சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் இன்று (17-ம் தேதி) இரவு 9 மணியளவில் இங்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் அங்கு அவர்கள் பாதுகாப்புக்காக போலீஸார் துணையுடன் உள்ளே புகுந்து சோதனையை ஆரம்பித்தனர். ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் அவரது உதவியாளர் பூங்குன்றனின் அலுவலகத்தை குறி வைத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வி.கே.சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 1400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கின. அப்போது ஜெயாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நடந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெறுகிறது.
வருமான வரித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘ஜெயலலிதாவின் இல்லத்தில் சோதனை போட நீதிமன்ற அனுமதியுடன் வந்திருப்பதாக’ கூறினர். சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு இரவில் சோதனை போடுவதாக கூறினர். அதிமுக தொண்டர்கள் போயஸ் கார்டன் இல்லம் வர ஆரம்பித்தனர். அவர்களை வீட்டின் அருகே செல்ல விடாமல் பிரதான சாலையில் போலீஸார் தடுத்தனர். போயஸ் கார்டன் இல்லத்திற்குள் சசிகலா குடும்பத்தினர் செல்வதை நிறுத்தினாலும், பல அறைகளின் சாவி இளவரசி குடும்பத்தினரிடம் இருந்தது. எனவே ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்தனர். அவர் சாவிகளுடன் வந்தார். பூங்குன்றனும் அழைத்து வரப்பட்டார். தொண்டர்கள் பெருமளவில் கூடி, வருமான வரித்துறைக்கு எதிராக கோஷமிட்டனர். தொண்டர்கள் எண்ணிக்கை அதிகமானது. போயஸ் கார்டன் ரெய்டைக் கண்டித்து கோஷம் எழுப்பிய தொண்டர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் உள்ளே நுழைய முயன்று போலீஸாருடன் மோதிக்கொண்டனர்.  போயஸ் கார்டன் இல்லத்தில் பூங்குன்றன் அறையிலும் சசிகலா அறையிலும் மட்டுமே சோதனை நடத்துவதாக தொண்டர்களிடம் போலீஸார் சமரசம் செய்தனர். ஆனால் தொண்டர்கள் அதை ஏற்காமல் மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அங்கு வந்தார். ‘ஒரு ரெய்டு நடந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டியது நடைமுறை. அந்த அடிப்படையில் யாருக்கு தகவல் கொடுத்தார்கள் என தெரியவில்லை. ஒரு வழக்கறிஞராக என்னை அனுமதிக்க கோரியிருக்கிறேன்’ என்றார்.
 
வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனையோ, அதிமுக நிர்வாகிகளையோ போயஸ் கார்டன் இல்லத்திற்குள் போலீஸார் விடவில்லை. தொண்டர்கள் சிலர் அத்துமீறி உள்ளே புக முயன்றபோது அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர். போயஸ் இல்ல சோதனையில் ஒரு லேப் டாப்பும், இரு பென் டிரைவ்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் கூறப்பட்டது.
இந்த சோதனை குறித்து தகவல் கிடைத்ததும் இரவு 10 மணிக்கு மேல் அதிமுக நிர்வாகிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்களில் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளருமான வி.பி.கலை ராஜனும் ஒருவர். அவர் அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்கப் படவில்லை அவர் கப்சா நிருபரிடம் பேசினார். “அம்மா வாழ்ந்த வீடு எங்களுக்கு கோவில் மாதிரி. அங்கு சோதனை நடத்துவது அம்மாவுக்கு இழுக்கு ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கை. ஏதோ அம்மாவே தவறு செய்தது போன்ற ஒரு தோற்றத்தை இதன் மூலமாக வருமான வரித்துறையும் மத்திய அரசும் ஏற்படுத்துகின்றன. தவறு செய்ததெல்லாம் பூசாரியாக முறைவாசல் செய்த சின்னம்மா மட்டும்தான். அம்மா ஆலயத்தில் நடைபெறும் இந்த சோதனையை மக்கள் ஏற்க மாட்டார்கள். இதனால் தமிழகம் கொந்தளிக்கும்!’ என்றார் அவர். அப்போது அங்குவந்த ஒரு டுபாக்கூர் வருமான வரி அதிகாரி, “அம்மாவின் கோவில் ஹைடிக்காக இருக்கிறது, ஒரு லேப்டாப்பும் ரெண்டு பென் டிரைவும் கைப்பற்றினோம், ஒரு செப்பு சொம்பில் மஞ்சள் துணி கட்டி வைக்கப்பட்டிருந்தது, முதலில் ஜெயா ஆவியை அடைத்து வைத்திருக்கிறார்களோ என்று சந்தேகம் இருந்தது. பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திறந்து பார்த்த்தில், ஜெயா ஆட்சி செய்த பொது மாதம் ஒரு ரூபாய் வீதம் வாங்கிய சம்பளக் காசுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அதைக் கைப்பற்றியுள்ளோம், அது மட்டுமே ஜெயாவின் சொத்து என நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, மற்ற சசிகலா குடும்பத்தினரே குற்றவாளி என்று அறிக்கை தர இருக்கிறோம்.” என்றார்.
பகிர்

There are no comments yet