ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ராணி அபாதா-77 என்ற கப்பல் அந்த பகுதியில் ரோந்து வந்தது. கடலோர காவல்படை கப்பலில் இருந்து 7 வீரர்கள் இறங்கி, ஒரு ரப்பர் படகு மூலம் அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை விரட்டியடித்ததோடு, மரிய ஜெபமாலை என்பவரது படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் படகில் இருந்த பிச்சை ஆரோக்கியதாஸ் (வயது 37), ஜான்சன் (32) ஆகிய மீனவர்கள் மீது துப்பாக்கி குண்டு உரசிச் சென்றதில் அவர்கள் காயமடைந்தனர். மேலும் படகில் இருந்த குவிட்டோ (38), சாண்ட்ரோ (38), நிசாந்த் (21), ஜாக்சன் (32) ஆகிய மீனவர்களையும், கடலோர காவல் படையினர் தாக்கி விட்டுச் சென்றனர். தாக்கப்பட்ட மீனவர்கள் நேற்று காலை ராமேசுவரம் திரும்பினர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களது வாக்குமூலத்தில், காவல் படையினர் எங்கள் படகில் இறங்கி, எங்கள் அனைவரையும் தாக்கி, தலைகீழாக நிற்க வைத்து எங்களை கொடூரமாக தாக்கினர். அப்போது எங்களை இந்தியில் பேச வேண்டும் என்றனர். தமிழில் பேசினால் அடிப்போம் என்று கூறினர்.
தமிழ் எங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இந்தியில் தான் பேச வேண்டும் என்று கூறியபடியே மீண்டும் தாக்கினர். மீனவர்களாகிய உங்களால் தான் எங்களுக்கு பிரச்சினை வருகிறது என்று கூறிய அவர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக எங்கள் 6 பேரையும் தாக்கி விட்டு ரோந்து கப்பலுக்கு திரும்பிச் சென்றனர்.
மீனவர்களை பாதுகாக்க வேண்டிய கடலோர காவல்படையினரே எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இந்த சம்பவத்தில் எங்கள் படகில் இருந்த 2 பேர் பலத்த காயமடைந்தனர். மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கடலோர காவல்படையினர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வேண்டும். என்று காயமடைந்த மீனவர்கள் புகார் அளித்தனர். இது குறித்து விளக்கமளிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கப்சா செய்தியாளர்களைச் சந்தித்தார். “பாதுகாப்புத்துறையில் தனியாருடைய பங்களிப்பை வரவேற்பதாகவும், அதே சமயம் நாட்டின் பாதுகாப்புக்கு குறைபாடு வந்திடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு எல்லை வரை தனியார் பங்களிப்பை தாரை வார்த்து கபளீகரம் பண்ண அனுமதிக்க வேண்டும் என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியக் கடலோர காவல்படையால்தான் மீனவர்கள் சுடப்பட்டனரா என்பது குறித்து விசாரிப்பதாகவும், தோட்டா தங்களுடையது அல்ல என கடலோரக் காவல் படை மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இது போன்ற சட்டத்திற்கு புறம்பாக தாக்குதல் நடத்துவதற்கு காவல் துறையும் இராணுவமும் கள்ளத்துப்பாக்கி மட்டுமே பயன்படுத்துவர் என்றும் அதற்காக மீனவர்கள் தரப்பில் கோஷ்டி மோதலால் சுட்டுக் கொண்டதாக சொல்லப்படுவதையும் மறுப்பதற்கல்ல என்று கூறி துப்பாக்கியால் சுட்டது போல் முற்றுப்புள்ளி வைத்தார் அவர். வேறு ஒரு கப்சா நிருபரிடம் துப்பாக்கி சூடு நடத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திண்டுக்கல் சீனிவாசன், தமிழக மீனவர்களை இந்திய கடலோர காவல்படை சுட கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தினர் என நிர்மலா சீத்தாராமன் கூறியது சரிதான் என கூறினார். அந்த விவகாரத்தில், நிர்மலா சீத்தாராமனின் கருத்துதான், தமது கருத்து எனவும் அவர் தெரிவித்தார்.
இவர் ஏற்கனவே தமிழகத்தில் டெங்கு காய்ச்சலே கிடையாது என்று செய்தியாளர்களை காய்ச்சினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் சுடப்படவில்லை, கோஷ்டி மோதலால் ஏற்பட்ட காயம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இரப்பர் குண்டுகள் சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் காவல்துறையிடம் தான் இருக்கும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்திடம் இருக்காது. கள்ளத்துப்பாக்கி தான் இருக்கும். மேலும், மீனவர்கள் காயமடைந்தது கோஷ்டி மோதலால் தான் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
There are no comments yet
Or use one of these social networks