ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது அண்ணன் மகளான தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது அணிகள் இணைப்புக்கு முன்புவரை அவ்வப்போது சில அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்புக் கிளப்பிக் கொண்டிருந்த தீபா, அணிகள் இணைப்புக்குப் பின்னர் அதிகம் பேசவில்லை. அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்குப் பின்னர் அவரது வீட்டுக்குச் சென்றதன் மூலம் மீண்டும் பொதுவெளியில் தீபா தலைகாட்டத் தொடங்கினார்.

அ.தி.மு.க. சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அ.தி.மு.க.வில் தீபா அணியைச் சேர்ந்த எங்களுக்கும் சின்னத்தில் உரிமை உண்டு என்று கூறி அவரது தரப்பில் தேர்தல் ஆணையத்தில் 5,50,000 பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அ.தி.மு.க.வில் தீபா அடிப்படை உறுப்பினர் இல்லை என்பதால், அவர் சார்பில் தீபா பேரவையின் மாநிலத் தலைமைச் செய்தித் தொடர்பாளராக இருந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் என்பவர் அந்த ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், தீபாவுக்கும், பசும்பொன் பாண்டியனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது தீபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெறுவதாகக் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் பேசினோம். அவர் கூறுகையில், ‘தீபா அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. எனவேதான் என்னுடைய பெயரில் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைகோரி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தோம். என்னுடைய அனுமதி இல்லாமல் அவற்றை திரும்பப் பெற முடியாது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பணம் பெற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவாக தீபா செயல்படுகிறார். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்களைத் திரும்பப் பெறுவதாகக் கூறியதன் மூலம் இது உறுதியாகியுள்ளது.

வழக்கறிஞர் செல்ல ராஜாமணி

தீபா தொடங்கியுள்ள எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை இதுவரைப் பதிவு செய்யப்படவில்லை. அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவின் வாரிசு என்ற பெயரில் பலருக்கும் பதவி தருவதாகக் கூறிக்கொண்டு அவர்களிடம் தீபா பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற மோசடி வேலைகளில் தீபா ஈடுபடுவதை அறிந்த நிர்வாகிகள் பலர் விலகி தனியாகத் தொண்டர் அணியை உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்டவாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன். ஆலோசனைக்குப் பின்னர் அடுத்த கட்ட முடிவையும், தீபா பேரவை குறித்த சில உண்மைகளையும் வெளியில் சொல்வேன்’ என்றார் நிதானமாக.

இதுதொடர்பாக தீபா தரப்பு கருத்தை அறிய அவரைத் தொடர்பு கொண்டோம். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தீபா பேரவையின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் செல்லராஜாமணி, ’பசும்பொன் பாண்டியன் விவகாரம் குறித்து தீபாவுடன் நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக விரைவில் முடிவை அறிவிப்போம்’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ‘தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்களைத் திரும்பப் பெற்றதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை. தினகரனின் ஸ்லீப்பர் செல்லாகச் செயல்பட்ட பசும்பொன் பாண்டியனை பேரவையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
<p

மற்ற ஆதாரங்கள்Vikatan
பகிர்

There are no comments yet