்தை நடந்தது. தினகரன் ஒதுக்கப்பட்டார்.

பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. எடப்பாடி ஆட்சிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதில் ஜக்கையன் அணி தாவ மீதமுள்ள 18 எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவை தலைவர் தகுதி நீக்கம் செய்தார். தற்போது அந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பொதுக்குழுவை கூட்டிய ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி, அதிமுகவிலிருந்து சசிகலா, தினகரனை நீக்குவதாகவும், வழிகாட்டும் குழுவை அமைப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும், ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை விமர்சித்தும் தினகரன் ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். தினகரன் மீது சமீபத்தில் திருச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் குமார் புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி மீது பழைய வழக்குகள் மீது போலீஸார் கைது நடவடிக்கை எடுத்தனர். இருவரும் நீதிமன்றத்தை நாடி முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் உள்ளிட்ட 14 பேர் மீது சேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் கல்லூரி மாணவி வளர்மதி கதிராமங்களம் போராட்டத்துக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக கைது செய்த சேலம் போலீஸார் பின்னர் குண்டர் சட்டத்திலும் கைது செய்ததும் அது நீதிமன்றத்தில் ரத்தானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை அடையாறில் ஆண்டவா பவன் ஹோட்டலில் இட்லிக்கு சட்னி அதிமாக கேட்ட ஒருவரை போலீஸ் பிடித்து சென்று, பட்டினிக்கு எதிராக போராடியதாக வழக்குப் பதிவு செய்ததாக கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார். இவர் தினகரன் ஆதரவாளர் எனவும் நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet