சென்னை:  தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுக உதாசினத்தால் வட சென்னைக்கு ஆபத்து. சென்னை- காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்த வேண்டும்’ என்று கமல்ஹாசன் நேற்று ஒரு புதிய ட்வீட் பதிவுசெய்திருந்தார். மேலும், அந்த ட்வீட்டில் அவர், `கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களில் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1,090 ஏக்கர் நிலத்தைச் சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம். வல்லூர் மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாகப் போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான். பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணைய் முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன. காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கொசஸ்தலையின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தைச் சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். நில வியாபாரிகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையையும் உதவியையும் ஏழை மக்களுக்குக் கொடுக்காத எந்த அரசும் நல் ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைதான் ‘ என்று குறிப்பிட்டிருந்தார்.

டிகர் கமல்ஹாசனின் ஒவ்வொரு டுவீட்டுக்கும் தமிழக பிஜேபி தலைவர்களான தமிழிசையும், எச்.ராஜாவும் பதிலடி கொடுத்து வந்தனர். அவர்கள், கமல் முதலில் டுவிட்டரை விட்டுவிட்டு மக்கள் பணிகளில் இறங்க வேண்டும். அதன் பிறகு அவர் அரசியலுக்கு வரலாம் என்றனர்.
இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் வடசென்னைக்கு ஆபத்து என்று நேற்று கமல் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். ஆயிரம் ஏக்கர் நிலம் கபளீகரமாகும் நிலை இருப்பதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக யாரும் எதிர்பாராத வேளையில் இன்று அதிகாலை 5 மணிக்கு எண்ணூர் துறைமுகம்,

சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார். தனது ரசிகர் மன்றத்தினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் திடீரென சென்றார். எ ண்ணூர் துøறுமுகத்தில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அதன்பிறகு கொசஸ்தலை ஆறு முகத்துவாரத்தையும் அவர் பார்வையிட்டார். மேலும் அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றையும் கமல்ஹாசன் பார்வையிட்டார். அங்கு மழை  நீர் தேங்கியிருப்பதை பார்த்தார்.

ஏன் இந்த பகுதி இப்படி இருக்கிறது. அரசு செய்யாவிட்டாலும் நாமே சுத்தம் செய்யலாமே என்று அப்பகுதி மக்களுக்கு ஆலோசனை கூறினார். இங்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் எவரும் வரவில்லை. எங்களுக்கு வேண்டிய எந்த உதவியும் செய்யவில்லை. நீங்களாவது வந்து பார்த்தீர்களே என்று பெண்கள் கைகூப்பி கமல்ஹாசனுக்கு நன்றி கூறினர். எங்களுக்கு உங்கள் மூலமாக விமோசனம் கிடைக்கட்டும் என்று ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.

பின்னர் நமது கப்ஸா நிருபர் குழுவுக்கு பேட்டியளித்தார்

“எதற்காக எங்களை அழைத்தீர்கள்?” என்று நிருபர்கள் கேட்கிறார்கள்.

கமல் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட அடித் தொண்டையில் “நான் அழைத்தேன் என்பதை விட நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதுதானே நிஜம்?”
நிருபர்கள் குழம்பிப் போகிறார்கள்.

“அப்படியானால் நீங்கள் யாரையும் அழைக்கவில்லையா?”

“அழைத்தேன் என்பதை விட அழைக்கச் சொல்லிச் சொல்லப்பட்டவர் தன் பணியைச் செவ்வனே செய்ததன் அடையாளமாய்த்தானே அழைக்கப்பட்டவர்கள் தவறாது வந்திருக்கும் நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது? வருபவனும் அழைப்பின் ஒரு அங்கம்தானே?”

”என்னங்க இது ஆதி சங்கரர் மாதிரி பேசறீங்க?”

“நான் சொல்வதைத்தான் ஆதி சங்கரரும் சொல்லியிருக்கிறார் என்று நீங்கள் நினைப்பதைச் சொல்லாக வெளியிடும் போது ஆதிசங்கர்ரும் நானும் சர்வ சமம் என்பதால் எதற்கு எதை சமன்படுத்துவது என்பதில் வேறுபாடுகள் இன்றி….”

“விட்ருங்க சார் வயித்தைக் கலக்குது. நீங்க ஏன்
இப்ப அரசியல்ல குதிக்கறீங்க?”

“உப்பு சத்தியாக்கிரஹத்துக்கு ஆதரவாக நான் குரல் எழுப்பிய போதே என் அரசியல் பணிகள் தொடங்கிவிட்டன”

“அப்ப நீங்க பிறக்கவே இல்லை சார்?”

“பிறப்புரிமை பற்றிப் பேசுவது உப்பு சத்தியாக்கிரஹம். பிறந்த பிறகு வருவதா பிறப்புரிமை? உரிமை இருப்பதால்தானே பிறக்கிறோம்? அப்படியானால் பிறப்புரிமை பிறப்புக்கு முன் வருவதுதானே?”

“பிறக்கிறதுக்கு முன்னேயே ஆதரிச்சிட்டீங்களா?”

“என் பிறப்பு ஆதரிக்கப்பட்டதால் நிகழ்ந்தது. என் தாயை என் தந்தை ஆதரித்ததால் நிகழ்ந்தது. என் தாய் திருமணத்தை ஆதரித்ததால் நிகழ்ந்தது. அவர்கள் இருவரையும் அவர்கள் பெற்றோர் ……”

“மன்னிச்சிடுங்க சாமி. ஆதியிலேர்ந்தே அரசியல்ல இருக்கீங்கன்னு ஒத்துக்கிடறோம். கருப்பு சட்டை போட்டிருக்கீங்களே நீங்க திராவிடக் கட்சிக்கு ஆதரவா?”

“கருப்பில் திராவிடம் ஆரியம் ஆத்திகம் நாத்திகம் எல்லாம் இருக்கிறது”

“என் நிறம் காவியல்லன்னு சொன்னீங்களே?”
“காவியும் கருப்புக்குள் இருக்கிறது. பச்சை, ஊதா, மஞ்சள் எல்லாமும் இருக்கிறது”

“நிறங்கள் எல்லாத்தையும் கலந்தா வெள்ளைதாங்க வரும், கருப்பு இல்லை”

“கருப்பு என்றால் என்ன? இருட்டு. இருட்டில் எல்லா நிறமும் கருப்பாய்த் தெரிவது இயற்கையல்லவா என்பதை செயற்கையாக சத்தமாகச் சொல்ல வேண்டிய இழிநிலைக்கு எதிராகக் குரல் கொடுக்க மக்களுக்காக முதல்வராகத் தயார்”

“அதுக்கு முதல்வர் பதவி எதுக்குங்க? சும்மாவே குரல் கொடுக்கலாமே?”

“நான் ஆங்கிலத்தில் சொன்னதைத் திரித்துக் கூறும் ஊடகக்காரர்களின் குறும்பினால் பதவி என்று நான் சொல்லாத வார்த்தை சேர்ந்து கொண்டது என்று சொல்ல விழைகிற போது நான் ஊடகத்தின் எதிரியாகச் சித்தரிக்கப்படும் அபாயங்கள் தெரிந்தே நான் …..”

“ஐயோ ராமா! முதல்வர்ங்கிறது பதவி இல்லையா?”
“முதல்வர் என்பது பதவியல்ல. பதவிக்கு முதல்வர் என்று பெயர்”

“என்ன இழவு வித்யாசங்க?”

“கல்லூரி முதல்வர், கட்சிமுதல்வர், ஆட்சி முதல்வரெல்லாம் பதவியின் பெயர்கள். ஓட்டப் பந்தய முதல்வர் என்பது பதவியின் பெயரா? நடிப்பில் முதல்வர் என்றால் பதவியின் பெயரா? அவையெல்லாம் பெயரின் பதவிகள். ஆகவே முதல்வர் என்பது…”

டர்ர்ர்ர்ர்ரென்று சப்தம்.

கேள்வி கேட்ட நிருபர் சட்டையைக் கிழித்துக் கொள்கிறார்.

அவரிடம் போய் இன்னொரு நிருபர் “ஏன் சட்டையைக் கிழிச்சிகிட்டீங்க?” என்கிறார்.
“சட்டையை நான் கிழித்தேனா அல்லது சட்டை என்னால் கிழிக்கப்பட்டதா என்பதையெல்லாம் யோசிப்பதற்கு பதில் சட்டை கிழிந்திருக்கிறது என்பதுதானே நிஜம்? கிழிந்த சட்டைகள் தைக்கப்பட வேண்டும். தைக்கிறவனெல்லாம் தையற்காரனல்ல. சமூகத் தையற்காரர்கள் கிழிந்த சமூகத்தை ….”

இப்போது நூற்றுக் கணக்கான சட்டைகள் கிழியும்.. சாரி கிழிக்கப்படும் … சாரி கிழிந்த சட்டை….சப்தங்கள்

ஆக்கம் KG Jawarlal

மற்ற ஆதாரங்கள்KG Jawarlal
பகிர்

There are no comments yet