ஜெயா டி.வி. நிர்வாக அதிகாரியான விவேக் இல்லத்தில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை சசிகலா ஆதரவாளர்கள் சோதனை போட்ட காமெடி நடந்தது.

ஜெயா டி.வி அலுவலகம் மற்றும் சசிகலா உறவினர்கள் வட்டாரத்தை சேர்ந்த 187 இடங்களில் இன்று (நவம்பர் 9-ம் தேதி) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அதிகாரிகள் படு சுறுசுறுப்பாக இயங்கிய இடங்களில் முக்கியமானது சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் இல்லம்!

விவேக், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன்! இவரது சகோதரி கிருஷ்ணபிரியாவில் தி.நகர் இல்லத்தில்தான் பரோலில் வந்த சசிகலா ஒரு வாரம் தங்கியிருந்தார். அந்த தி.நகர் இல்லமும் இன்று ரெய்டுக்கு உள்ளானது.

விவேக் மீதான நம்பிக்கையில்தான் ஜெயா டி.வி.யை நிர்வகிக்கும் பொறுப்பை அவரிடம் சசிகலா ஒப்படைத்திருந்தார். ஜெயா டிவி அலுவலத்திற்கும், விவேக் இல்லத்திற்கும் சென்ற ஐ.டி. அதிகாரிகள் இரு இடங்களிலும் மிக தீவிரமாக சோதனைகளை மேற்கொண்டனர்.

விவேக்கின் 3 செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றி வைத்துக்கொண்டனர். அவரை வீட்டில் ஒரு இடத்தில் உட்கார வைத்தனர். வேறு யாரிடமும் அவரை தொடர்பு கொள்ள விடவில்லை. அங்கு சோதனை நடந்தது குறித்து அறிந்ததும், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பலர் அங்கு சென்றனர். அவர்களையும் விவேக்கை பார்க்கக்கூட அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.

காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. இடையில் மத்தியானம் உணவு வாங்க அதிகாரிகள் சிலர் வெளியே சென்றார்கள். அந்த அதிகாரிகள் உணவு பார்சல்களுடன் மீண்டும் அங்கு வந்தபோது சசிகலா ஆதரவாளர்கள் வழி மறித்துக் கொண்டனர்.

இதனால் ஐ.டி. அதிகாரிகள் திகைத்தனர். இது குறித்து சசிகலா ஆதரவாளர்கள் குறிப்பிடுகையில், “விவேக் இல்லத்தில் ஐ.டி அதிகாரிகளால் எந்த முறைகேடையும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே வெளியே இருந்து எதையாவது எடுத்து வந்து வீட்டுக்குள் வைத்துவிட்டு, விவேக் மீது பழிபோட வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவர்களை சோதனை போட்டுவிட்டுத்தான் உள்ளே அனுமதிப்போம்’ என விடாப்பிடியாக கூறினார்கள்.

வழக்கமாக சோதனை போட வரும் அதிகாரிகள் அந்த வீட்டில் இருப்பவர்களை பரிசோதிப்பது வழக்கம். இங்கு அது உல்டாவாக மாறியதுதான் காமெடி! அதிகாரிகளும் வேறு வழி இல்லாமல் சாப்பாடு பார்சல்களை பரிசோதிக்க ஒப்புக்கொண்டனர். அதன்பிறகே அதிகாரிகள் உள்ளே நுழைய முடிந்தது.

விவேக் இல்லத்தில் இரவு வரை சோதனை போட்ட அதிகாரிகள், விவேக்கின் மாமனார் பாஸ்கரின் பணப் பரிவர்த்தனை விவரங்களை கேட்டு வாங்கினர். சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து விவேக்கிடம் கையெழுத்து பெற்றதாகவும் கூறப்படுகிறது. சோதனை முடிந்து விவேக் வீட்டில் இருந்து அதிகாரிகள் வெளியே வந்தபோது, மத்திய அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக சசிகலா ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.

Credit: Veeramani K

 

பகிர்

There are no comments yet