ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், அ.தி.மு.க அணிகளாகச் சிதறியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை, சசிகலா குடும்பத்தை ஒதுக்குவது என பன்னீர்செல்வத்தின் இரண்டு கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் நிறைவேற்ற, ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட்டில் ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணிகள் இணைந்தன. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்துவருகின்றனர்.

அணிகள் இணைந்தாலும், இருதரப்பினரிடையே புகைச்சல் இருந்துவருவதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் இதுகுறித்துப் பேசிய முன்னாள் அமைச்சரும் பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்தவருமான கே.பி.முனுசாமி, ’அ.தி.மு.க-வில் இருப்பது அண்ணன் – தம்பி இடையிலான பிரச்னைதான்; அது,விரைவில் பேசித் தீர்க்கப்படும்’ என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஆனால், இருவர் இடையேயும் மனக்கசப்பு இருப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ எந்தவித கருத்தும் கூறாமல் இருந்துவந்தனர்.

இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி-யும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மைத்ரேயன், அ.தி.மு.க அணிகள் இடையே சலசலப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில், ‘ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்றுள்ளன. ‘மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?’ என்று பதிவிட்டுள்ளார். மழை பாதிப்புகளைப் பார்வையிட வரும்போது, அதுகுறித்து அமைச்சர்கள் தகவல் தெரிவிப்பதில்லை என்றும் அவர் கருத்து கூறியிருந்தார்.

பகிர்