அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாகத்தான் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
நடிகர் கமல்ஹாசனின் 63-ஆவது பிறந்த நாள் விழா (பிறந்த நாள் நவ.7 என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தில் 39-ஆவது ஆண்டு விழா சென்னை கேளம்பாக்கத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியது:
நான் கட்சி தொடங்குவது உறுதி. அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாகத் தான் செய்ய முடியும். கட்சி துவங்குவதற்கான முதல் பணி தான் மொபைல் ஆப் அறிமுகம். நவம்பர் 7-ஆம் தேதி எனது பிறந்த நாளன்று மொபைல் போன் செயலியின் பெயரும், செய்முறை விளக்கமும் அறிமுகம் செய்யப்படும். கட்சி துவங்க பணம் தேவை என சொல்கின்றனர். ரசிகர்கள் நினைத்தால் அதனை தந்துவிடுவார்கள். அரசியல் கட்சி துவங்க பணம் குறித்த பயம் எனக்கு இல்லை. ரசிகர்களிடமிருந்து பெறும் பணத்திற்கு கணக்கு வைக்க இந்த செயலி பயன்படும்.
ஏதோ ஆர்வத்துக்காக, பதவிக்காக பிரச்னைகள் பற்றி நான் பேசவில்லை. சரித்திரத்தை திரும்பிப் பார்க்காமல் செய்த தவறை திரும்பிச் செய்கிறோம். இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை-பணக்காரர்கள் பற்றி தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமா? வரும் முன் காக்க அனைவரும் முன் வர வேண்டும்.
பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம்: இது ஆரம்ப கூட்டம்தான். இதுபோன்று இன்னும் 50 கூட்டங்களை நடத்த வேண்டும். நவம்பர் 7 -ஆம் தேதி கேக் வெட்ட வேண்டியது இல்லை. கால்வாய்கள் வெட்ட வேண்டிய நேரம். பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்றார் நடிகர் கமல்ஹாசன்.

பகிர்

There are no comments yet