திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி வீடுதேடி வந்து சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தினத்தந்தி’ நாளிதழ் பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மோடியின் பயணத் திட்டத்தில் கருணாநிதியுடனான சந்திப்பு இடம்பெறவில்லை. “தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்திக்க இருக்கிறார்” என பாஜக தேசியப் பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று காலை 8.37 மணிக்கு தகவல் வெளியிட்ட பிறகுதான் அனைவருக்கும் தெரியவந்தது. அந்த அளவுக்கு இந்தச் சந்திப்பு ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர்களிடம் பேசியபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. நவம்பர் 6-ம் தேதி மோடி சென்னை வருவது ஒரு மாதத்துக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. சென்னை வருகை உறுதியான உடன் பிரதமரின் இணைச் செயலாளர் தனது மகள் திருமணத்தை அதே தேதியில் சென்னையில் வைத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த 2016 டிசம்பர் 6-ம் தேதி மோடி சென்னை வந்தார். அதனைத் தொடர்ந்து 11 மாதங்களுக்குப் பிறகு சென்னை வரும் மோடியை வரவேற்க தமிழக பாஜகவினர் ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதர ராவை அழைத்த மோடி, சென்னை பயணத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது அவரை சந்திப்பது சாத்தியமா, மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஸ்டாலினைத் தொடர்பு கொண்ட முரளிதர ராவ், மோடியின் விருப்பத்தை தெரிவித்துள்ளார். அப்போது வெளிநாட்டில் இருந்த ஸ்டாலின், “கருணாநிதியின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 19-ம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு வந்து முரசொலி பவள விழா காட்சி அரங்கத்தை பார்வையிட்டார். வீட்டில் நடந்த குடும்ப திருமண நிகழ்விலும் பங்கேற்றார். எனவே, பிரதமர் சந்திப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மோடியை வரவேற்க நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதன் பிறகே கருணாநிதியை பிரதமர் சந்திப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்காக தனது, வெளிநாட்டு பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு ஸ்டாலின் சென்னை திரும்பினார். பிரதமர் அலுவலக அதிகாரிகளும் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கருணாநிதியை சந்தித்தால் என்ன நடக்கும் என ஆர்வமுடன் மோடி விசாரித்துள்ளார்.

திட்டமிட்டபடி சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பும் முன், பகல் 12.12 மணிக்கு கோபாலபுரத்துக்கு வந்தார் மோடி. வீட்டின் நுழைவு வாயிலில் பொன்னாடை அணிவித்து வரவேற்று ஸ்டாலின் முதல் தளத்தில் இருந்த கருணாநிதியின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோரும் அப்போது உடனிருந்தனர். ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனை மருத்துவர் அரவிந்தன், கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மோடியிடம் எடுத்துக் கூறினார்.

கருணாநிதியை பார்த்ததும் அவரது கரங்களைப் பற்றிக் கொண்ட மோடி, உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்துள்ளார். தான் குஜராத் முதல்வராக இருந்தபோது டெல்லியில் சில முறை கருணாநிதியை சந்தித்ததை நினைவுகூர்ந்த மோடி, அவரது அரசியல் சாணக்கியத்தனத்தை வியந்துள்ளார்.

டெல்லியில் தன்னைச் சந்தித்த கருணாநிதி, உங்களைப் பற்றி என்னென்னவோ சொன்னார்கள். அப்படி இருப்பார், இப்படி இருப்பார் என்றார்கள். ஆனால், நீங்கள் மிகவும் நட்புடன் ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள் என பாராட்டியதை ஸ்டாலினிடம் குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார் மோடி.

சந்திப்பின்போது தான் எழுதிய, ‘குறளோவியம்’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் மற்றும் ‘முரசொலி பவள விழா மலர்’ ஆகியவற்றை கருணாநிதி பரிசாக வழங்கினார். சந்திப்பு முடிந்ததும் கீழ்தளத்துக்கு வந்த மோடி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளையும் சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளார்.

மோடி – கருணாநிதி சந்திப்பு குறித்து ‘தி இந்து’விடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “அரசியலில் எதிரெதிராக இருந்தாலும் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது டெல்லியில் இயல்பான ஒன்று. தமிழகத்தில்தான் மற்ற கட்சித் தலைவர்களைச் சந்திப்பதை அதிசயமாகப் பார்க்கிறார்கள். பாஜகவின் அரசியல் எதிரியான லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் இல்லத் திருமணங்களில் மோடி கலந்து கொண்டுள்ளார். சோனியா, ராகுல் காந்தி ஆகியோருடன் பொதுநிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். அதுபோல கருணாநிதியை மோடி சந்தித்ததும் மரியாதை நிமித்தமான சந்திப்பே. இதில் துளியும் அரசியல் இல்லை. கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்பதை மோடியே முடிவு செய்தார். இது மோடியின் அரசியல் நாகரிகத்தையும், அனைத்து தரப்பையும் மதிக்கும் பண்பையும் காட்டுகிறது. கருணாநிதியின் கரங்களைப் பற்றிக் கொண்டு, ஓய்வெடுக்க பிரதமர் இல்லத்துக்கு வாருங்கள் என பரிவுடன் மோடி விசாரித்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது” என்றார்.

கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் திட்டங்களுக்கு எதிர்ப்பு, நீட் தேர்வு, காவிரி பிரச்சினை, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு என மோடிக்கு எதிரான சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. சமூக ஊடகங்களில் மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுகவுக்கு இணையாக பாஜகவையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அதிமுக அரசை மோடி இயக்கி வருவதாகவும், மோடியின் சொல்படியே முதல்வர் பழனிசாமி செயல்படுவதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் கருணாநிதியை மோடி சந்தித்திருப்பது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பை சரிகட்டவும், நாங்கள் உங்களை மட்டும் நம்பியில்லை என்பதை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எச்சரிக்கவும் மோடி மேற்கொண்ட அரசியல் நடவடிக்கையே இது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது

பகிர்

There are no comments yet