தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, நிர்வாக ரீதியாகப் பல்வேறு குளறுபடிகளைச் சந்தித்து வருவதாக மத்திய அரசு கருதுகிறது. கடந்த சில மாதங்களாக பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, வீட்டுவசதி வாரியத் துறை போன்ற துறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளன. மேலும் மத்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்தும் மாநில அரசுக்கு நிதி உதவிகள் வந்துகொண்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசுக்குத் தகவல்கள் சென்றுள்ளன.

ஆட்சியில், முதல்வருக்கு நெருக்கமானவர்களின் தலையீடு இருப்பதும் மத்திய அரசின் கவனத்துக்குச் சென்றுள்ளது. அமைச்சர்கள் பலர் கட்டுப்பாடுகள் அற்ற முறையில், ஏகபோகமாக நடந்துகொள்வது வெளிப்படையாகவேத் தெரிகிறது. குறிப்பாக கடந்த ஓர் ஆண்டாக தமிழகத்துக்கு என்று தனிப்பட்ட முறையில், ஆளுநர் இல்லாமல் இருந்த நிலையில் கடிவாளம் இல்லாத குதிரைபோல தமிழகத்தின் ஆட்சி நிலை இருந்து வந்ததாக மத்திய

அரசுக்கு உளவுத்துறை நோட் போட்டது. துறை ரீதியாக நடைபெற்று வரும் பணிகள் அனைத்திலும் ஊழல் மலிந்து காணப்படுவதும் ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதியினை முழுமையாக செலவு செய்யாமல், அதிலும் கமிஷன் பார்த்த விவகாரம் மத்திய அரசின் காதுகளுக்கு எட்டியுள்ளது. அதன் பிறகுதான், ‘இனியும் கால தாமதம் செய்ய வேண்டாம்’ என்று முடிவு செய்த மத்திய அரசு, ‘தமிழகத்துக்கு என்று தனி ஆளுநரை நியமிக்க வேண்டும்’ என்று உறுதியான முடிவுக்கு வந்தது. அதனால்தான் அதிரடிக்குப் பெயர்போன பன்வாரிலாலை தமிழகத்தின் ஆளுநராக நியமித்தது மத்திய அரசு. அவரும் தமிழக அரசின் ஆளுநராகப் பதவியேற்றதுமே ‘தமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வேன்’ என்று சொன்னார். அப்போதே தமிழக ஆட்சியாளர்களுக்கு கிலி உண்டானது. புதிதாக ஆளுநர் பதவியேற்கும் யாரும், ஆட்சி நிர்வாக விஷயங்களில், பெரிதாக தலையிடமாட்டார்கள். அதுகுறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க மாட்டார்கள். இப்படி இதுநாள் வரையிலும் அலங்காரப் பதவியாகவே ஆளுநர் பதவியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, புரோகித்தின் அறிவிப்பு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

 

ஆளுநராகப் பதவியேற்ற புரோகித்துக்கு, ‘தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும்’ என்ற உத்தரவுகள் எல்லாம் டெல்லியிலிருந்தே வந்துள்ளன. குறிப்பாக ‘தமிழக ஆட்சி நிர்வாகத்தினை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்’ என்ற ஆணையும் அங்கிருந்து வந்துள்ளது. கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்த திட்டங்கள் குறித்த ஃபைல்கள் அதில் நடைபெற்ற தவறுகள் எல்லாம் மத்திய அரசின் கைகளில் இருந்துள்ளன. அவற்றை ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. அதன்பிறகுதான் ஆளுநர் களத்தில் இறங்கியுள்ளார். கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு நடத்தியதன் பின்னணி இதுதான்” என்கிறார்கள் இந்த விவரமறிந்தோர்.

ஆளுநரது நடவடிக்கையின் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பதை அறிந்துதான், ‘டேக் இட் ஈசி’  என்று அமைச்சர்கள் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல் பல மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். குறிப்பாக மத்திய அரசு, ஊரக வளர்ச்சித்துறைக்கு என்று ஆண்டு தோறும் கணிசமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை தமிழக உள்ளாட்சித் துறை முழுமையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் கிளம்பியுள்ளது. இதையெல்லாம் இனிமேல் ஆளுநர் ஆய்வு மேற்கொள்வார் என்கிறார்கள். மேலும், தலைமைச் செயலகத்தில் உள்ள ஆளுநர் அறைக்கு எந்த நேரத்தில், வேண்டுமானாலும் தமிழக ஆளுநர் விஜயம் செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் வாய்ப்புள்ளதாகவும் கோட்டையில் உள்ள அதிகாரிகள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எடப்பாடி அரசுக்கு கடும் நெருக்கடியை சந்திக்கப் போவதாகவும் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுநாளான டிசம்பர் 5-ல் பரபர காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, ஓபிஎஸ் உட்பட 12 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த இரு வழக்குகளிலுமே எடப்பாடி அரசுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் என டெல்லி வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர்.

 

கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி ந

க்கம் செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை எடப்பாடி தரப்புக்கான ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர்களே கூறி வருகின்றனராம். அதேபோல் தினகரன் தரப்புக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக்சிங்வியும் நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்புதான் வரும் என தினகரனுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார்.

அத்துடன் உண்மையிலேயே கொறடா உத்தரவை மீறிய ஓபிஎஸ் உட்பட 12 எம்.எல்.ஏக்களை உடனே தகுதி நீக்கம் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக இரண்டு தீர்ப்புகள் வரும் நிலையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடியாருக்கு ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டாக வேண்டிய சூழல் வரும்.

அப்போது எடப்பாடி அரசு சட்டப்படியாகவே கவிழ்ந்துவிடும் என நம்புகிறது டெல்லி. இதற்கு முன்னோட்டமாகத்தான் தற்போதே நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதும் தலைமை செயலகத்தில் ஆளுநரின் அறைகள் தயார் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பெசன்ட்நகர் வீட்டில் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் பங்கேற்றுள்ளன

With due credits: Vikatan and OneIndia

பகிர்

There are no comments yet