மிழகத்தில் கடந்த 20 நாட்களில் 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 700 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரளவு கட்டுக்குள் இருந்த டெங்கு காய்ச்சல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கேரள மாநில எல்லையில் உள்ள கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் டெங்கு பாதிப்பு இருந்தது. தென்மேற்கு பருவமழை தமிழகத்திலும் பெய்யத் தொடங்கியதால், சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும், டெங்கு காய்ச்சலுக்கு காரணமான, ஏடிஎஸ் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்தன. இதனால் கேரள எல்லை மாவட்டங்கள் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் டெங்கு பரவத் தொடங்கியது.
குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். டெங்குவின் தீவிரத்தால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க இருப்பதால், டெங்குவின் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் கருதுகின்றனர்.
10 ஆயிரம் பேர் பாதிப்பு
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் சுமார் 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். செப்டம்பர் 30-ம் தேதி வரை டெங்கு பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 20 நாட்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் டெங்கு பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்ட வாய்ப்பிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தீவிர தடுப்பு நடவடிக்கை
டெங்கு பாதிப்பு குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளைவிட சற்று அதிகமாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. டெங்கு பரவுவதை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. டெங்கு குறித்து பொது மக்களிடம் குறும்படம், துண்டு பிரசுரம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒன்றாக இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகிறது. அதனால் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 11 ஆயிரம் பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் டெங்குவால் பாதிக்கட்டு மட்டும் சுமார் 700 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
காய்ச்சலை கவனிக்க வேண்டும்
சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் தானாகவே ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மலேரியா, டெங்கு, டைபாய்டு, எலி காய்ச்சல் போன்றவைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவ சிகிச்சை தாமதம், சுயமாக மருந்துகள் சாப்பிடுவது, போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெறுவது போன்றவற்றால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும். காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.
அதேபோல் பசி இல்லாமை, அதிக உடல் சோர்வு, தலைசுற்றல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்றுவலி, மலம் கருப்பாக வெளியேறுதல், மூச்சுவிட சிரமப்படுதல், மயக்கம் ஏற்படுதல், வாய், பல் ஈறுகள் மற்றும் மூக்கில் இரத்தம் கசிதல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். கஞ்சி, பழச்சாறு, இளநீர், கூழ், உப்பு-சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) போன்ற திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks