மத்திய அரசு டெல்லியில் நடத்தும், சர்வதேச இந்திய உணவுத் திருவிழா 2017-இல் 800 கிலோ கிச்சடி சமைக்கப்படும் என்ற தகவல் வெளியானதும், கிச்சடி இந்தியாவின் தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியானது. இந்திய உணவு வகைகளை உலக அளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் டெல்லியில் ’கிரேட் இந்தியா ஃபுட் ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் 3 நாள்கள் உணவுத் திருவிழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 800 கிலோ கிச்சடி மக்கள் முன்னிலையில் வரும் 4-ம் தேதி தயாரிக்கப்பட்டது. 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 7 அடி விட்டம் கொண்ட மிகப்பெரிய சட்டியில் கிச்சடியை நாட்டின் புகழ்பெற்ற சமையல் கலைஞர்களுள் ஒருவரான சஞ்சீவ் கபூர் சமைத்தார். கிச்சடி தயாரிக்கப்பட்டதால் அதுவே நாட்டின் தேசிய உணவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் காட்டுத் தீபோல் பரவியது. இந்தநிலையில்,உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் விளக்கம் அளித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த்தார். அது ஒருபுறமிருக்க ரசகுல்லா, தங்களது பாரம்பர்ய உணவே என்று கடந்த 2 ஆண்டுகளாக மேற்குவங்க மாநிலத்துக்கும் ஒடிசா மாநிலத்துக்கும் நடந்த சண்டை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

பாலில் செய்யப்படும் இனிப்பு வகை உணவுப் பொருளான ரசகுல்லா, தங்கள் மாநிலத்தின் கண்டுபிடிப்பே என்று கூறி ஆண்டுதோறும் ’ரசகுல்லா திவாஸ்’ என்ற பெயரில் ஒரு நாள் கொண்டாட்டங்களை ஒடிசா மாநில அரசு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. ஒடிசாவின் பூரி நகரில் 13-ம் நூற்றாண்டிலேயே ரசகுல்லா இருந்ததாகவும், பூரி ஜெகன்னாதருக்கு, லட்சுமி தயார் ரசகுல்லா கொடுத்ததாக வரலாறு இருப்பதாகவும் ஒடிசா கூறிவந்தது. ஆனால், ரசகுல்லா தங்கள் மாநிலத்தின் உணவே என்று கூறி மேற்குவங்கம் களத்தில் இறங்கியது. ரசகுல்லாவானது திரிந்த பாலில் செய்யப்படுவது என்றும், திரிவடைந்த பாலானது சுத்தமில்லாததாக் கருதப்படும் நிலையில், அது கடவுளுக்குப் படைக்கப்பட வாய்ப்பே இல்லை என்று மேற்குவங்கம் வாதாடியது. இந்தநிலையில், மேற்குவங்க மாநிலத்துக்கு ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக மம்தா, ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருள்கள் அந்தந்த பகுதிகளுக்கே சொந்தம். தமிழகம் உட்பட, தென் மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற உணவான, இட்லி, உலகம் முழுவதும் விரும்பப்படும் உணவாக உருவெடுத்து வருகிறது. சமீபத்தில் ஐநா உலகின் சிறந்த உணவாக இட்லியை தேர்வு செய்து சான்றளித்துள்ளது. இந்த விஷயம் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் காதுக்கு எட்டியும் ஒரு அறிக்கை கூட விடவில்லை என சாப்பாட்டுராமன்கள் புலம்புகின்றன.

அதற்கு காரணம் ஜெயா மருத்துவமனையில் இருந்த காலத்தில், அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்கள். “அம்மா சரியாகிவிட்டார், அம்மா இட்லி சாப்பிட்டார்” என்று தினம் தினம் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தனர். பின்னர் நிலைமை எல்லாம் தலைகீழாக மாறி, “அம்மா இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னது எல்லாம் பொய். எங்களை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி படுத்தேவிட்டார் ஒரு அமைச்சர். வெண்மையான இட்லி அதிமுக ஆட்சியில் ஒரு கரும்புள்ளியாகவே மாறிவிட்டது. எனவே எடப்பாடியும் ஓ.பி.எஸ்சும் இணைந்து, மக்களுக்கு அதிமுக ஆட்சி கொடுத்துவரும் ‘அமைதிப்படை’ அல்வாவை பாரம்பரிய இனிப்பாகவும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கெட்ட வார்த்தைகளால் ஜூலி திட்டியும், ஒன்றும் தெரியாதவர்போல் ஓ.பி.எஸ் தின்று கொண்டிருந்ததாலும், கூவத்தூரில் சரக்குக்கு சைட் டிஷ்ஷாக உபயோகப்படுத்தியதாலும் மிக்சரை பாரம்பரிய கார உணவாகவும், அறிவிக்க உள்ளதாகவும்,நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகள் என பெயர் மாற்றி நாட்டின் குடிமக்களை மொடாக் குடியன்களாக்கும் புதியதாக திறக்கப்படும் டாஸ்மாக்குகளில் குறிப்பிட்ட தொகைக்கு சரக்கு வாங்கினால் இலவச மிக்சர் வினியோகம் செய்ய, உளுந்து, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பண்டங்களை காற்றில் பறக்க விட்ட நியாவிலைக்கடைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கப்சா செய்தியாளர் தெரிவித்தார்.

பகிர்

There are no comments yet