ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றிய கம்ப்யூட்டர்களில் ரகசிய தகவல் உள்ளதா என்று ஆய்வு

 சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசி கலாவின் உறவினர் களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
சோதனையை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணைக்காக ஆஜராகுமாறு சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் ஷகிலா மற்றும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்று ஷகிலாவும், பூங்குன்றனும் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்களிடம் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். அவர்களுடைய இல்லத்தில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பல்வேறு விதமான கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். இரவு 8 மணிக்கு மேலும் அவர்களிடம் விசாரணை நீடித்தது.

பின்னர் 9.30 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஷகிலாவையும், பூங்குன்றனையும் அங்கிருந்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர்.

போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லம் ஆக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவு பெற்று, சோதனை நடத்துவதற்காக அந்த இல்லத்துக்குள் இரவு 9.30 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர்.

சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்திருப்பதை அறிந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் அங்கு குவியத் தொடங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினகரனின் ஆதரவாளர்கள் வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகவும், தர தரவெனவும் இழுத்துச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.

போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடப்பது பற்றிய தகவல் கிடைத்ததும் ஷகிலாவின் சகோதரரும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் அங்கு விரைந்து வந்தார்.


ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அங்கு வந்தார். அவர், வீட்டுக்குள் செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.

அப்போது தீபா நிருபர்களிடம் கூறுகையில், போயஸ் கார்டன் இல்லம் தற்போது சசிகலா குடும்பத்தின் வசம்தான் இருக்கிறது என்றும், அரசு கையகப்படுத்திவிட்டதாக சொல்வது பொய் என்றும், மறைக்கப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்காகத்தான் இந்த சோதனை நடைபெறுகிறது என்றும் கூறினார்.

சசிகலா உறவினர்களின் ஒத்துழைப்புடன்தான் சோதனை நடைபெறுவதாக கூறிய அவர், ஜெயலலிதாவுக்கு அவமானத்தை உருவாக்கி, கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார் கள் என்றும் குற்றம்சாட்டினார்.

போயஸ் கார்டன் இல்ல வளாகத்தில் ஜெயலலிதா இருந்த கட்டிடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில்தான் அவருடைய உதவியாளரான பூங்குன்றன் இருந்தார். அந்த அறையில் அதிகாரிகள் சோதனை போட்டார்கள்.

இதேபோல் ஜெயலலிதா வீட்டில் சசிகலா தங்கி இருந்த அறை உள்ளிட்ட 3 அறைகளிலும் அதிகாரிகள் துருவித் துருவி சோதனை மேற்கொண்டனர்.

நள்ளிரவு 2 மணி வரை சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் போது 2 பென்டிரைவ்கள், 2 லேப்டாப்கள் ஆகியவற்றை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

பூங்குன்றன் அறையில் இருந்து, ஜெயலலிதாவுக்கு வந்திருந்த கடிதங்களும், அவர் எழுதிய கடிதங்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அது தொடர்பாக பூங்குன்றனிடம் அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி, அவர் அளித்த பதில்களை வீடியோவாகவும், எழுத்து மூலமும் பதிவு செய்து கொண்டனர்.

சோதனை முடிந்ததும் அதிகாரிகள் தாங்கள் கைப்பற்றிய பென்டிரைவ்கள், லேப்டாப்கள், கடிதங்கள் மற்றும் ஆவணங்களை அங்கிருந்து போலீசாரின் வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.

வருமான வரி சோதனை தொடர்பாக ஏற்கனவே சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள சசிகலா, பூங்குன்றன் ஆகியோரின் அறைகள் உள்ளிட்ட சில அறைகளில் இருக்கும் முக்கிய ஆவணங்களை சிலர் அங்கிருந்து ரகசியமாக எடுத்துச் செல்ல முயற்சிப்பதாக தெரிய வந்ததாகவும், மேலும் டெல்லியில் இருந்தும் சில முக்கிய தகவல்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால்தான் நேற்று முன்தினம் இரவு வருமான வரி அதிகாரிகள் அதிரடியாக போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்று சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவரது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதனால் தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட பென்டிரைவ்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ரகசிய தகவல் ஏதும் உள்ளதா? என்பதை அறிய அவற்றை தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இந்த பணி நடந்து வருகிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். மேலும், தேவைப்பட்டால் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோரிடமும் அவர்கள் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர். அதன்பின்னர், தற்போது வருமான வரி சோதனை நடந்து இருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையைத் தொடர்ந்து, போயஸ் கார்டன் பகுதியில் செல்லும் புதிய நபர்களை செல்போனில் புகைப்படம் எடுத்த பிறகே போலீஸார் அனுமதித்தனர்.   –  படம்: க.ஸ்ரீபரத்

பணப்பரிமாற்ற ஆவணங்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது. இந்த சோதனையின்போது 8 பென்-டிரைவ்கள், 2 ஹார்டுடிஸ்க் ஆதாரங்களும் சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன.

ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகங்கள் உட்பட சசிகலா, திவாகரன், தினகரன் குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜெயா டிவி நிர்வாக இயக்குநர் விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, ஜாஸ் சினிமாஸ் நிறுவன நிர்வாகிகள் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த ‘வேதா இல்லம்’ வீட்டில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சசிகலா உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியபோதே போயஸ் தோட்டத்திலும் சோதனை நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால், நடைமுறை சிக்கலால் அங்கு உடனடியாக சோதனை நடத்தவில்லை. சசிகலா குடும்பத்தினரிடம் சோதனை நடந்ததில் இருந்தே, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு எங்களின் கண்காணிப்பில்தான் இருந்தது. அந்த வீட்டுக்குள் செல்பவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தோம். அந்த வீட்டுக்குள் இருந்து எதுவும் வெளியில் எடுத்துச் செல்லப்படவில்லை என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த வீட்டில் முக்கியமான ஆவணங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தோம். ஆனால், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், இளவரசியின் மகள் ஷகிலா ஆகியோரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு போயஸ் தோட்டத்தில் எங்களுக்குத் தேவையான ஆவணங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம்.

இதையடுத்து உடனடியாக 30 அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி சோதனைக்கு தயாரானோம். ஜெயலலிதா வீடு என்பதால் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தோம். போயஸ் தோட்ட வீட்டில் ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 8 பென்-டிரைவ்கள், 2 ஹார்டுடிஸ்குகள் மற்றும் சில ஆவணங்கள் கிடைத்தன.

முக்கியமான சில நிறுவனங்களின் பணப் பரிமாற்றங்கள் குறித்த தகவல்கள் இதில் இருந்தன. யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களும் கிடைத்துள்ளன. பணப் பரிமாற்றங்கள் குறித்த முக்கிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. நாங்கள் தேடி வந்த ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தவில்லை. அந்த அறையில் முக்கிய ஆதாரங்கள் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது அதிமுகவினர் மத்தியில் மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனையைத் தொடர்ந்து அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தக்கூடும் என்பதால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போயஸ் தோட்டம் பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்

There are no comments yet