ஓ.பன்னீர்செல்வத்தை அரசியலில் இன்னொரு நாவலராக வர்ணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் இரண்டாம் இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அடுத்து கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை இரண்டாம் இடத்தை அலங்கரித்தார். அதேபோல ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே 3 முறை முதல்வர் இருக்கையை ‘ருசி’ பார்த்த ஓ.பன்னீர்செல்வம், இப்போது எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் ‘நம்பர் 2’!

ஓ.பன்னீர்செல்வம் விட்டு இறங்கிய முதல்வர் இருக்கையை கெட்டியாக பிடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக-வில் தனது பிடியை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். இந்தப் பின்னணியில்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணமும், அக்டோபர் 12-ம் தேதி (இன்று) அவர் பிரதமர் மோடியுடன் நடத்திய சந்திப்பும் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஓ.பன்னீர்செல்வம், தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தார் என்பது அதிகாரபூர்வ செய்தி! ஆனால் அதுதான் நோக்கம் என்றிருந்தால், டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி உடன் சென்றிருப்பார்.

தங்கமணியையும், அதிமுக-வின் டெல்லி முகமான தம்பிதுரையையுமே தவிர்த்துவிட்டு தனது ஆதரவாளரான மைத்ரேயனை மட்டும் வைத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் இந்த சந்திப்பை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, இந்த பயணத்தில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகிய தனது தளகர்த்தர்களையும் உடன் ஓபிஎஸ் அழைத்துச் சென்றிருப்பதில் இருந்தே இது பக்காவான அரசியல் பயணம் என்பது புலப்படும்!

ஓ.பன்னீர்செல்வம் இந்த சந்திப்பின்போது முக்கியமான 5 மனக் குமுறல்களை பிரதமர் மோடியிடம் வெளிப்படுத்தியதாக கூறுகிறார்கள். அந்தப் பட்டியல் இங்கே!

1. ‘கட்சி எனக்கு, ஆட்சி அவருக்கு ( இபிஎஸ்-ஸுக்கு)’ என்கிற உடன்பாட்டின் அடிப்படையில்தான் அணிகள் இணைப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி ஆட்சியை இபிஎஸ் முழுக்க தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஆனால் கட்சியிலும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை அவரே வைத்துக்கொண்டு, அவரது கையொப்பம் இல்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு என்னை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.

2.ஆட்சியையும், மெஜாரிட்டி நிர்வாகிகளையும் இபிஎஸ் கைவசம் வைத்திருந்தாலும், மெஜாரிட்டி தொண்டர்கள் எனது அணி வசம் இருந்தனர். இப்போது கட்சியிலும் ஆட்சியிலும் எனக்கு மரியாதை இல்லாததால், அந்தத் தொண்டர்கள் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள். இது அதிமுக-வுக்கு பெரும் பின்னடைவு! இதனாலேயே பலர் டிடிவி தினகரன் பக்கம் போகிறார்கள்.

3. ‘பொதுச்செயலாளர் பதவியே இனி கிடையாது’ என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலமாக கட்சி தேர்தல் மூலமாக நான் அந்தப் பதவியை அடைவதையும் தந்திரமாக தடுத்துவிட்டார் இபிஎஸ். கட்சியில் எம்ஜிஆர் உருவாக்கி வைத்த அடிப்படை விதிமுறைக்கு எதிரான நடவடிக்கை இது!

4. அமைச்சர்கள் சிலரே (குறிப்பாக செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன்) அவ்வப்போது சசிகலாவை புகழ்ந்து பேசுகிறார்கள். அவர்களுக்கு கட்சி சார்பில் ஒரு நோட்டீஸ் கூட வழங்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர்கள் மீது என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. கட்டுப்பாடுக்கு பெயர்போன இந்த இயக்கம், இப்போது யாரும் எப்படியும் பேசலாம் என ஆகிவிட்டதால் மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது. இது திமுக-வுக்கு ஆதாயமாக அமையலாம்.

5. தனி அணியாக இயங்கிய போது, சசிகலாவை பகைத்துக்கொண்டு தைரியமாக என்னுடன் வந்த யாரையும் கெளரவிக்க முடியவில்லை. சசிகலாவுக்கு நெருக்கமானவர்களே கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதனால் இங்கு நடக்கும் ஒவ்வொன்றும் டிடிவி தினகரன் கவனத்திற்கு போய்விடுகிறது. எனவே கட்சியிலும் ஆட்சியிலும் எனக்கும் என்னை நம்பி வந்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் ஏற்படுத்தி தர வேண்டும்.

இந்த 5 குமுறல்களை முன்வைத்து, இதையொட்டியே ஓபிஎஸ் பேசியதாக கூறுகிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட மோடி, ‘இப்போதைக்கு அரசுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுங்கள்! உங்களுக்குள் பிரச்னை இருப்பதாக வெளியே எந்த இடத்திலும் தெரியப்படுத்த வேண்டாம். எல்லாம் உரிய காலத்தில் சரியாக நடக்கும்!’ என ஓபிஎஸ்-ஸுக்கு ஆறுதலாக வார்த்தைகளை உதிர்த்ததாக கூறுகிறார்கள்.

பிரதமரை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம், ‘எடப்பாடி பழனிசாமி எந்த வகையிலும் என்னை ஒதுக்கவில்லை. அவர் மூலமாக எனக்கு எந்த மன வருத்தமும் ஏற்படாது’ என பேட்டியளித்தும் இந்தப் பின்னணியில்தான்! ஆனால், ‘எதற்காக உங்கள் ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு டெல்லி வந்தீர்கள்? ஏன் மின் துறை அமைச்சரை தவிர்த்துவிட்டு, மைத்ரேயனை அழைத்துச் சென்றீர்கள்?’ என்கிற கேள்விகளுக்கு கடைசி வரை ஓபிஎஸ்-ஸிடம் சரியான பதில் இல்லை.

மற்ற ஆதாரங்கள்IE TAMIL
பகிர்

There are no comments yet