சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 600 சொத்துக்கள் சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டவை என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம் 6ம் தேதி  பெங்களூர் சிறையிலிருந்து  பரோலில் வந்த சசிகலா ரகசியமாக சொத்துக்களை உறவினர்கள்  மற்றும் பினாமி பெயர்களில் பத்திரப் பதிவு செய்ததும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது. சசிகலா மற்றும் இளவரசி சேர்மனாக இருக்கும் நிறுவனங்கள், தொழில்கள் மற்றும் ஜெயா டிவி உள்பட 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயர்களை ஏற்கனவே இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியா மற்றும் மகன் விவேக் ஆகியோர் பெயர்களில்  மாற்றி அமைத்துள்ளனர். மேலும் பரோலில் வெளியே வந்த 5 நாளில் சசிகலா 600க்கும் மேற்பட்ட பத்திரங்களை இரவும் பகலும் மாறி மாறி  பெயர் மாற்றம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் 10 போலி நிறுவனங்கள் மூடப்பட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில், சசிகலா மற்றும் அவர்களது குடும்பம், நிறுவனங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் 9-ந் தேதியன்று வருமான வரி சோதனை தொடங்கியது. 3-வது நாளாக நேற்றும் 40 இடங்களில் நடந்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் சசிகலாவின் தம்பி திவாகரனின் செங்கமலத்தாயார் கலை, அறிவியல் கல்லூரியில் 3-வது நாளாக நேற்று  வருமான வரித்துறையினர்  சோதனை நடத்தினர். திவாகரன் கல்லூரியில் 50 அதிகாரிகளின் அதிரடி சோதனையில் மூட்டை மூட்டையாக சிக்கிய பணம், தங்கம், ஆவணங்கள் அதிர்ச்சி அளித்தன. இந்த  சோதனைக்காக 15 கார்களில் 50 அதிகாரிகள் வந்திருந்தனர். மத்திய, மாநில உளவுத்துறையில் இதற்காக ரகசியமாக சிலரை நியமித்து பல்வேறு தகவல்களை ஒப்பீடு செய்து சரி செய்து கொண்ட பிறகே சசிகலா மற்றும் நடராஜனுக்கு கீழுள்ள அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளை பொறி வைத்து பிடித்துள்ளது. புதியதாக சிக்கிக் கொண்ட நபர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்த வருமான வரித்துறையினர் அவர்களிடம் துருவி துருவி விசாரணை செய்ததில் 300க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அந்த ஆவணங்கள் அனைத்தும் புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டவை. சுடச் சுடச் கையெழுத்து போட்ட ஆவணங்களாக இருப்பதை பார்த்த வருமான வரித்துறையினர் ஆடிப்போய் உள்ளனர். மேலும் கைப்பற்றிய ஆவணங்களின் உண்மையான மதிப்பு எவ்வளவு என (சுமார் 1800 கோடி) சரிபார்க்கும் வேலை முடிந்ததும் இந்த மெகா ரெய்டை மிக விரைவில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பிரிவுகளுக்கு மாற்றம் செய்ய தயாராகி வருகிறது வருமான வரித்துறை. இதில் மொத்தம் 215 சொத்துக்கள், 355 நபர்கள், 2 லட்சம் போலி நிறுவனங்கள் கொண்ட சாம்ராஜ்ஜியம் எத்தனை வருடமாக நடக்கிறது என்று ஆச்சரியப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி அதிர்ச்சியில் சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நடக்கத் தொடங்கி விட்டார் என கோபாலபுரம் பட்சி கூறியது. “ஒரு துறையை விட்டு வைக்கவில்லை, சினிமா, சாராயம், ஏற்றுமதி, ஆடைகள், ரியல் எஸ்டேட், தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று பல துறையில் வணிகம் செய்தது தெரியவந்துள்ளது.
நான் பார்த்து திருமணம் செய்து வைத்த சசிகலா 33 வருடம், ஜெயலலிதாவுடன் இருந்து இதைத்தான் செய்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் சம்மதத்துடன் தான் நடந்திருக்கும், எங்கள் குடும்ப புகைப்படத்தை மிஞ்சும் வகையில் சசிகலா, சசிகலா, நடராஜன், தினகரன், திவாகர், இளவரசி, வினோதன், இவர்களது சொந்தங்கள், சொந்தங்களின் சொந்தங்கள். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், ஜோதிடக்காரர் என்று வட்டம் பெரிதாக உள்ளது. இவர்களை இந்தளவு வளர்த்துவிட்ட ஜெ தான் முதல் குற்றவாளி, இவர்களை பற்றி தெரிந்து வாக்களித்த மக்கள் இரண்டாம் குற்றவாளி, இத்தனை வருடம் வேடிக்கை பார்த்த மத்திய அரசு மூன்றாம் குற்றவாளி, தனி நபர் ஜெ மீது கண்மூடித்தனமாக பாசம் வைத்த அதிமுக தொண்டர்கள் நான்காவது குற்றவாளி, விரைவில் 2ஜி தீர்ப்பு வரவிருக்கும் எனது மகள் கனிமொழி இந்த மாதிரி கொள்ளை அடித்து பிழைக்க தெரியாத ஐந்தாவது குற்றவாளி.” என்று அடுக்கு மொழியில் ஒப்பாரி வைத்தார்.” கருணாநிதி எழுந்து நடந்து அடுக்குமொழியில் பேசியதை கேள்விப்பட்ட ஸ்டாலின் அதிர்ச்சியில் மயக்கமடைந்ததாக நம்பத்தகாத செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
பகிர்

There are no comments yet