Reproduced from IE TAMIL

வி.கே.சசிகலாவின் பரோலுக்கு தமிழக அரசு தடை ஏற்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து அவரை அழைத்துவர டிடிவி.தினகரன் பெங்களூரு விரைந்தார்.

வி.கே.சசிகலா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி! ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக முதல்வர் பதவியை எதிர் நோக்கியிருந்தவர். அதிமுக.வின் பொதுச்செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டிருந்தவர்! ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை, அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியது.

வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பு தொடர்பாக சசிகலா தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி பலர் அவரை சந்தித்ததாகவும், சசிகலாவே விதிகளை மீறி சிறையை விட்டு வெளியேறியதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதனால் தனது நெருங்கிய உறவினர்கள் ஓரிருவர் இறந்த தருணங்களில்கூட சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்க வில்லை. அரசியல் ரீதியாக அவரது அணிக்கு தமிழகத்தில் பின்னடைவு ஏற்பட்ட தருணங்களிலும் அவர் தமிழகம் வர முயற்சிக்க வில்லை.

இந்தச் சூழலில் வி.கே.சசிகலாவின் கணவர் ம.நடராஜன், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கல்லீரம், கிட்னி, நுரையீரல் ஆகியன பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அக்டோபர் 3-ம் தேதி இரவில் அவருக்கு கல்லீரல் மாற்று கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. சிகிச்சைக்கு பிறகு அவர் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடராஜன் உடல் நிலையைத் தொடர்ந்து, சிறையில் இருந்து பரோலில் வெளியே வர முடிவெடுத்தார் சசிகலா. 15 நாட்கள் பரோல் கேட்டு கர்நாடக சிறை நிர்வாகத்திடம் சில தினங்களுக்கு முன்பே விண்ணப்பம் கொடுத்தார் அவர். பூஜை விடுமுறை காரணமாக அவரது விண்ணப்பத்தை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

வழக்கமாக இதுபோல கணவர் அல்லது மனைவி உடல்நிலை காரணமாக பரோல் கேட்டால், உடனே அனுமதி கொடுப்பது சிறை நிர்வாகத்தின் வழக்கம். ஆனால் சசிகலா சிறை விதிகளை மீறியதாக ஏற்கனவே புகார் உள்ளதால், இதில் சிறை நிர்வாகம் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க முடிவு செய்தது.

பரோல் விண்ணப்பத்தில் ம.நடராஜனின் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சசிகலா இணைக்கவில்லை. அதையே காரணம் காட்டி, பரோல் விண்ணப்பத்தை கர்நாடக சிறைத்துறை தள்ளுபடி செய்தது. பிறகு உரிய ஆவணங்களுடன் மீண்டும் மனு செய்யும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி உரிய மருத்துவ ஆவணங்களை இணைத்து இரண்டாவது முறையாக சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க… சசிகலா கணவர் நடராஜன், நிஜமாகவே உடல் நிலை அதிகமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறாரா?, சசிகலா பரோலில் தமிழகம் வருவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு வாய்ப்பு இருக்கிறதா? என இரு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கக் கோரி தமிழக அரசுக்கும் கர்நாடக சிறைத்துறை கடிதம் எழுதியிருக்கிறது.

ஆக, சசிகலாவின் பரோல் விடுதலை தமிழக அரசின் கைகளுக்கு வந்தது. நடராஜனின் மருத்துவ விவகாரங்களைப் பொறுத்தவரை, அதை தமிழக அரசு மறுத்து கூற வாய்ப்பில்லை. காரணம், தமிழக அரசு மறுக்க முடியாத அளவுக்கு மருத்துவ ஆவணங்கள் இருக்கின்றன.

ஆனால் சசிகலாவின் தமிழக வருகைக்கு தமிழக போலீஸ் ‘கிரீன் சிக்னல்’ கொடுக்குமா? என்கிற கேள்விதான் பிரதானமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் தனது கணவரை சந்திக்க வரும் சசிகலாவை தடுக்க முயற்சிப்பது சரியல்ல என்பதே தமிழக அமைச்சர்கள் பெரும்பான்மையினரின் கருத்தாக இருந்தது.

ஆனால் அப்படி தமிழக போலீஸ் கிரீன் சிக்னல் கொடுத்தால், ‘இந்த அரசு சசிகலாவுக்கு ஆதரவாக இன்னும் தொடர்வதாக’ அதிமுக தரப்பிலேயே சிலர் குமுற ஆரம்பிக்கலாம் என்கிற கருத்தும் சொல்லப்பட்டது. இதுதான் இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு இருந்த ஒரே சிக்கல்!

ஒருவழியாக இந்த விவகாரத்தில் அரசியலைக் கலக்காமல், சசிகலா பரோலுக்கு தமிழக போலீஸ் துறை கிரீன் சிக்னல் காட்டிவிட்டது. இன்று (5-ம் தேதி) இது தொடர்பான கடிதம் தமிழக அரசிடமிருந்து கர்நாடக சிறைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை காலை சசிகலா பரோலில் வெளி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் இருந்து வெளிவரும் சசிகலாவை வரவேற்று அழைத்து வர, டிடிவி.தினகரன் இன்று பிற்பகலில் பெங்களூரு விரைந்தார். அவரது ஆதரவாளர்களும் பெங்களூரு விரைகிறார்கள். அவர்கள் சசிகலாவை வரவேற்று அழைத்து வருவார்கள்.

சிறைக்கு செல்லும்வரை சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் தங்கியிருந்தார். ஆனால் தற்போது அந்த இல்லத்தை அரசு கைப்பற்றி நினைவு இல்லமாக்கும் முயற்சியில் இருப்பதால், சசிகலா அங்கு செல்ல வாய்ப்பில்லை.

சென்னையை அடுத்த சிறுதாவூரில் சசிகலா குடும்பத்தினருக்கு உரிய பங்களா இருக்கிறது. முன்பு ஜெயலலிதா அவ்வப்போது சென்று வந்த பங்களா இது. அங்கு சென்று தங்கியபடி, சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் சென்று தனது கணவரையும் சசிகலா கவனிப்பார் என தெரிகிறது.

இதையடுத்து எடப்பாடி அரசின் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் அவரை சந்திப்பார்கள் என்று தெரிகிறது. புது கவர்னர் நேரத்தில் இது எடப்பாடி அரசுக்கு மேலும் நெருக்கடி தரும் என்று கூறப்படுகிறது.

பகிர்

There are no comments yet