Reproduced from Vikatan, for better reach, no intention of violating copyright!

‘‘எங்களின் உண்மையான பினாமிகளை விட்டுவிட்டு, ஒன்றும் இல்லாதவர்களைப் பிடித்து ரெய்டு நடத்துவது எந்த வகையில் நியாயம்?’’ எனச் சிரித்தபடியே சீறுகிறார் டி.டி.வி.தினகரன். மொத்தக் குடும்பமும் ரெய்டில் சிக்கிய நிலையில், தைரியமாக வெளியில் வந்து பேசிய தினகரன், ‘தில்’கரனாக தன்னை நிரூபித்தார். தினகரனை மட்டும் விட்டுவிட்டு, அவரைச் சுற்றிலும் இருப்பவர்களைச் சீண்டியது ரெய்டு வியூகம். தினகரனைப் பயமுறுத்தும் தந்திரமாகவே இதைப் பார்க்கிறார்கள். 1,850 அதிகாரிகள் 187 இடங்களில் ரெய்டு நடத்திக்கொண்டிருந்தபோது, கோ பூஜையில் ஈடுபட்டிருந்தார் தினகரன். ரெய்டு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க… இன்னொரு பக்கம் கூலாக கோயில்களுக்குச் சென்று திரும்பிய தினகரனை அவரது அடையாறு வீட்டில் சந்தித்தோம். புன்னகையுடன் இயல்பாகப் பேசினார்….

‘‘இந்த ரெய்டை எதிர்பார்த்தீர்களா?’’ 

‘‘வஞ்சம் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், இந்தளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை அல்ல இது; அவர்களது வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு. எங்கள் குடும்பத்தை ஒழிக்கவேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே எண்ணம். கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமானால், எங்கள் சொந்தங்களின் வீடுகளுக்கு வந்திருக்கக் கூடாது. உண்மையிலேயே எங்களின் பவர்ஃபுல் பினாமிகள் யார் தெரியுமா? எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்தான். அவர்களின் வீடுகளில்தான் ரெய்டு நடத்தியிருக்க வேண்டும். கடந்த ஆட்சியிலும், இப்போதைய ஆட்சியிலும் அவர்கள்தானே பவர்ஃபுல்லாக இருக்கிறார்கள். இவர்களின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 31 அமைச்சர்களும் எனக்கு வேண்டியவர்கள்தான். எங்களால்தான் இவர்கள் பதவியில் அமர்ந்தார்கள். அரசாங்கத்தில் நாங்கள் ஏதாவது காரியம் சாதிக்க வேண்டுமானால், இவர்கள்தானே செய்திருக்க வேண்டும்? அப்படியானால், இவர்கள்தானே எங்களின் பினாமிகளாக இருக்க முடியும்? இந்த உண்மையான பினாமிகளை விட்டுவிட்டு, மற்றவர்களை ரெய்டு செய்வதில் என்ன நியாயம் உள்ளது?’’

‘‘பி.ஜே.பி தலைமைக்கும் சசிகலா குடும்பத்துக்குமான மோதல்தான், இந்த ரெய்டுக்கும் காரணம் என்று நினைக்கிறீர்களா?’’

‘‘தெரியவில்லை. ஆனால், குருமூர்த்தி ஆரம்பத்திலிருந்து எங்களுக்கு எதிராக எழுதிக்கொண்டிருக்கிறார். அவரைக்கூட ஒருமுறை சந்தித்தேன். அவர் நினைப்பதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்-காரராக இருக்கலாம். பி.ஜே.பி-க்கு வேண்டியவராக இருக்கலாம். அதற்காக அவர் நினைப்பதை எப்படித் தமிழ்நாட்டு மக்கள் கேட்பார்கள்? அவரது விருப்பத்துக்கு நாங்கள் எப்படிச் செயல்பட முடியும்?

கடந்த ஓராண்டுக் காலமாக கவர்னரைத் தங்கள் விருப்பத்துக்குத் தகுந்தமாதிரி பி.ஜே.பி பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை சுப்பிரமணியன் சுவாமியே சொல்லிவருகிறார். 12 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்திருந்த பன்னீர்செல்வத்துக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கத் துடித்ததும், இன்று 117 எம்.எல்.ஏ-க்கள் பலம் இல்லாத எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் தொடர வைப்பதற்கும் காரணம் பி.ஜே.பி-தான். ஆரம்பத்தில் எங்கள் பக்கம் இருந்த எம்.எல்.ஏ-க்களைப் பன்னீர் பக்கம் வரவழைக்க முயற்சி செய்தார்கள். முடியவில்லை.

இது எங்கள் கட்சிப் பிரச்னை. இதில் குருமூர்த்தி ஏன் தலையிட வேண்டும்? மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தமிழகத்திலும் ஆட்சியை அமைத்துவிட முடியுமா? அதிகாரத்தில் இருப்பதால், வருமானவரித் துறை மாதிரியான துறைகளை ஏவிவிட்டு எங்களை மாதிரி ஆட்களை மிரட்டலாம்; ரெய்டு நடத்தலாம்; கைது செய்யலாம். ஆனால், குருமூர்த்தியின் நோக்கம் தமிழகத்தில் ஒருபோதும் நிறைவேறாது. எடப்பாடியும் பன்னீரும் வேண்டுமானால் அவரைப் பார்த்து நடுங்கலாம். எனக்கென்ன பயம்? சில அமைச்சர்கள் அவரை அடிக்கடி சந்திப்பதாகத் தகவல் வருகிறது. ஏதோ திட்டம் போடுகிறார்கள். இது தெரிந்தோ  தெரியாமலோ, மத்திய அரசும் துணைபோகிறது. தமிழக மக்கள் மத்தியில் மத்திய அரசு கெட்ட பெயரை வாங்கிக்கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன். இப்போது உணர மாட்டார்கள். தேர்தலில் மக்கள் அவர்களுக்கு எதிராக வாக்களிக்கும்போது உணர்வார்கள்.’’

‘‘அரசியல்ரீதியான உள்நோக்கம்தான் இந்த ரெய்டுகளுக்குக் காரணம் என்கிறீர்களா?’’

‘‘எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சின்னம்மா தலைமையில்தான், 95 சதவிகிதத் தொண்டர்கள் இருக்கிறார்கள்; மக்களும் இருக்கிறார்கள். எங்களுடன் 18  எம்.எல்.ஏ-க்கள் இப்போது இருக்கிறார்கள். எடப்பாடி பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் 20 பேர் விரைவில் எங்கள் பக்கம் வரத் தயாராகி விட்டனர். இதைத் தெரிந்துகொண்டு எடப்பாடியும் பன்னீரும் இந்த ரெய்டை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இரண்டு மூன்று வாரங்களாகவே இதை நடத்தத் திட்டமிட்டதாகச் சொல்கிறார்கள். கறுப்புப் பண ஒழிப்பு என்பதைத் தாண்டி ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இதற்குமுன்பு, செந்தில்பாலாஜியைக் குறிவைத்து ரெய்டுகள் நடந்தன. இதற்கெல்லாம் நாங்கள் பயப்படப்போவதில்லை. என்ன, தூக்கிலா போட்டுவிடுவார்கள்? இவை எடப்பாடியையும் பன்னீரையும் காப்பாற்றுவதற்காக பி.ஜே.பி செய்யும் வேலைகள்.’’

‘‘நீங்கள் பி.ஜே.பி-யைத் தாக்கிப் பேசுவதில்லை. ஆனால், சமீபத்தில் ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில், பி.ஜே.பி-யை விமர்சித்ததுதான் ரெய்டுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறதே…?’’

‘‘ஆரம்பக் காலத்தில், அம்மா சொல்லி ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையை ஆரம்பித்தது நான்தான். ஆனால், இப்போது அந்த அலுவலகம் எங்கே இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. அவர்களுக்கு நான் ஏதும் வழிகாட்டுவதில்லை. அதில் என்ன எழுதுகிறார்கள் என்றுகூட நான் பார்ப்பதில்லை. இதுவரை எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாததால், நான் பி.ஜே.பி-யை நேரடியாகத் தாக்கிப் பேசவில்லை. ஆளும் கட்சியைச் சேர்ந்தவரும் அரசியல் பிரமுகருமான அம்பிகாபதி, ஃபாஸ்ட் ட்ராக் என்கிற கால் டாக்சி நிறுவனத்தின் உரிமையாளர். பன்னீர்செல்வத்துடன் எப்போதும் இருக்கும் அம்பிகாபதிக்குச் சொந்தமான நிறுவனத்தின் 350 கார்களை ரெய்டுக்குப் பயன்படுத்தியுள்ளார்கள். ரெய்டுக்கு முன்பு, அண்ணா சாலையில் எஸ்.ஐ.இ.டி கல்லூரி அருகே ஒரு ஹோட்டலில் சிலர் அமர்ந்து திட்டம் போட்டதாகவும் கேள்விப்படுகிறேன். எத்தனையோ டிராவல்ஸ்கள் இருக்கும்போது, ஒரே நிறுவனத்தின் 350 கார்களை வருமானவரித் துறை ஏன் வாடகைக்கு அமர்த்த வேண்டும்? இதைவைத்து நான் பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகிறேன். பி.ஜே.பி-யின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்த ரெய்டுகள்.’’

‘‘அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவைக் கைப்பற்றத்தான் ரெய்டு எனப் பேசிவருகிறார்களே?’’

‘‘அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. மருத்துவமனைப் படுக்கையில் நைட்டி உடையில் படுத்தபடி அம்மா டி.வி பார்க்கிறார்; ஜூஸ் குடிக்கிறார். இந்தமாதிரி ஒரு வீடியோவைச் சின்னம்மா எடுத்திருக்கிறார். எங்கே தேவையோ, அங்கே சில நிபந்தனைகளுடன் அதை ஒப்படைப்பேன். இதெல்லாம் ரெய்டுக்குக் காரணமில்லை. எங்களை ஒழிக்க ஏதாவது கிடைக்காதா என்ற நோக்கத்துடனே இந்த ரெய்டு நடந்தது.’’

‘‘ரெய்டின்போது என்ன நடந்தது?’’

‘‘எனது புதுச்சேரி பண்ணை வீட்டில் பாதாள அறை இருந்ததாக வதந்தி பரவியது. அந்த வீட்டில் பேஸ்மென்ட்கூடக் கிடையாது. ரெய்டுக்கு வந்தவர்கள் காலையில் சீக்கிரமாகவே முடித்துவிட்டார்கள். ஆனால், உடனே வெளியே போகாமல் இரவு 7 மணி வரை உள்ளே இருந்தார்களாம். கடைசியாக வந்த ஓர்அதிகாரி, ‘ஏதுமில்லை’ என்று சொல்லமுடியாமல், பழைய பொருள்கள் இருந்த ஓர்அறையை சீல் வைத்துவிட்டு ‘வேறு ஒரு டீம் வந்து மதிப்பீடு செய்யும்’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். ரெய்டு முடிந்த பிறகு திவாகரனிடம் பேசினேன். கல்லூரி அட்மிஷன் ஃபீஸ் விஷயமாக ஏதோ விசாரித்ததாகச் சொன்னார். டாக்டர் சிவக்குமார் ‘ஏதும் பிரச்னை இல்லை’ என்றார். வெங்கடேஷ், இரண்டு நாள் ஊரில் இல்லை. அதனால் காலதாமதம் ஆனது. அங்கும் ஏதும் பிரச்னை இல்லை. என் பிரதர் பாஸ்கரன், வீட்டிலிருந்து ஏழு கிலோ தங்கத்தை அதிகாரிகள் எடுத்துப்போனதாகச் சொன்னார். ‘வீட்டில் பழைய நகைகள்தான் இருந்தன. ஆடிட்டர் மூலம் கணக்குக் காட்டி வாங்கிக்கொள்வேன்’ என்று சொன்னார். விவேக், கார்த்திகேயன், ராஜராஜனை என்னால் தொடர்புகொள்ளமுடியவில்லை. என்னைக் குறிவைப்பதற்காக மற்றவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது சரியா? என் உறவினர்கள் பல்வேறு தொழில்களில் இருப்பவர்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு எப்படித் தெரியும்? அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக வரி கட்டுகிறவர்கள். வருமானவரித் துறை ஏதாவது கேட்டால், அவர்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள்.’’

‘‘எடப்பாடி அரசை வீழ்த்த தி.மு.க-வுடன் நீங்கள் ரகசியத் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘அம்மாவின் மரணத்துக்குச் சின்னம்மாதான் காரணம் என எப்படிக் கொளுத்திப் போட்டார்களோ… அதுபோன்ற வதந்திகளில் இதுவும் ஒன்று. ரெய்டு நடந்தபோது கலைஞர் டி.வி., சன் டி.வி பார்த்திருந்தாலே புரிந்திருக்குமே? அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற கொள்கையுடன் தி.மு.க செயல்படுகிறது. ஏற்கெனவே பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்கத்தானே பார்த்தது தி.மு.க. இப்போது, ‘எடப்பாடி அரசு சரியில்லை. துரோக ஆட்சி. நீடித்தால் கட்சியே அழிந்துபோய்விடும்’ என்பதால் நாங்கள் கவர்னரிடம் எடப்பாடிக்கு எதிராக மனு கொடுத்தோம். இப்போது எங்களுடன் சேர்ந்துகொண்டு ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க நினைக்கிறது. எங்களின் நோக்கமும் தி.மு.க-வின் நோக்கமும் ஒன்றாக இருக்கிறது. மற்றபடி, மு.க.ஸ்டாலினை நான் நேரில் பார்த்தே பல வருடங்கள் ஆகின்றன. தி.மு.க-வுடன் நாங்கள் சேர்வது என்பது தற்கொலைக்குச் சமமானது. அதேபோல, எங்களுடன் ரகசியக் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கும் இல்லை.’’

‘‘பெங்களூரு சிறையில் சசிகலா எப்படி இருக்கிறார்?’’ 

‘‘நவம்பர் 8-ம் தேதிகூட சின்னம்மாவைச் சிறையில் பார்த்தேன். வெளியில் நடப்பதைத் தெரிந்துவைத்திருக்கிறார். டி.வி பார்க்கிறார். பத்திரிகைகளைப் படிக்கிறார். காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை தமிழக அரசியல் நிகழ்வுகளைக் கவனிக்கிறார். அவர் சிறைக்குப் போன ஒரே மாதத்தில், இங்கே உள்ளவர்கள் எப்படி மாறிவிட்டார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் கடிந்து பேசும் அளவுக்கு நான் நடந்துகொண்டதே இல்லை. அவர் ரொம்பவும் சாஃப்ட் டைப். என்னிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அதை நான் சரியாகச் செய்துவருகிறேன் என்றுதான் அவர் நம்புகிறார். இதுதான் நிஜம்.’’

‘‘சசிகலா பரோலில் வந்து இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது நிறைய சொத்துகள் பெயர் மாற்றம் நடந்ததாகவும், வக்கீல்கள் வந்துபோனதாகவும், அதனால்தான் சில வக்கீல்கள் வீட்டில் ரெய்டு நடந்ததாகவும் வருமானவரித் துறை தரப்பில் சொல்லப்படுகிறதே?’’

‘‘நாமக்கல் வழக்கறிஞர் செந்தில், சின்னம்மா சார்பாக வழக்குகளில் ஆஜராகிறவர். இரட்டை இலைச் சின்னம் பெறுவது தொடர்பான வழக்கையும் கவனிக்கிறார். அதுதொடர்பாக அவர் வந்துவிட்டுப் போயிருக்கலாம். வேறு யார் வந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள்.’’

‘‘இந்த ரெய்டுகளுக்கு அரசியல் நோக்கம் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், உங்கள் குடும்பத்தினரை ஊழல் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் அடுத்தடுத்து சுற்றி வருகின்றனவே?’’

‘‘எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு, அம்மாவுக்குப் பக்கபலமாக இருந்து கட்சியைக் காப்பாற்றியது எங்கள் குடும்பம்தான். அம்மாவுக்குக் காவல் அரணாக இருக்கிறோம் என்பதால்தான் இந்தப் புகார்கள், கைதுகள், சிறைச்சாலை சித்ரவதைகள் அனைத்தையும் அனுபவிக்கிறோம். நாங்கள் மிராசுதார் குடும்பம். எங்களுக்கும் பாரம்பர்யம் உண்டு. அரசியலில் நாங்கள் ஈடுபட ஆரம்பித்தபிறகுதான், இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் கிளப்பப்படுகின்றன. பழிவாங்குவதற்காகப் போடப்படும் வழக்குகள் இவை. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். வழக்குகள் யார்மீது இல்லை… அன்புமணிமீது இல்லையா… மாறன் சகோதரர்கள்மீது இல்லையா… வழக்கு இல்லாத அரசியல் தலைவர் உண்டா? வழக்குகளை வைத்து ஓர் அரசியல்வாதியின் செயல்பாட்டை எடை போட முடியாது.’’

‘‘இவ்வளவு தெளிவாகப் பேசுகிறீர்கள். ஆனால், எடப்பாடியாலும் பன்னீராலும் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறீர்களா?”

‘‘நம்பித்தான் இவர்களை அம்மாவிடம் அறிமுகம் செய்தோம். முக்கியப் பதவிகளை அம்மா தந்தார்கள். அம்மாவுக்குப் பிறகு சின்னம்மாவும் மதிப்பு கொடுத்தார். இப்போது நன்றி மறந்துவிட்டார்கள். பன்னீர்செல்வத்தை முன்பு மூன்று முறை முதலமைச்சராக்கியதும், சிறைக்குச் செல்வதற்குமுன்பு எடப்பாடியை முதலமைச்சராக்கியதும் சின்னம்மாதான். சோற்றில் உப்புப் போட்டு சாப்பிடுபவர்களாக இருந்தால் அவர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள். ‘பன்னீரை நீக்கிவிட்டு நீங்கள் முதலமைச்சர் ஆகுங்கள்’ என்று சொன்னவரே எடப்பாடிதான். ஆனால், அவரை முதல்வராக சின்னம்மா தேர்வு செய்தார். அவர்கள் இப்போது நடந்துகொள்வதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.’’

‘‘நீங்கள் அவர்கள் பக்கம் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று தம்பிதுரை சொல்லியிருக்கிறாரே?’’ 

‘‘அவர்கள்தான் எங்கள் பக்கம் வரவேண்டும்.”

 

பகிர்

There are no comments yet