சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. மத்திய அரசால் மகத்தான திட்டங்கள் என்று பரப்புரை செய்து, கடும் விமா்சனத்திற்குள்ளாகின, மக்களை அலைக்கழித்த திட்டங்களான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றிற்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் மொ்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. மெர்சல் படத்தில் ஒரு காட்சியில் வடிவேலுவிடம் விஜய் பர்சில் பணம் இருக்கிறதா என்று கேட்கிறார். அதற்கு அவர் பர்ஸ் காலி என்று சொல்லிவிட்டு, இந்தியாவில் உள்ள யாரிடமும் பணம் இல்லை என்று பணமதிப்பிழப்பை குறிக்கும் வகையில் கூறுகிறார்.

அதே போன்று மற்றொரு காட்சியில் விஜய் சிங்கப்பூரில் குறைவான வரி வசூலிக்கிறார்கள் ஆனால் மருத்துவம், கல்வி இலவசமாகத் தருகிறார்கள். ஆனால் இந்தியாவில் அதிக வரி வசூலிக்கிறார்கள், இலவசம் கொடுக்கிறார்கள், ஆனால் மருந்து மாத்திரை மட்டும் இலவசமாக கொடுக்க மாட்டார்களா என்று பேசுகிறார். இவை ரசிகர்களிடையை பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி. இல.கணேசன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவா்கள், மத்திய அரசை விமா்சிக்கும் வகையிலான உண்மைக்குப் புறம்பான வசனங்களை மொ்சல் படத்திலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா். இந்நிலையில் பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா தனது டுவிட்டா் பக்கத்தில் தனது பங்கிற்கு கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில் மொ்சல் படத்தில் ஜி.எஸ்.டி. தொடா்பான வசனங்கள் விஜயின் பொருளாதார அறிவீனத்தை காட்டுவதாகவும், சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய் எனவும், இந்தியாவில் பள்ளிக்கல்வி மற்றும் மருத்துவம் இலவசம் தான் எனவும் பதிவிட்டுள்ளார். விஜய் அவர்களின் வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா? என கேட்டு உள்ளார். மேலும், நடிகா் விஜய் கிறிஸ்தவா் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அவரது பெயரை ‘ஜோசப் விஜய்’ என எச்.ராஜா பதிவிட்டுள்ளார். ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மொ்சல் படம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்குகிறது தயாரிப்பாளர் தரப்பு. மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணாவிடம் மெர்சல் தயாரிப்பாளர் முரளி உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் தமிழிசை என்ன பாஜகவின் தலைவரா அல்லது சென்சார் போர்டு சேர்மனா? படத்தை சென்சார் போர்டில் தான் காட்ட வேண்டும், இனி என்ன பாஜகவிடம் காட்டி அந்த வசனம், காட்சிகள் எல்லாம் அவர்களுக்கு ஏற்றாற் போல இருக்கிறதா என்பதை பார்த்துத் தான் வெளியிட வேண்டுமா? அப்படி நீக்கினாலும், ஏற்கனவே இணைய தளங்களில் வெளியான காட்சிகளை வைரலாக்கி பரப்புவோம் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் சென்சார் போர்டு இது போன்ற நெருக்குதல்களுக்கு ஆளாகும் என்ற சந்தேகம் மக்களிடையே வலுத்துள்ளது. அரசுக்கு எதிரான வசனங்களையோ, காட்சிகளையோ வைக்கும் சுதந்திரம் கூட திரைப்படங்களுக்குக் கிடையாதா? பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளரின் படங்களுக்கே இந்த நிலை என்றால் சிறு பட்ஜெட் படங்களில் எப்படி அரசியல் பேச முடியும்? இப்படியே போனால், மக்களைச் சிந்திக்கத் தூண்டும் படங்கள் அனைத்தும் தடுக்கப்படும் அவலம்தான் நிகழும் என ரசிகர்கள் அங்கலாய்க்கின்றனர். நமது கப்சா நிருபரின் புலனாய்வில், சமீபத்தில் ராணுவ மந்திரி பதவி நிர்மலா சீத்தாராமனுக்கு வழங்கப்பட்டதால் தமிழக பாஜக கொடுக்குகள் செம கடுப்பில் மெர்சலாகி இருப்பதால், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், கவுதமி போல் சென்சார்போர்டு உறுப்பினர்/அதிகாரி பதவிகளுக்கு அடி போட்டு எதிர்வரும் எந்திரன் 2.0 விஸ்வரூபம் 2 படங்களை சமோசா டீ சகிதம், ஓசியில் பார்த்து, சர்ச்சையை கிளப்பி, பாஜக அராஜக அரசியல் செய்ய அடிபோடுவதாகவும் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet